அரிட்டாபட்டி மலை, மதுரை

கல்லால் ஆனது

அரிட்டாபட்டி மலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளதும் பெரும்பகுதி கல்லால் ஆனதுமான ஒரு மலைக் குன்று ஆகும். மதுரைக்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலையை திருப்பிணையன் மலை என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சமணர் காலக் குகைகள் மற்றும் பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. இம்மலைப்பகுதிகளில் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது.

அரிட்டாபட்டி மலை
குடைவரைக் கோயில் - அரிட்டாபட்டி

அமைவிடம் தொகு

அழகர்மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையே, மேலூருக்கு மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரையிலிர்ந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது. [1]

வரலாறு தொகு

அரிட்டாபட்டி மலையின் குகை தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியன் காலத்து குடை வரைக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. சமணர்களுக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உறைவிடம் அமைத்து கொடுத்ததாகவும் இங்குள்ள வரலாற்று ஆதரங்கள் தெரிவிகின்றன இந்த மலை மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ளது.[2].

சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் தொகு

குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன் மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.[3]

தமிழ் பிராமி கல்வெட்டு தொகு

இங்கு காணப்படும் பிராமி கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்' என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கியதாகத் தெரிகிறது.[4]

குடை வரை கோயில் தொகு

மலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஒன்றும் இந்த மலையில் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது.[5] இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் பல சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச் சுனை நீர் என அழைக்கபடுகிறது.

புகைப்படத்தொகுப்பு தொகு

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. மதுரை - அரிட்டாபட்டி செல்லும் வரைபடம்
  2. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126627&Print=1
  3. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=2
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-10-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-20 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-20 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளி இணைப்புகள் தொகு