இந்து மல்கோத்ரா

இந்து மல்கோத்ரா (Indu Malhotra, கிரந்தம்:ஹிந்து மல்ஹோத்ரா) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக செயலாற்றி வந்தார். முப்பதாண்டுகள் வழக்கறிஞர் பணியாற்றியுள்ள இந்து மல்கோத்ரா நேரடியாக உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை கொண்டவர்.[1] மூத்த வழக்கறிஞராக உச்சநீதி மன்றம் 2007இல் இவரை உயர்த்தியது.[2] தமது தந்தையாரின் சட்டமும் பொதுவர், இசைவுத் தீர்ப்பு செயற்பாடும் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு மூன்றாவது பதிப்பிற்கு ஆசிரியருமாவார்.[3] இவர் குறிப்பாக பொதுவர் தீர்ப்புச் சட்டங்களில் வல்லுநர். பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக உடன்பாட்டுச் சிக்கல்களில் வாதாடியுள்ளார். இந்தியாவில் பொதுவர் தீர்ப்பு வழங்குமுறைமையை நிறுவனப்படுத்துவதை சீரமைக்க அமைக்கப்பட்ட இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறையின் உயர்மட்டக் குழுவில் திசம்பர் 2016இல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதியாக ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டார்.[4]

இந்து மல்கோத்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு 14 மார்ச்சு 1956 (பெங்களூருவில்)
படித்த கல்வி நிறுவனங்கள் சட்டத் துறை, தில்லி பல்கலைக்கழகம், லேடி சிறிராம் கல்லூரி, புது தில்லி
தொழில் மூத்த வழக்கறிஞர்

குடும்பப் பின்னணியும் கல்வியும் தொகு

1956இல் பெங்களூருவில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் மல்கோத்ராவிற்கும் சத்தியா மல்கோத்ராவிற்கும் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஓம் பிரகாஸ் உச்சநீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராக செயலாற்றியவர். தொழிலகப் பிணக்குகள் சட்டம் குறித்து ஆய்வுரைகள் எழுதியுள்ளார். இந்த ஆய்வுக்கட்டுரைகளின் ஆறு பதிப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிப்புகள் தொடர்புடைய வழக்கறிஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. சட்டமும் பொதுவர், இசைவுத் தீர்ப்பு செயற்பாடும் என் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளை பதிப்பித்தார். இரண்டு பதிப்புகளை வெளியிட்ட இத்தொகுதிக்கு மூன்றாவது பதிப்பை இந்து மல்கோத்ரா பின்னாளில் எழுதினார்.

ஓம் பிரகாசின் கடைசி குழந்தையாக இந்து பிறந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை புது தில்லியிலுள்ள கார்மெல் கன்னிமாடப் பள்ளியில் முடித்தபிறகு இளங்கலை பட்டப்படிப்பை ஆட்சி இயல் துறையில் தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி சிறிராம் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் அக்கல்லூரியிலேயே அதே துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம் மிராண்டா கல்லூரியிலும் விவேகானந்த் கல்லூரியிலும் ஆட்சி இயல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சட்டத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1979 முதல் 1982 வரை படித்து முடித்தார்.

சட்டவுரைஞர் குழாமில் நுழைவு தொகு

இந்து மல்கோத்ரா 1983இல் வழக்கறிஞர் தொழிலில் நுழைந்தார். தில்லி வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்தார். 1988இல் உச்சநீதி மன்றத்தில் பதிவு பெற்ற வழக்குரைஞராக தகுதி பெற்றார். இதற்கான தேர்வில் முதலிடத்தைப் பெற்ற இந்துவிற்கு முகேஷ் கோசுவாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

உச்சநீதி மன்றத்தில் அரியானா அரசுக்கான நிலையான வழக்கறிஞராக 1991 முதல் 1996 வரை நியமிக்கப்பட்டார். தவிரவும் இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி), தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), அறிவியல், தொழில்துறை ஆய்வுகளுக்கான மன்றம் (CSIR), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR), போன்ற அரசியலமைப்புசார் நிறுவனங்களாக உச்சநீதி மன்றத்தில் தோன்றியுள்ளார்.

2007இல் உச்சநீதி மன்றத்தால் மூத்த வழக்கறிஞராக ஏற்கப்பட்டார். இவ்வாறு உச்சநீதிமன்றம் ஏற்ற இரண்டாவது பெண் வழக்கறிஞர் இவராவார்.

உச்சநீதி மன்றத்தின் பல்வேறு அமர்வுகளுக்கு நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) பணியாற்றியுள்ளார். அண்மையில் செய்ப்பூர் நகரின் மரபுடைமையை மீட்பது குறித்த நடுநிலை பரிந்துரை வழங்க பணிக்கப்பட்டுள்ளார்.

இந்து மல்கோத்ரா குழு தொகு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 5 சனவரி 2022 அன்று பஞ்சாப் மாநிலத்திற்குள் பயணித்த போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்களை குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என். வி. இரமணா தலைமையிலான அமர்வு, 12 சனவரி 2022 அன்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் இந்து மல்கோத்ரா தலைமையிலான குழுவை நியமித்தது. [5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_மல்கோத்ரா&oldid=3373969" இருந்து மீள்விக்கப்பட்டது