இராம் பரத் (ஆங்கிலம்: Ram Barat; இந்தி: राम बारात) என்பது இந்தியாவின் ஆக்ராவில் நடைபெறும் இராமலீலை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். இது வட இந்தியாவின் கொண்டாடப்படும் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகும். இராம் பரத் என்பது "இராமர் திருமண ஊர்வலம்" என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆக்ராவில் ஒரு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு, ஜனக்புரிக்காக விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது.

வரலாறு

தொகு

இராம் பரத் நிகழ்வானது சுமார் 125 ஆண்டுகள் முன்பிருந்தே கொண்டாடப்படுவதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.[1] புகழ்பெற்ற வணிகர் லாலா கோகமல், இந்த அரச திருமணத்தின் மூன்று நாட்கள் கொண்டாட்டங்களின் பாரம்பரியத்தைத் தொடங்கியவர் ஆவார். இவரது செல்வாக்கு காரணமாக இந்நிகழ்வு நடைபெற்ற சாலைக்கு 'லாலா கோகமல் மார்க்' என்றும், இராம் லீலை நடைபெறும் மைதானத்திற்கு லாலா கோகமால் என்றும் பெயரிடப்பட்டது. இவர் 1966-ல் இறந்தபோது, இவரது மகன் இராதாராமன் பொறுப்பேற்று 1978-ல் இறக்கும் வரை இராம் லீலையினை செயலாளராக நடத்தினார். 2016-லிருந்து இவரது இளைய மகன் ராஜ் நரேன் ராம்லீலையின் பொருளாளராகவும், இவரது பேரன் அரி கிசன் அகர்வால் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தனர். இப்போது லாலா கோகமாலின் கொள்ளுப்பேரன் ராஜீவ் கே அகர்வால் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

  • 2008-ல் கமலா நகர் பகுதியில் இராம் பாரத் நடைபெற்றது.
  • 2010-ல், பால்கேஷ்வர் பகுதியில் நடைபெற்றது.
  • 2013-ல், கமலா நகர், ஆக்ராவில் ஜனக்புரியில் கொண்டாடப்பட்டது.
  • 2015-ல் காந்தி நகர், ஜனக்புரியில் அக்டோபர் 8-10 வரை கொண்டாடப்பட்டது.
  • 2018-ல் விஜய் நகர், ஜனக்புரியில் அக்டோபர் 7-10 வரை கொண்டாடப்பட்டது.
  • 2022-ம் ஆண்டு ஆக்ராவில் ஜனக்புரியில் கொண்டாடப்பட்டது.[2]

விழா ஏற்பாடு

தொகு

நிகழ்வுக்கான ஏற்பாடுகள் விழா நடைபெறும் நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கும். ஜனக் மகால் மற்றும் பிற விரிவான கட்டமைப்புகளை அமைக்க நாட்டிலிருந்து சிறந்த கைவினைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். இராம் பாரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்குச் சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட்டு மணமகளின் தந்தை வீடு போல் அலங்கரிக்கப்பட்டு, பரதிகளை (இராமர் மற்றும் அவரது குடும்பத்தினர்) வரவேற்கத் தயாராக ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

விழாக்கள்

தொகு

இந்த விழாக்கள் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. முதல் நாள் திருமஞ்சன ஊர்வலம் நடைபெறும். இதை இலட்சக்கணக்கான மக்களும் ஆக்ரா முழுவதிலுதிலுமிருந்தும், இராசத்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் அண்டை மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் கண்டுகளிக்கின்றனர். இப்பகுதி முழுவதும் இரவில் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஒளிரும். மேலும் இந்நிகழ்வினைக் காணவருகைத் தரும் கூட்டத்திற்கு பொழுது போக்குமிடமாகத் திரைப்பட அரங்கங்கள் இரவு முழுவதும் திரைப்பட காட்சிகளை நடத்துகின்றன. இந்த மூன்று நாட்களும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் ஒரு பெரிய திருவிழாவாக உள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பரத்&oldid=3656041" இலிருந்து மீள்விக்கப்பட்டது