இரவுக்காவலர் (துடுப்பாட்டம்)

இரவுக்காவலர் (Nightwatchman) என்பவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு அணியின் கடைவரிசை வீரர்களில் ஒருவராக இருக்கலாம். பொதுவாக முன்னணி மட்டையாளர்கள் ஆட்டமிழந்த பின்பே களமிறங்கி மட்டைவீச (batting) வாய்ப்பு பெறும் இவர்கள் அன்றைய நாளின் ஆட்ட நேர முடிவில் மற்ற வீரர்களின் ஆட்டமிழப்பைத் தவிர்க்கும் நோக்கில் தங்களது கடைவரிசையின் நிலையிலிருந்து முன்னேறி மேல்நிலை வீரர்களுக்கு பதிலாகக் களமிறங்கும்போது இரவுக்காவலர் என்று அழைக்கப்படுவார். இவரது முக்கிய பணி என்னவென்றால் இவர் களமிறங்கிய பின்பு வீசப்படும் பந்துகளில் அதிகப்படியான பந்துகளைத் தானே சந்தித்து ஆட்டமிழக்காமல் தடுத்தாடவேண்டும். அப்படியே அன்றைய இரவு முழுவதும் கழிந்த பின்பு மறுநாள் காலை ஆட்டம் தொடங்கும் வரை ஆட்டத்தை நீடிக்க செய்து பின்னால் வரும் வீரர்களின் ஆட்டமிழப்பைக் காப்பார். இந்த இறங்குவரிசை முன்னேற்றத்திற்கு காரணம் என்னவெனில், அன்றைய ஆட்டநேர முடிவில் முன்னணி மட்டையாளர்களைக் களமிறக்குவதால் குறைவான ஒளியின் காரணமாக அவர்கள் ஆட்டமிழப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காகவே இதுபோல கடைவரிசை வீரர்கள் முன்னரே களமிறக்கப்படுகிறனர். அதாவது, முன்னணி வீரர்கள் இருவரை தேவையில்லாமல் இழப்பதை விட கடைவரிசை வீரர் ஒருவரை இழப்பது மேல் என்ற கொள்கையின்படி இது கடைபிடிக்கப்படுகிறது.

அதற்காக இந்த இரவுக்காவலராக வரும் வீரரின் திறமைகள் வீணடிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று அர்த்தமில்லை. இது போல இறங்கும் வீரர்கள் களத்தில் ஒரு முறையற்ற திட்டமிடலில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தவே அனைவரும் விரும்புகிறனர். இதன்படி இரவுக்காவலராக களமிறங்கிய சில வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தருணங்களும் உண்டு. இது போல களமிறங்கி ஆறு வீரர்கள் இதுவரை தேர்வுத்துடுப்பாட்டத்தில் சதம் கடந்துள்ளனர். பொதுவாக இவ்வாறு களமிறங்கும் வீரர்கள் அன்றைய நாள் இரவில் அதுவரை இருந்த ஆட்டத்தின் போக்கை மாற்றாமல் அதே போக்கில் விளையாடி ஆட்டமிழக்காமல் விளையாடவேண்டுவர். மறுநாள் காலை மீண்டும் களமிறங்கும் பொழுது தன்னுடைய சொந்த திட்டமிடலின்படி தானாகவே முடிவு செய்து எவ்வாறு வேண்டுமென்றாலும் விளையாடிக் கொள்ளலாம். சில நேரங்களில் இந்த உத்தி கைகொடுக்காமலும் போகலாம். களமிறங்கியவுடன் அவர்கள் ஆட்டமிழந்து ஏமாற்றமும் கொடுப்பர். அப்படி இல்லாமல் அவர் ஆட்டமிழக்காது மறுநாள் காலையிலும் களமிறங்கும் தருணத்தில் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் பொதுவாக சற்று வலிமை குறைந்து சோர்வுடன் காணப்படலாம்.

இரவுகாவலர்களால் எடுக்கப்பட்ட சதங்களின் பட்டியல் தொகு

வீரர் அணி ஓட்டங்கள் எதிரணி களம் தேதி
நசீம் உல் கனி பாக்கிஸ்தான் 101 இங்கிலாந்து லார்ட்ஸ் லண்டன், இங்கிலாந்து 1962
டோனி மான் ஆஸ்திரேலியா 105 இந்தியா WACA மைதானம், பெர்த், ஆஸ்திரேலியா 1977
சையது கிர்மானி இந்தியா 101* ஆஸ்திரேலியா வாங்கடே மைதானம், மும்பை, இந்தியா 1979
மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்கா 125 ஜிம்பாப்வே ஹாராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே, ஜிம்பாப்வே 1999
மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்கா 108 இங்கிலாந்து சஹாரா மைதானம் கிங்க்ஸ்மேட், டர்பன், தென்னாப்பிரிக்கா 1999
ஜேசன் கில்லஸ்பி ஆஸ்திரேலியா 201* வங்கதேசம் சிட்டகாங் மைதானம்,சிட்டகாங், வங்காளதேசம் 2006

இந்த பட்டியலில் நசீம் உல் கனி மற்றும் மார்க் பவுச்சர் இருவரில் யார் சிறந்த இரவுக்காவலர்கள் என்கிற விவாதம்கூட உண்டு.