இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார்.[1] பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அம்சமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன.[2][3] இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்:கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன.

தொன்மங்களும் வரலாறும்

தொகு
 
மழு ஏந்திய இலகுலீசர், ஏழாம் நூற். சிற்பம். சாளுக்கியர் கலைப்பாணி. மகாகூட சங்கமேசுவரர் கோயில், கர்நாடகம்.

இலிங்க புராணக் கதையொன்று, அவர் யோகநெறியின் தோற்றுவிப்பாளர் என்றும், ஈசனின் 28ஆவது மற்றும் இறுதி அவதாரம் என்றும் சொல்கின்றது.[4] கௌருசியர், கர்க்கர், மித்திரர், குசிகர் எனும் நான்கு சீடர்கள் அவருக்கு அமைந்திருந்ததாகவும், அவர்கள் மகாகாலவனத்தில் "காயாவரோகணேசுவரர்" எனும் இலிங்கத்தைத் தாபித்து வழிபட்டதாக ஸ்காந்தபுராணம் கூறும்.[5] வியாசரின் சமகாலத்தில், "நகுலீசன்" எனும் பெயரில் ஈசன் அவதரித்து பாசுபத நெறியைத் தோற்றுவித்தார் எனும் கருத்து, கூர்ம புராணம், வாயு புராணம் என்பவற்றிலும் உண்டு.

சில ஆய்வாளர்கள்,[6] இவர் ஆரம்பத்தில் ஒரு ஆசீவகர் என்றும், அப்போது சிதறுண்டு கிடந்த சைவக்கூறுகளை ஒன்றிணைத்து, " பசுபதியின் நெறி" எனப் பொருளுற, பாசுபத நெறியைத் தோற்றுவித்ததாகச் சொல்கின்றனர். ஆசீவகம், வைதிகம், சமணம் என்பவற்றுடன் பௌத்தத்தையும் தத்துவார்த்தத் தளத்தில் எதிர்த்த இலகுலீசர்,மிகப்பழைமையான தாந்திரீகம், சாங்கியம், ஹட யோகம் என்பவற்றை ஒன்றிணைத்து, பாசுபதத்துக்கான மெய்யியற் கோட்பாட்டை வகுத்துக்கொண்டார். இவரை ஈசனின் அவதாரமாக வழிபடும் போக்கு, கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கின்றது.[7]

மெய்யியலும் இலகுலீசரும்

தொகு
 
கன்னடத்து பாதாமிக் குகையில் இலகுலீசர் நான்கு சீடர்களுடன். கி.பி 6அம் நூற்.

இலகுலீச பாசுபதமானது, இருமை - அல்லிருமை (பேதாபேத) இணைந்த சைவ மெய்யியலாகக் கருதப்படுகின்றது. இலகுலீசரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் பாசுபத சூத்திரம், அதன் உரை நூலான கௌண்டினியரின் பஞ்சார்த்த பாடியம் என்பன 1930இல் கண்டுபிடிக்கப்பட்டன. [2] பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் பாசுபதர்கள் முக்கியமாக யோகத்தைக் கைக்கொண்டவர்கள்.

இலகுலீசரின் பாசுபதக் கோட்பாடானது, காரணம், காரியம், க்லை, விதி, யோகம், துக்காந்தம் (விடுதலை) எனும் ஆறையும் தன் சாதனங்களாகக் குறிப்பிடுகின்றது.

இலகுலீசச் சிற்பங்கள்

தொகு
 
அரிட்டாபட்டி இலகுலீசர் ஏழாம் நூற்றாண்டு

குசாணப் பேரரசனான குவிஷ்கனே (கி.பி 140), அவர்களது நாணயத்திலிருந்த கிரேக்கத் தெய்வங்களை, சிவன் மற்றும் இலகுலீசர் கொண்டு மாற்றியமைத்த முதல் மன்னன் என்று கருதப்படுகின்றான்.[8] சந்திரகுப்த மௌரியர் காலத்துக்குப் பின் (கி.பி 4ஆம் நூற்.) இலகுலீசரின் திருவுருவங்கள் பெருமளவு கிடைக்க ஆரம்பிக்கின்றன. அவற்றில், ஒருகையில் தண்டமும் மறுகையில் தோடம்பழமும் ஏந்தி நிற்பவராக அல்லது அமர்ந்தவராக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்த்துவலிங்கம் (நிமிர்ந்த சித்தம்) வாழ்க்கையை உத்வேகம் செய்யும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது. எனினும், பதினோராம் நூற்றாண்டின் பின்பேயே இலகுலீச வழிபாடு தென்னகத்தை வந்தடைந்திருக்கின்றது.

கர்நாடகம், குஜராத், சௌராஷ்டிரம் மற்றும் சில கிழக்கிந்தியப் பகுதிகளில் இலகுலீச சிற்பம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. எலிபண்டாக் குகைகளிலும் இலகுலீச சிற்பம் காணப்படுகின்றது.[9] மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி எனும் கிராமத்தில் உள்ள குடைவரைச் சிவன் கோயிலிலும் இலகுலீசரின் சிற்பம் உள்ளது. [10] [11]

குறிப்புகள்

தொகு
  1. "Pashupata Saivism". Archived from the original on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  2. D.R. Bhandarkar, "Lakulisa", in Archaeological Survey of India, Annual Report 1906-7, Calcutta, 1909, pp. 179-92, figures 4, 5.
  3. U.P. Shah, "Lakulisa: Saivite Saint" in Discourses on Siva, ed. Michael W. Meister, figs. 85-87.
  4. "Lakulisha Pasupata". Journal of the Oriental Institute 46 (3-4): 210. 1997. https://books.google.lk/books?id=pWBjAAAAMAAJ. 
  5. Joshi, N.P. (1981). Regional Trends in some of the Mediaeval Brahmanical Sculptures of Malwa in M.D. Khare (ed.) Malwa through the Ages, Bhopal: Directorate of Archaeology & Museums, Govt. of M.P., p.112
  6. Daniélou, Alain (2003) [1987], Shaiva Oracles and Predictions on the Cycles of History and the Destiny of Mankind (2nd expanded ed.), US: Inner Traditions International, Rochester, Vermont, US, p. 198, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89281-115-3
  7. [1]
  8. John Faithfull Fleet ‘Siva as Lakulisa’ JRASGBI : 1907, p. 419-427
  9. A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Upinder Singh (2008)
  10. இரா.சிவக்குமார். "கீற்று - கீற்று".
  11. "அரிட்டாபட்டிஅதிசயங்கள்..."

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகுலீசர்&oldid=3776895" இலிருந்து மீள்விக்கப்பட்டது