பஞ்சவன்னத் தூது
பஞ்சவன்னத் தூது என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், இணுவில் பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.[1] இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் ஆவார்.
பெயர்
தொகுஒரு பொருளையே தூதாக அனுப்புவதாகக் கொண்டு அமைவதே பெரும்பாலான தூது இலக்கியங்களின் நடைமுறை. பஞ்சவன்னத் தூது நூலில், தலைவி தலைவனிடம் தூது செல்வதற்கு ஐந்து பொருட்களை அணுகுகிறாள். இதனாலேயே இந்நூலுக்குப் "பஞ்சவன்னத் தூது" என்னும் பெயர் ஏற்பட்டது.[2]
பாட்டுடைத் தலைவன்
தொகுபாட்டுடைத் தலைவனான கைலாயநாதன், தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவனும், இணுவில் பேரூரின் ஆட்சியாளனாக இருந்தவனுமான "காலிங்கராயன்" என்பவனின் மகன் என்கிறது இந்நூல். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை அண்டி இலங்கையின் வடபகுதி பாண்டியரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இணுவிலுக்கான அவர்களின் பிரதிநிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். நல்லரசு புரிந்து வந்த அவன் ஒரு நாளில் தனது மாளிகைக்கு அயலில் இருந்த புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றானாம். அதைக் கண்ட அவனது குடிமக்கள் வருந்தித் துதித்தபோது. கைலாயநாதன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்து மீண்டான் என்பது கதை. மக்களும் அவனுக்குக் கோயில் அமைத்து இளந்தாரி என்னும் பெயரால் வழிபட்டு வந்தனர். இந்த வழிபாடு இப்போதும் இப் பகுதியில் நிலவிவருகின்றது.
கைலாயநாதன் வீதி உலா வரும்போது அவனைக் கண்ட சந்திரமோகினி என்பவள் அவன் மீது காதலுற்று வெண்ணிலா, தென்றல், கிளி, அன்னம் ஆகியவற்றைத் தூதனுப்ப முயல்கிறாள். பின்னர் தனது தோழியைத் தூதாக அனுப்புகிறாள். தோழி சந்திரமோகினியின் நிலைமையைக் கைலாயநாதனுக்கு உரைத்து அவனது சம்மதம் பெறுவதே நூற்பொருளாக உள்ளது.
நூல் அமைப்பு
தொகுபஞ்சவன்னத் தூது நூலில், வெவ்வேறு நீளங்களில் அமைந்த 44 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முதல் எட்டுப் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. இறுதியில் 11 பாடல்கள் இளந்தாரி துதியாகவும், தொடர்ந்து வரும் இரண்டு பாடல்கள் வாழ்த்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. 9 ஆம் பாடல் முதல் 31 ஆம் பாடல் வரையிலான 23 பாடல்களே தூது நூல் வகையுள் அடங்குவன.
கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இணுவிலில் கோயில் கொண்டிருக்கும் கடவுளரைத் துதித்துப் பாடியவை. இக்கடவுளர், பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியர், வைரவர், பத்திரகாளி என்போர். இவர்களுடன் இளந்தாரிக்கும் துதிப் பாடல் ஒன்று உள்ளது. பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மன் ஆகிய கடவுளரின் துணை வேண்டி இரண்டு காப்புப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
நூலில் பின்வரும் தலைப்புக்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன:
- கட்டியக்காரன் தோற்றம்
- கட்டியங் கூறுதல்
- இளந்தாரி திருவீதி உலா வருதல்
- கைலாயநாதனின் உலாக்காணச் சந்திரமோகினி வருதல்
- சந்திரமோகினி ஆற்றாமையுறல்
- சந்திரமோகினி காமவேளுக்கு முறையிடல்
- வெண்ணிலாவுக்கு முறையிடல்
- தென்றலைத் தூதாக வேண்டல்
- கிளிக்கு முறையிடலும் தூது வேண்டலும்
- அன்னத்தைத் தூதாக விடுத்தல்
- சந்திரமோகினியைத் தோழி உற்றது வினாதல்
- சந்திரமோகினி தோழிக்கு உற்றது உரைத்தல்
- சந்திரமோகினி தோழியைத் தூதாக வேண்டல்
- கைலாயநாதன் முன் தோழி கூறுதல்
- கைலாயநாதனிடம் தோழி சந்திரமோகினியின் குறை நேர்தல்
- இளந்தாரி அருள் புரிந்ததைத் தோழி சந்திரமோகினிக்குத் தெரிவித்தல்
பொதுவான தூது நூல்களில் இருப்பதைப் போலன்றி இந்நூலில் பல பாடல்கள் இசையுடன் பாடத் தக்கனவாக உள்ளன. இப் பாடல்களுக்கு இராகங்களும், தாளங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், நூல் கட்டியக்காரன் தோற்றத்தோடு தொடங்குவதால் இது நாடகப் பாங்கு கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இதனால், இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் இந்நூலில் உள்ளன.
இளந்தாரி வழிபாடும் பஞ்சவன்னத் தூதும்
தொகுஇணுவிலில் இளந்தாரி வழிபாட்டில் பஞ்சவன்னத் தூது முக்கியமான இடம் பெறுகிறது. இளந்தாரி வழிபாட்டில் சித்திரைப் புத்தாண்டை அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை பொங்கல் பொங்கி மடை வைத்துச் சிறப்பாக வழிபடுவர். இரவில் பஞ்சவன்னத் தூது நூல் படித்தல் இடம்பெறும். இது இத் திருவிழாவின் முக்கியமான ஒரு நிகழ்வாக விளங்குகிறது. இதை மக்கள் கூடியிருந்து கேட்பர். சிறப்புப் பூசை நிகழ்த்தி, சடங்கு முறையாகப் படிப்பைப் பூசகர் தொடங்கி வைப்பார். முற்காலத்தில் படிப்பதற்காகப் பஞ்சவன்னத் தூது நூல் பனையோலை ஏட்டில் எழுதிக் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அக்காலத்தில், கோயிலில் படிப்பதற்கான நூல்களை வீட்டில் வைத்துப் படிக்கலாகாது என நம்பினர். இதனால், எவரும் இதைப் படியெடுத்து வீட்டில் வைத்திருக்கும் வழக்கம் இருக்கவில்லை. இப் படிப்பின்போது பாடல்கள் இராகம், தாளத்தோடு இசைக் கருவிகளும் முழங்கப் பாடப்படுவதால் அடியார்களின் ஆட்டமும் இடம்பெறுவது உண்டு.
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- கந்தசுவாமி, க. இ. க. (பதிப்பாசிரியர்), இணுவை சின்னத்தம்பிப் புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1998.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பஞ்சவன்னத் தூது பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம்