இர்வின் பிரபு
இர்வின் பிரபு (The Lord Irwin) (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை ஆலிபாக்சு வைகௌன்ட்டு (The Viscount Halifax) எனவும் அழைக்கப்பட்ட எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு (Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax) 1930களில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த விட்டுக் கொடுத்தல் கொள்கையை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக வாசிங்டனில் பணிபுரிந்தார்.
ரைட்டு ஆனரபிள் ஆலிஃபாக்ஸ் பிரபு கேஜி, ஓஎம், ஜிசிஎஸ்ஐ, ஜிசிஎம்ஜி,ஜிசிஐஇ, டிடி, பிசி | |
---|---|
1941இல் ஆலிஃபாக்ஸ் பிரபு | |
30th வைசுராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் | |
பதவியில் 3 ஏப்ரல் 1926 – 18 ஏப்ரல் 1931 | |
ஆட்சியாளர் | ஜார்ஜ் V |
பிரதமர் | இசுடான்லி பால்டுவின் இராம்சே மக்டொனால்டு |
முன்னையவர் | ரீடிங் பிரபு |
பின்னவர் | ஜார்ஜ் கோச்சென் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பவுடர்ஹாம் கோட்டை, டெவோன், இங்கிலாந்து | 16 ஏப்ரல் 1881
இறப்பு | 23 திசம்பர் 1959 கர்ரோபி அரங்கம், யார்க்சையர், இங்கிலாந்து | (அகவை 78)
தேசியம் | பிரித்தானியர் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஆலிபாக்சு, யார்க் ஷயர் வம்சத்தின், இரண்டாம் ஆலிபாக்சு வைகௌன்ட்டு சார்லஸ் வூட்டிற்கு நான்காவது மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் மூவரும் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இதனால் இவர் குடும்பத்தின் ஒற்றை வாரிசாகி பிரபுக்கள் அவையில் இடம் பிடித்தார்.
இந்தியாவின் வைசிராய்
தொகுஇர்வின் பிரபு 1926 முதல் 1931 வரை இந்தியாவின் வைசிராயாக பணியாற்றினார். இவரது பாட்டனார் முன்பு இந்தியாவிற்கான அமைச்சராக இருந்ததை கருத்தில்கொண்டு மன்னர் ஜார்ஜ் V பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டு ஏப்ரல் 1, 1926ஆம் ஆண்டு மும்பை வந்திறங்கினார்.
அவரது பதவிக்காலத்தில் பெருத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா தன்னாட்சிக்குத் தயாரானநிலையில் உள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட சைமன் குழுவில் இந்தியர் எவரும் இடம் பெறாததை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்தன. இவற்றைக் கட்டுப்படுத்த இர்வின் வழங்கிய சலுகைகளை அரைமனதானதொன்றாக இந்தியர்கள் கருத இலண்டனில் கூடுதலானவையாக கருதப்பட்டன. இக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: சைமன் குழு அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள்; நேரு அறிக்கை; அனைத்துக் கட்சி மாநாடு; முசுலிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா பதினான்கு அம்சக் கோரிக்கை; மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு நடத்திய குடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இந்திய வட்டமேசை மாநாடுகள் ஆகும்.
இர்வின் அனைத்து காங்கிரசுத் தலைவர்களையும் சிறையில் அடைத்து காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலண்டனிலிருந்து விடுதலை வழங்குவது குறித்த எந்தவொரு ஆதரவான நிலையும் கிடைக்காதநிலையில் இர்வினின் முயற்சிகள் தோல்வியடைந்தன. நாட்டில் பிரித்தானிய குடிமைப்படுத்தலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. தன்னால் எந்தவொரு வாக்குறுதியும் வழங்கவியலா நிலையில் இர்வின் அடக்குமுறையால் இந்தப் போராட்டங்களை எதிர்கொண்டார். காந்தியை கைது செய்து, பொதுக்கூட்டங்களை தடை செய்து கட்டுப்பாடுகளை விதித்தார். இந்தப் போராட்டங்களின்போது காவல்துறையின் தடியடியால் தலைவர் லாலா லஜபத் ராய் உயிரிழக்க நிலைமை மோசமானது. இதனை நேரில் கண்ட பகத் சிங் லாலாவின் மறைவிற்கு பழிவாங்கவே தனது தாக்குதலை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். காந்தியின் கைது மேலும் போராட்டத்தை வலுவடையச் செய்ய சனவரி 1931இல் தில்லி உடன்பாடு|தில்லி உடன்பாட்டிற்கு வழி வகுத்தார்; இதன்படி அனைத்துத் தரப்பினரும் பங்குகொள்ளும் வட்டமேசை மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டதை அடுத்து ஒத்துழையாமை இயக்கமும் வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இரு வாரங்கள் நடந்த இந்த மாநாட்டின் முடிவில் காந்தி-இர்வின் உடன்பாடு ஏற்பட்டது.
மார்ச் 5,1931 அன்று கையெழுத்தான இந்த உடன்பாட்டின்படி
- காங்கிரசு தனது ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்டது.
- வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்க காங்கிரசு உடன்பட்டது.
- காங்கிரசின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட அனைத்து அவசரச் சட்டங்களையும் திரும்பப் பெறும்.
- வன்முறை தவிர்த்த அனைத்து வழக்குகளையும் அரசு விலக்கிக் கொள்ளும்.
- ஒத்துழையாமை இயக்கத்திற்காக கைதாகி தண்டனை பெற்ற அனைத்து காங்கிரசுத் தொண்டர்களையும் விடுவிக்க அரசு உடன்பட்டது.
மேலும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் ஒரே சார்பாளராக காந்தி கலந்து கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது.
மார்ச்சு 20, 1931 அன்று இர்வின் பிரபு ஆட்சியிலிருந்த இளவரசிக்காக கொடுக்கப்பட்ட ஓர் விருந்தில் காந்தியின் நேர்மை, தூய்மை மற்றும் நாடுப்பற்றை பாராட்டிப் பேசினார். இதற்கு பின்னர் ஒரு மாத காலத்தில் பணி ஓய்வு பெற்று நாடு திரும்பினார். இர்வின் திரும்பிய பின்னர் அமைதி நிலவினாலும் ஓராண்டுக்குள்ளேயே மாநாடு தோல்வியடைந்து காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இர்வினின் வைசிராய் பதவிக்காலம் இருதரப்பினருக்கும் நடுநிலையில் இருந்தது; கண்டிப்புடனும் தனித்தன்மையுடனும் செயல்பட்டார். எனவே நாடு திரும்பிய பின்னர் மிகுந்த மதிப்புடன் அரசியலில் மீண்டும் ஈடுபட முடிந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Christopher Andrew, The Defence of the Realm: The Authorized History of MI5 (London: Allen Lane, 2009).
- A Gentleman with a Duster [pseud. for Harold Begbie], The Conservative Mind (London: Mills & Boon, 1924).
- Lord Butler, The Art of the Possible (London: Hamish Hamilton, 1971).
- Maurice Cowling, The Impact of Hitler: British Politics and British Policy, 1933–1940 (Cambridge University Press, 1975).
- Keith Feiling, A Life of Neville Chamberlain (London: Macmillan, 1970).
- The Earl of Halifax, Fulness of Days (London: Collins, 1957).
- Andrew Roberts, ‘The Holy Fox’: The Life of Lord Halifax (Phoenix, 1997).
மேலும் படிக்க
தொகு- Alan Campbell-Johnson and R. Hale. Viscount Halifax: A Biography. 1941
- Earl of Birkenhead. Earl of Halifax: The Life of Lord Halifax. Hamilton, 1965.