இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள்

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது.

பெங்களூரில் தட்டுகளை அடுக்கும் ஒரு சிறுவன்

2001-ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5-14 வயது குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, 12.6 மில்லியன் இருக்க வேண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.[1] குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; உலக அளவில், 215 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கின்றனர், பலர் முழுநேரமும்.

2001-ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர்.[2] பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்குக் கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 60 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் [3] என்று மதிப்பிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 70 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. விவசாயம் தவிர, குழந்தைத் தொழிலாளர் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து முறைசாரா துறைகளிலும் காணப்படுகின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 24-ஆம் உறுப்புரை குழந்தை தொழிலாளர் நடைமுறையைத் தடை செய்கிறது. மேலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குழந்தைகள் சட்டம்-2000 மற்றும் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழிப்பு) சட்டம்-1986, குழந்தை தொழிலாளர் நடைமுறையை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க மற்றும் தடுக்க சட்ட அடிப்படையை வழங்குகின்றனர்.[4]

உலகின் பிற பகுதிகளில் மற்றும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள், உலக வங்கி தரவுப்படி, சிவப்பு வண்ண நாடுகளில் (30-40%) மற்றும் கருப்பு (> 40%) இணைந்து, இந்தியா 10-20% அளவில் பச்சை நிறத்தில் இருக்கிறது.

குழந்தைகள் வரையறை

தொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 24-ன் படி பதினான்கு வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளே. குழந்தைத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம் 1986-இன்படியும் பதினான்கு வயதிற்குட்பட்டவர்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமை சாசனப் பிரிவு-1 பதினெட்டு வயதிற்குட்பட்டவர்களை குழந்தைகள் என்று வகைப்படுத்துகிறது.[5]

கைதின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

தொகு

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களை 3 ஆண்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பில் வைக்கவேண்டும், அதாவது 3 ஆண்டுகள் தண்டனை என்று இருந்தது. ஆனால் டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் இந்த சட்டத்தை திருத்தம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதோடு அவர்களைக் கைது செய்யும் போது காவலர்கள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய அம்சம்பற்றி டெல்லி இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. அதன்படி சிறாரைக் கைது செய்யும்போது சிறையில் அடைக்கக்கூடாது, கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லக்கூடாது, காவல் நிலைய அறையிலோ, சிறையின் அறையிலோ அடைக்கக்கூடாது, தாமதமின்றி குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரணை நடத்த நன்னடத்தை அதிகாரியிடம் தகவல் கொடுக்கவேண்டும், மேலும் சிறாரின் தந்தை அல்லது பாதுகாவலரிடம் உடனே தெரிவிக்க வேன்டும் என்பன இந்த ஷரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[6]

குழந்தைத் தொழிலாளர்கள் வரையறை

தொகு

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ)படி, அவர்களுடைய சுகாதார மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்காத அல்லது தங்கள் கல்வியில் தலையிடாத வேலையில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், குழந்தை தொழிலாளர் அல்ல; மாறாக அது பொதுவாக நேர்மறையான ஒன்றாக கருதப்படுகிறது. அத்தகைய பாதிப்பில்லாத வேலை, வீட்டில் பெற்றோருக்கு உதவுதல், குடும்ப உதவி அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே மற்றும் விடுமுறையில் கைப்பணம் ஈட்டுவது உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் திறமை மற்றும் அனுபவம் பெற்று அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாக தயார்படுத்தி கொள்ள உதவும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தைகளின் குழந்தைப் பருவம், அவர்களின் திறனை, கண்ணியத்தை பறிக்கும் வேலை, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தடையாக உள்ள வேலையில் ஈடுபடுவதை குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது. மன, உடல், சமூக ரீதியில் அல்லது நெறிமுறையில் ஆபத்தான மற்றும் பள்ளி செல்ல தடையாக உள்ள, அல்லது பள்ளியில் தங்கள் திறனை பாதிக்கின்ற வேலையை அது குறிக்கிறது.

யுனிசெப் குழந்தை தொழிலாளரை வித்தியாசமாக வரையறுக்கிறது. 5 முதல் 11 ஆண்டுகள் வயது வரை உள்ள குழந்தை, ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது 28 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை, 12 முதல் 14 ஆண்டுகள் வயதில் குறைந்தது 14 மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது வாரத்திற்கு 42 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை செய்தால் குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-2001 அலுவலகம் 17 ஆண்டுகள் குறைவான வயதுடைய ஒரு குழந்தை பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் இழப்பீடு, ஊதியம் அல்லது இலாப பங்கு இருந்து அல்லது இல்லாமல் பங்கேற்றால் குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கிறது. இத்தகைய பங்கு உடல் அல்லது மன அளவில் இருக்கலாம். இந்திய அரசாங்கம் இரண்டு குழுக்களாக குழந்தை தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது: முதன்மைத் தொழிலாளர்கள் வருடத்திற்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர் ஆவர் மற்றும் குறு குழந்தைத் தொழிலாளர்கள் ஆண்டில் எந்த நேரத்திலும் ஆனால் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு வேலை செய்பவர் ஆவர்.

சில குழந்தை உரிமை ஆர்வலர்கள் பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் மறைமுகக் குழந்தைத் தொழிலாளி என வாதிடுகின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பள்ளிகள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பெறும் அளவில் காணப்படுகிறது. ஐந்தில் ஒரு பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள்

தொகு
 
1986 குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் பிரிவு 12-இன்படி பல தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான இடங்களில் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில், 'குழந்தைத் தொழிலாளர் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற வாசகம் முக்கியமான இடத்தில் வைக்க வேண்டியதுள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் வைக்கப்பட்ட அடையாளம் மேலே.

காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியா பல அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள் எந்த தொழிற்சாலை அல்லது சுரங்கம் அல்லது வேறு அபாயகரமான வேலையில் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது (பிரிவு 24). இந்திய அரசியலமைப்பு, 1960க்குள், ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது (கட்டுரை 21-A மற்றும் கட்டுரை 45)[4][7].

இந்திய அரசாங்கம் கூட்டாட்சி வடிவம் கொண்டது. குழந்தை தொழிலாளர் பற்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்ற முடியும். முக்கிய தேசிய சட்ட மேம்பாடுகள் பின்வருமாறு:[8]

1948 தொழிற்சாலைகள் சட்டம்: எந்த தொழிற்சாலையிலும் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 15-18 வயதுள்ளவர்கள் எந்த தொழிற்சாலையில், எவ்வளவு நேரம், எப்பொழுது வேலையில் ஈடுபடுத்தப்படலாம் என விதிகள் விதிக்கிறது.

1952 சுரங்கச் சட்டம்: இந்த சட்டம் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை சுரங்கத்தில் வேலையில் அமர்த்த தடை செய்கிறது.

1986 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, தீங்கு விளைவிக்கும் வேலைகள் என பட்டியலில் உள்ள தொழில்களில் ஈடுபடுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. 2006 மற்றும் 2008-இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

குழந்தைகள் இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2000 சட்டம்: இந்த சட்டம் எந்த ஒரு அபாயகரமான வேலையில் அல்லது அடிமைத்தனமாக குழந்தையை வேலைக்கு அமர்த்துவது சிறை தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009: இந்த சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலுள்ள இடங்களில் 25 சதவீதம் பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் மற்றும் உடல் சவால் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தியா 1987-இல் குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கையை உருவாக்கியது. இந்த கொள்கை, தீங்கு விளைவிக்கும் தொழில்களில் ஈடுப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான, படிப்படியான மற்றும் தொடர்நிலை அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது. சட்டங்களின் கடுமையான அமலாக்கல் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் குழந்தை தொழிலாளர் பிரச்சினைக்கான மூல காரணங்களான வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு திட்டம் தீட்டியது. இது 1988 ஆம் ஆண்டில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP) உருவாகுவதற்கு வழிவகுத்தது. தற்போது மத்திய அரசு 602 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த சட்ட மற்றும் மேம்பாட்டு முயற்சி தொடர்கிறது. இருந்த போதிலும், குழந்தை தொழிலாளர் என்பது இந்தியாவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது.

காரணிகள்

தொகு
 
1916-இல் காலனித்துவ இந்தியாவில் எண்ணெய் செக்கில் வேலை செய்துகொண்டிருக்கும் குழந்தைகள்.

மனித வரலாற்றில் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில், 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குடும்ப நலனுக்காக பல்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர். யுனிசெப் வறுமை குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கிறது. இந்த அறிக்கை, உலகின் வளரும் மற்றும் முழு வளர்ச்சி அடையாத நாடுகளில், கிராமப்புற மற்றும் வறுமை சூழ்ந்த பகுதிகளில், குழந்தைகளுக்கு மாற்று வழி இல்லை என குறிப்பிடுகிறது. பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், குழந்தை தொழிலாளர் முறை ஒன்றே வழி. ஒரு பிபிசி அறிக்கை, இதேபோல், வறுமை மற்றும் போதிய பொது கல்வி உள்கட்டமைப்பு இல்லாத நிலையே இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கான காரணங்கள் என குறிப்பிடுகிறது.

யூனிசெப் தனது அறிக்கையில், சிறுவர்களை விட சிறுமிகள் இரண்டு மடங்கு அதிகமாக பள்ளியில் இருந்து விலகி வீட்டு வேலை செய்வதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் சேர்க்கும்பொழுது, குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர், தங்களின் சக்திக்கேற்ப செலவுகள் மற்றும் கட்டணங்கள் கொண்ட ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்கு குறைந்த முன்னுரிமை தரப்படுகிறது. சிறுமிகள் பள்ளிகளில் துன்புறுத்த மற்றும் தொல்லைக்குட்படுத்தப்படுகின்றனர். தரக்குறைவான பாடத்திட்டம் அல்லது பாரபட்சம் காட்டுவதன் மூலம் ஓரங்கட்டப்படுகின்றனர். முற்றிலும் அவர்களின் பாலினம் காரணமாக, பல சிறுமிகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் அல்லது இடைநிற்றல் காரணமாக குழந்தை தொழிலாளராக ஆக்கப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வறுமையே குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக பெரிய காரணம் என கூறுகிறது. ஒரு குழந்தையின் வருமானம் அதன் வாழ்விற்கு அல்லது வீட்டு தேவைக்கு மிக முக்கியமான ஒன்று. சில குடும்பங்களில், குழந்தை தொழிலாளர் வருமானம் வீட்டு வருமானத்தில் 25 முதல் 40 சதவீதம் வரை உள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2008ல் நடத்திய ஆய்வின்படி, பள்ளிகள் இல்லாமை மற்றும் தரம் குறைந்த பள்ளிகள் குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. பல சமூகங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் போதுமான பள்ளி வசதிகள் இல்லை. சில நேரங்களில் பள்ளிகூட வசதி இருந்த போதிலும், அவைகள் மிக தொலைவிலும், சென்றடைய கடினமானதாகவும், கட்டணம் மிக அதிகமாக அல்லது கல்வி தரம் மிகவும் குறைந்ததாக உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்த்து கற்பிப்பது எந்த அளவில் பயனளிக்கும் என வியக்கின்றனர். அரசு நடத்தும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் சேர்ந்தாலும், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் 75% நேரம் கூட பள்ளிக்கு வருவதில்லை.[9][10][11] யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் 90% குழந்தை தொழிலாளர் அதன் கிராமப்புற பகுதிகளில் இருந்தபோதிலும், அங்கு பள்ளிகளும் அவற்றின் தரமும் வலுவற்ற நிலையில் உள்ளன; இந்திய கிராமப்புற பகுதிகளில், அரசாங்கப் பள்ளிகளுக்கு சுமார் 50% கட்டிடம் இல்லை, 40% பள்ளிகளுக்கு கரும்பலகை இல்லை, புத்தகங்கள் சில பள்ளிகளிலேயே உள்ளன. அரசின் நிதியில் 97%, ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்பளமாக செலவாகிறது.[12] 2012 வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையின்படி இந்தியாவில் 6-14 வயது குழந்தைகளில் 96% பள்ளியில் சேர்ந்த போதிலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது- 81,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு கரும்பலகை கூட இல்லை மற்றும் சுமார் 42,000 அரசு பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இயங்குகின்றன.[10][13]

பிக்கரி (Biggeri) மற்றும் மெஹ்ரோத்ரா (Mehrotra) குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருளாதார காரணிகள் பற்றி படித்தார். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட ஐந்து ஆசிய நாடுகளில் தங்கள் ஆய்வை கவனம் செலுத்தினர். அவர்கள் குழந்தை தொழிலாளர் ஐந்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றும், ஆனால் அது ஒரு புதிய பிரச்சினை அல்ல என்றும் கண்டனர். மனித வரலாற்றில் பொருளாதார காரணங்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவித்துள்ளன. அவர்கள் குழந்தை தொழிலாளருக்கான காரணங்கள் தேவை மற்றும் வழங்கலின்படி இருக்கும் என கண்டனர். வறுமை மற்றும் நல்ல பள்ளிகள் கிடைக்கப்பெறாததும் குழந்தை தொழிலாளர்களின் தேவையின் பக்க காரணங்களை விளக்குகின்றன. அதிக வருமானம் தரும் முறைசார்ந்த பொருளாதாரத்தை விட குறைந்த வருமானம் தரும் முறைசாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவையின் பக்கத்தை விளக்குவதாக கூறினர். இந்தியாவில் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பல விதிமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வளர்ச்சியை தடுக்கின்றன. எதிர்பாராத விளைவாக இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டங்களினால் வேலைகள் முறைசாரா துறைக்கு மாற்றம் பெற்றுவிட்டன. இதன் விளைவாக, விவசாய துறைக்கு பின்னர் முறைசாரா வர்த்தகம் மற்றும் முறைசாரா சில்லறை வேலை ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கு சொந்தமான முறைசாரா துறைகளில், குறைந்த சம்பளத்திற்காகவும், வேலையை விட்டு நீக்குவது எளிது என்ற காரணத்தினாலும் குழந்தை தொழிலாளர் நடைமுறைபடுத்தப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பள்ளிநேரம் முடிந்த பிறகு குடும்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் பொருளாதார வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பிக்கரி மற்றும் மெஹ்ரோத்ரா கண்டறிந்துள்ளனர். மற்ற அறிஞர்கள் கூட நெளிவுதன்மையற்ற இந்திய தொழிலாளர் சந்தையின் கட்டமைப்பு, முறைசாரா பொருளாதாரத்தின் அளவு, தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மை மற்றும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் இல்லாமை ஆகியவை குழந்தை தொழிலாளர் முறையை ஏற்றுக்கொண்டமைக்கும் தேவையை பாதிக்கும் முக்கிய பொருளாதார காரணிகளாகவும் கூறுகின்றனர்.

சிக்னோ (Cigno) மற்றும் பலர், அரசாங்கம் நிலம் மறுபகிர்வு திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக சிறிய அளவில் நிலங்களை கொடுத்தப்பொழுது, திட்டமிடப்படாத விளைவாக குழந்தை தொழிலாளர் முறையை அதிகரித்ததாக கூறுகின்றனர். சிறிய துண்டான நிலங்களில் விலையுயர்ந்த விவசாய உபகரணங்கள் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றில் உற்பத்தியைக் கூட்ட அதிக வேலையாட்கள் தேவைப்பட்டனர். இதில் குழந்தை தொழிலாளர்களும் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவில் பிணைக் குழந்தைத் தொழிலாளர்

தொகு

ஸ்ரீவத்சவா அவர்கள் பிணைக்குழந்தைத் தொழிலாளர் முறையை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். இந்த முறையில் குழந்தை அல்லது அதன் பெற்றோர் எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான ஒப்பந்தம் மூலம் கடன் கொடுத்தவர்க்கு கட்டாயமாக வேலை செய்ய நேரிடுகிறது. கடனைத் திரும்ப செலுத்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். ஸ்ரீவத்சவா, இந்த முறை இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் போது தோன்றியதாக கூறுகிறார். இந்தியாவில் கடன் அடிமைத்தனம், நம்பகமான குறைவூதிய தொழிலாளர் பெற ஒரு வழிமுறையாக, காலனித்துவ காலத்தில் தோன்றியதாக ஸ்ரீவத்சவா கூறுகிறார். இது பிராந்திய மொழிகளில் ஹாலி (Hali) அல்லது ஹல்வஹா (Halwaha) அல்லது ஜூரா (Jeura) என அழைக்கப்பட்டது; காலனித்துவ நிர்வாகத்தால் ஒப்பந்த தொழிலாளர் முறை என அழைக்கப்பட்டது. இதில் பிணைக்குழந்தை தொழிலாளர் முறையும் அடங்கியது. காலப்போக்கில், இந்த நீண்ட கால பாரம்பரிய உறவுகள் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

1976-ஆம் ஆண்டில், குழந்தைகள் உட்பட யாரையும் யாரும் கொத்தடிமையாக பயன்படுத்தக்கூடாது என இந்தியா தடை சட்டத்தை இயற்றியது. தற்போதும் பிணைக்குழந்தை தொழிலாளர் முறை வழக்கத்திலிருப்பதைச் சான்றுகள் உரைக்கின்றன. 1996-இல் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சிறப்பு அறிக்கையில், தமிழகத்தில் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 53 குழந்தை தொழிலாளிகளை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தை அல்லது அதன் பெற்றோர் முன்பணமாக ரூ. 10,000 முதல் 25,000 வரை பெற்றிருந்தனர். நாளுக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்தும் 2 அல்லது 3 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக பெற்றனர்.[14] சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, கொத்தடிமை குழந்தை தொழிலாளர் அளவை தீர்மானிப்பது கடினம் என தெரிவிக்கிறது, ஆனால் பல்வேறு சமூக ஆர்வலர் குழுக்களின் மதிப்பீடுகள் 2001-இல், 3,50,000 வரை இருக்கலாம் எனக் கூறுகின்றன.[15]

பிணைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976-இல் இந்தியாவில் இயற்றிய பின்னரும் அதன்கீழ் வழக்கு தொடரப்படுவதில்லை. ஒரு அறிக்கை, ஒரு குழந்தைக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டால் குறைந்தபட்ச கூலிச் சட்டம் (1948) மற்றும் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம் (1986) கீழ் மட்டுமல்லாமல் பிணைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது பற்றி வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் இல்லை என தெரிவிக்கிறது. சில அமலாக்க நடவடிக்கைகள் திட்டமிடப்படாத சில விளைவுகளை புரிந்துள்ளன. தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் வேலை செய்வது சமூக கண்காணிப்பு குழுக்களின் நடவடிக்கைகளால் குறைந்துள்ள போதும், வறுமையால் தற்போதும் ஏழைக்குடும்பத்திலுள்ள குழந்தைகள் வேலை செய்வதை ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற்சாலைகள் தேவைப்படுவோர்க்கு பணம் கொடுத்து அவர்கள் வீட்டில் ஒரு தறியை நிறுவுகிறது. பிறகு அவர் குடும்பத்தினரும், குழந்தைகளும் வீட்டிலேயே வேலையை முடித்து, உற்பத்தியான பொருட்களை தொழிற்சாலையில் கொடுத்து வட்டியை செலுத்தி சிறிது ஊதியமும் பெறுகின்றனர். இவ்வாறு பிணைத்தொழிலாளர் முறை சிறிய நகர தொழிற்சாலைகளிலிருந்து கிராமப்புற வீடுகளுக்கு மாறி வருகிறது.

குழந்தைத் தொழிலாளர் விளைவுகள்

தொகு
 
கொல்கத்தாவில் ஒரு இளம் பழ வியாபாரி

குழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது பொருளாதார நலன் அடிப்படையில் ஒரு கடுமையான பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலை செல்லும் குழந்தைகளால் தேவையான கல்வி பெற முடியவில்லை. அவர்கள் உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக, அறிவு சார்ந்த, உடல்ரீதியான வளர்ச்சி பெற வாய்ப்பு கிடைப்பது இல்லை. அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் குழந்தைகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. வேலை செல்லும் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருப்பது, அவர்கள் திறமையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்கும் அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதற்கு, படித்த மற்றும் முக்கிய அடிப்படை தொழில் திறமைகளை கொண்ட பணியாளர்கள் தேவை. இன்றைய இளம் தொழிலாளர்கள், நாளைய இந்தியாவின் மனித மூலதனமாவர்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பெரும்பாலும்(70%) விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பிறர், முறையான படிப்போ பயிற்சியோ தேவையில்லாத, திறன் குறைவான மற்றும் வேலை அதிகமுள்ள நெசவு, வீட்டு வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, குழந்தைகளை வேலைக்கு பதிலாக பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் வளரும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார நலன்கள் உள்ளன. கல்வி இல்லாமல், அவர்கள் வறுமையிலிருந்து வெளிவர அதிக ஊதியம் தரும் வேலையில் சேர தேவையான ஆங்கில அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பெற முடியாது.

வைரத் தொழில்

தொகு

1997 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக வைர தொழிலாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் முறை தாராளமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. 1997-இல் சர்வதேச தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (ICFTU) தனிப்பட்ட ஒரு அறிக்கையில் இந்திய வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் தொடர்ந்து தாராளமாக ஈடுபடுத்தப்படுவதை கண்டறிந்தது.[16] ஆயினும் அனைவரும் இதற்கு உடன்படவில்லை. தென் குஜராத் வைரத் தொழிலாளர் சங்கம் என்ற மற்றொரு தொழிற்சங்கம், குழந்தை தொழிலாளர் இருப்பதை ஒப்புக்கொண்டபோதும், அவர்கள் 1%-க்கும் குறைவாகவும் உள்ளூர் தொழில் நெறிகளுக்கு எதிராக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் எனக் கூறியது.

சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் 1997 அறிக்கையின்படி, ஆண்டுதோறும் உலகின் 70%(எடைப்படி) வைரங்கள் இந்தியாவில் பட்டை தீட்டப்படுகின்றன. அத்துடன், உலகிற்கு 95% மரகதம், 85% மாணிக்கம்,65% நீலக்கல் ஆகியவற்றை இந்தியா அளிக்கிறது. இந்தியாவில் இந்த கற்கள் பாரம்பரிய உழைப்பு செறிந்த முறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. சுமார் 1.5 மில்லியன் மக்கள் இத்தொழிலில் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் உள்ளனர். இத்தொழில் சிறு அலகுகளாக பிரிந்துள்ளது. ஒவ்வொரு அலகிலும் சொற்ப ஊழியர்களே பணிபுரிகின்றனர். இந்த துறை வளர்ச்சி அடையாமலும் ஒழுங்குபடுத்தப்படாமலும் பெரும் உற்பத்தியாளர்கள் இல்லாமலும் உள்ளது. இந்த ஏற்பாடு இந்தியாவில் உள்ள சிக்கலான தொழிற் சட்டங்களை தவிர்ப்பதற்காகவே என சர்வதேச தொழிலாளர் அறிக்கை தெரிவிக்கிறது. ஏற்றுமதி ஒப்பந்தம் பல்வேறாக பிரிக்கப்படுகிறது. வேலை பல இடைத்தரகர்கள் மூலம் துணை ஒப்பந்தங்களாக செய்யப்படுகிறது. இந்த சூழலில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, இந்திய வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளரின் சரியான எண்ணிக்கை தெரிந்துக்கொள்ள இயலாது என கூறுகிறது;1997ல் மொத்தமுள்ள 1.5 மில்லியன் தொழிலாளர்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 20,000(நூற்றில் ஒருவர்) இருக்கலாம் என கணித்துள்ளனர். கல்வி மிகவும் செலவானதாகவும் அதன் தரம் மதிப்பினை தராததாலும் பெற்றோரே குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். வளர்ந்த பின்னர் அவ்ர்கள் வைர மற்றும் மாணிக்கம் துறையில் திறமைக்கேற்ப சம்பளம் பெறுகின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை கூறுகிறது.

2005-இல் 21 வெவ்வேறு இடங்களில் 663 உற்பத்தி கூடங்களில் நடைபெற்ற ஆய்வின்படி இந்தியாவின் வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளர் 0.31% ஆக குறைந்திருப்பதை கண்டனர்.[17][18][19]

பட்டாசு உற்பத்தி

தொகு

தென் இந்தியாவில் உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 2011-இல், சிவகாசியில் 9,500க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இந்தியாவின் 100% பட்டாசு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் சுமாராக ஒன்றுக்கு 15 ஊழியர்கள் வீதம் 150,000 பேர் வேலை செய்கின்றனர். இவைகளில் பெரும்பாலானவை முறைசாரா துறையில் உள்ளவை. மிக சில நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டவையாக உள்ளன.

1989-இல், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக உள்ளதாகவும் அவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படுவதாகவும் ராஜூ என்பவரின் அறிக்கை கூறுகிறது. சிறிய குடிசைகளில் செயல்படும் முறைசாரா துறையில் இயங்கும் இத்தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். 4 நிறுவனங்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டு முறைசார்ந்த துறையில் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்டுள்ளன; இவைகளில் குழந்தைகள் வேலைக்கு ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் அங்கு சிறந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வளங்கள் இருந்தன. சிறிய மற்றும் முறைசாரா துறையில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் சோர்வான நிலைகளால் பாதிக்கப்பட்டனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2002 அறிக்கையின்படி தமிழகத்தின் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் ஊதுபத்தி தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். எனினும் அவர்கள் முறை சார்ந்த ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வதில்லை. உள்நாட்டு சந்தைக்கான பட்டாசு, தீப்பெட்டி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி இந்த பொருட்களின் தேவை வளர்ந்துள்ள போதிலும் முறைசார்ந்த மற்றும் பெருநிறுவனங்கள் வளர்ச்சி அடையாத காரணத்தினால் குடிசை தொழிலின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை தொழிலாளரின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கும் சவாலானவை என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

பட்டு உற்பத்தி

தொகு

மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, சுமார் ஐந்து வயதுடைய இளம் சிறார்கள் பட்டு துறையில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் வாரத்திற்கு ஆறு முதல் ஏழு நாட்கள் வரை வேலை பார்க்கின்றனர் என தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிணைத்தொழிலாளர்கள். இந்திய அரசு குழந்தை தொழிலாளர்கள் இல்லையென மறுத்தாலும் இவர்களை கர்நாடகம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் காண இயலும். இவர்கள் பட்டுப்பூச்சியின் கூடுகளை சூடான நீரில் அழுத்தியவாறு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.[20]

2010-இல் ஜெர்மானிய செய்திப்புலனாய்வு அறிக்கை, 1998-இல் கர்நாடக மாநிலத்தில் சுமார் 1000 பட்டு தொழிற்சாலைகளில் 10000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலை பார்ப்பதை அரசு சாரா நிறுவனங்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கிறது. 1994-இல் மற்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பிணைக் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் இன்று, யூனிசெப் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளதாகவும், மீட்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.[21]

வீட்டுத்தொழிலாளர்கள்

தொகு

அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் வீடுகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 லட்சம் என கூறுகின்றன. தொண்டு நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 2 கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகின்றன. 10 அக்டோபர் 2006-இல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை விரிவு செய்து வீடுகள், உணவகங்கள், சாலையோர தாபாக்களில் வேலைக்கு அமர்த்தத் தடை செய்தது.

குழந்தைத்தொழிலாளரை ஒழிக்க முயற்சிகள்

தொகு

1979-இல் இந்திய அரசு குழந்தைத்தொழிலாளர் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிய குருபதஸ்வாமி குழுவை அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி 1986-இல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. 1987-இல் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழில்களில் ஈடுப்பட்டுள்ள குழந்தைகளின் மறுவாழ்விற்காக ஒரு தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. 1988-இல் இருந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சுமார் 100 தொழில் சார்ந்த திட்டங்கள் மூலம் செயலாற்றுகிறது.

தொண்டு நிறுவனங்கள்

தொகு

பச்பன் பச்சாவோ ஆந்தோலன், கேர் இந்தியா, குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள், குழந்தை தொழிலாளருக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பு போன்ற தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகின்றன.

பிரதம் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம். 1994ல் 'ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளியில் கல்வி' என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குழந்தை தொழிலாளரை குறைத்திடவும், அவர்களின் பாலினம், மதம் மற்றும் சமூகப்பின்னணி பாராமல் அவர்களுக்கு பள்ளிக்கல்வி வழங்க உறுதி கொண்டுள்ளது. 2005-இல் பிரதம் சுமார் 500 குழந்தை தொழிலாளர்களை மீட்க காவல்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியது.[22]

குறிப்புகள்

தொகு
  1. "National Child Labour project". Ministry of Labour and Employment, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2011-09-12.
  2. "Children and Work" (PDF). Census 2001 & Ministry of Labor and Employment, Government of India. 2008. p. 92.
  3. "Facts on Child Labor - 2010" (PDF). ILO, Geneva. 2011.
  4. 4.0 4.1 "National Legislation and Policies Against Child Labour in India". International Labour Organization - an Agency of the United Nations, Geneva. 2011. Archived from the original on 2012-08-09. பார்க்கப்பட்ட நாள் 2012-12-20.
  5. மாலதி சிட்டிபாபு (12 சூன் 2015). "மகிழ்ச்சியான குழந்தை தேசத்தின் பெருமை!". தீக்கதிர். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2015.
  6. சிறாரை கைது செய்யும்போது செய்ய வேண்டியவை என்ன?- 1,500 காவல் நிலையங்களில் விளம்பர பலகை வைக்க உத்தரவுதி இந்து தமிழ் 07 மார்ச் 2016
  7. "Constitution of india". Ministry of Law and Justice (India). Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-12-20.
  8. "India Code - Legislations". Department of Law and Justice, Government of India. 2012.
  9. Kaushik Basu (29 November 2004). "Combating India's truant teachers". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4051353.stm. 
  10. 10.0 10.1 "Are Indian Schools Getting Even Worse?". The Wall Street Journal. 20 January 2012. http://blogs.wsj.com/indiarealtime/2012/01/20/are-indian-schools-getting-even-worse/?mod=google_news_blog. 
  11. Kremer; et al. (September 2004). "TEACHER ABSENCE IN INDIA: A SNAPSHOT" (PDF). World Bank. {{cite web}}: Explicit use of et al. in: |author= (help)
  12. "Child Labour and Education - Digest 28" (PDF). UNICEF. 1990.
  13. "India Journal: The Basic Shortages that Plague Our Schools". The Wall Street Journal. 3 January 2012. http://blogs.wsj.com/indiarealtime/2012/01/03/india-journal-the-basic-shortages-that-plague-our-schools/. 
  14. "1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுக்கான அறிக்கை". தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்திய அரசு. 2000. {{cite web}}: Check date values in: |year= (help)
  15. நிகழ்வுகள் மற்றும் அமைப்பு
  16. "Child Labour Crisis in Diamond Industry". BBC News. 26 October 1997. http://news.bbc.co.uk/2/hi/programmes/letter_from_america/15377.stm. பார்த்த நாள்: 2009-09-08. 
  17. Tanna, Ketan (14 February 2005). "Child Labor Practice Drops in India". Rapaport News. http://www.diamonds.net/news/NewsItem.aspx?ArticleID=11399. பார்த்த நாள்: 2009-09-08. 
  18. "Use of child labour in gem industry lower". The Indian Express. 14 February 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  19. Khanna, Summit (23 February 2005). "AF Ferguson report slams Surat diamond industry". Business Standard. http://www.business-standard.com/india/news/af-ferguson-report-slams-surat-diamond-industry/206061/. பார்த்த நாள்: 2009-10-20. 
  20. "Child Labour: Blood on silk". Frontline (magazine) இம் மூலத்தில் இருந்து 2011-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111022001906/http://www.hindu.com/fline/fl1801/18010660.htm. பார்த்த நாள்: 2009-10-20. 
  21. "India: Freeing the Small Hands of the Silk Industry". Deutsche Welle (Germany). 2010 இம் மூலத்தில் இருந்து 2012-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121009011705/http://www.dw.de/dw/article/0,,1114659,00.html. 
  22. "485 child laborers rescued". தி இந்து. 22 November 2005. Archived from the original on 2008-05-23. பார்க்கப்பட்ட நாள் 2009-10-22.

download