இலக்னத்திற்கேற்ப வீட்டு வாசல்

இலக்கினத்திற்கேற்ப வீட்டு வாசல் என்பது, இந்துக்களின் பண்பாட்டில், வீடுகளை அமைக்கும்போது வீட்டுத் தலைவரின் இலக்கினத்துக்கு ஏற்ப வீட்டின் வாசலைக் குறிப்பிட்ட திசைகளை நோக்கி அமைக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. உலகம் முழுவதிலும் காணப்படும் பல பண்பாட்டுக் கூறுகளைப் போலவே, இந்த நடைமுறையும் நம்பிக்கையின் அடிப்படையிலானது, இந்துக்களின் உலக நோக்கின் பாற்பட்டது. இது தற்கால அறிவியல் கோட்பாடுகளுக்கு அமைவானதாக ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. எனினும், தற்காலத்திலும் இம்முறைகளைக் கைக்கொள்பவர்கள் பெருமளவில் உள்ளனர்.

வாஸ்து சாஸ்திரம், சிற்ப நூல், மனையடி சாஸ்திரம் என்று பலவாறாக அறியப்படும், கட்டிடங்களை அமைக்கும் மரபுவழி நடைமுறைகள் பற்றி விளக்கும் நூல்கள் வீடுகளின் வாசல் அமைய வேண்டிய திசையைத் தெரிவது பற்றிச் சிறப்பாகப் பேசுகின்றன. இந்நூல்களின்படி வாசல் திசையைத் தெரிவு செய்வது என்பது, வீடு அமைத்தலில் முதலில் செய்யவேண்டிய முக்கியமான பணிகளுள் ஒன்று. இந்த நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றியவை என்பதால், அவ்வக்காலச் சமூக பண்பாட்டுப் பின்னணிகளுக்கு ஏற்ப இவற்றில் வேறுபாடான கருத்துக்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசல் திசை தெரிவுக்கு வீடு கட்டும் மாதம், வீட்டில் வாழவுள்ளோர் சார்ந்த வருணம், போன்ற பல்வேறு தேர்வு வரன்முறைகளையும் பழைய நூல்களில் பயன்படுத்தியுளனர். இவற்றுட் சில இக்காலச் சமூகப் பின்னணியில் பொருத்தம் இல்லாமல் போனதாலும் (எகா: வருணம்) வேறு சில நடைமுறைக்கு வசதிக் குறைவாக இருப்பதாலும் வழக்கற்றுப் போயின. எனினும், தற்கால நம்பிக்கைகளின்படி வாசல் திசையைத் தெரிவு செய்வதில் வீட்டுத் தலைவரின் பிறந்த இலக்கினம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வரைவிலக்கணங்களும், வேறுபாடுகளும்

தொகு

ஒருவரின் இலக்கினம்

தொகு

பூமியைச் சூழவுள்ள வெளி பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை அளவு கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றுக்கு மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பெயரிட்டுள்ளனர். பூமி தன்னைத்தானே சுற்றுவதால், புவியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தைக் குறித்து இந்த ஒவ்வொரு இராசியும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிழக்கு அடிவானத்தில் உதித்து மேற்கில் மறைவதுபோல் தோன்றும். ஒரு குறித்த நேரத்தில் அடிவானத்தில் இருக்கும் இராசி அந்த நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இதுபோல, ஒருவர் பிறக்கும் நேரத்துக்குரிய இலக்கினம் அவரது இலக்கினம் எனப்படும். ஒருவருடைய பிறப்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் சாதகக் குறிப்பின் கோள்நிலை வரைபடத்தில் குறித்த இராசிக்குரிய கட்டத்தில் "ல" அல்லது "இல" என்று அவரது இலக்கினம் குறிக்கப்பட்டிருக்கும்.

வீடும் வாசலும்

தொகு

வீட்டு வாசல் என்பது வீட்டுக்குள் நுழைவதற்கான வாசல் என்பது தெளிவு. ஆனாலும், நடைமுறையில் இது தொடர்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. எடுத்துக்கொண்ட தேவைக்காக வீடு என்று கொள்ளப்படுவது எது என்பதில் உள்ள வேறுபாட்டினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. வீட்டுக்குரிய எல்லா அறைகளையும் உட்படுத்திய கட்டிடத்தை வீடு எனக்கொண்டு அதற்குள் நுழைவதற்கான வாயிலை வீட்டு வாயில் எனக் கொள்வது ஒன்று. சில பகுதிகளில் வீட்டில் பெரிய அறைக்குச் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இங்கே அந்த அறையையே வீடு எனக் கொண்டு அதன் வாயிலையே வீட்டு வாசல் என்பர். யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கில் உள்ள நடைமுறை இதற்கு எடுத்துக்காட்டு.

இலக்கினத்துக்கு உரிய வாயில் திசைகள்

தொகு

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நான்கு திசைகளை நோக்கியதாக மட்டுமே வீட்டு வாசல்களை அமைக்கலாம் என்று மரபுவழிச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இதனால், வீடு கட்ட எண்ணுபவர்கள் அவர்களது பிறந்த இலக்கினத்தின் அடிப்படையில் இந்த நான்கு திசைகளுள் ஒன்றைத் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று அவை பரிந்துரைக்கின்றன. மக்கள்தொகை பெருகிவந்த சூழலில், குறிப்பாக நகரப் பகுதிகளில் வீடுகள் பல்வேறு திசைகளிலும் செல்லும் சாலைகளை ஒட்டி அமையவேண்டி உள்ளதாலும், வீடுகட்டுவதற்கான நிலத்தின் அளவு சிறிதாக இருப்பதாலும், வாயில் திசை குறித்த மேற்படி விதிகளைப் பின்பற்றுவது கடினமாகியது. இதன் காரணமாகவோ என்னவோ, சில நூல்கள் ஒரு இலக்கணத்துக்கு ஒரு திசையையே பரிந்துரைக்க வேறு சில இவ்விதிக்கு நெகிழ்வுத்தன்மை கொடுத்து ஒவ்வொரு இலக்கினத்துக்கும் இன்னொரு திசையையும் பரிந்துரைக்கின்றன.


பின்வரும் இலக்னத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட திசைகளினை நோக்கி வீடுகளை அமைத்துக் கொண்டால் அவர்களது வாழ்வு சிறப்பாக விளங்கும் என்பது நம்பிக்கை.

உசாத்துணை

தொகு
  • முனைவர் எஸ். ராதாகிருஷ்ணன்,(ப - 53) பொது அறிவுப்பெட்டகம் (2002).