இலங்கையின் அரச ஆசியர் சமூகம்

இலங்கையின் அரச ஆசியர் சமூகம் (Royal Asiatic Society of Sri Lanka, RASSL) இலங்கையின் கொழும்பு நகரில் அமைந்துள்ள ஓர் அமைப்பு. அறிவு வளர்ச்சிக்கான தொன்மையான இலங்கைச் சமூகங்களில் ஒன்றான இது 160 ஆண்டு கால வரலாற்றை உடையது. 1845 பெப்ரவரி 7 இல் நிறுவப்பட்ட இந்தச் சமூகம், பெரிய பிரித்தானியா, அயர்லாந்துகளின் அரச ஆசியர்ச் சமூகத்தை ஒட்டி கிழக்கத்திய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இலங்கைக் கிளையாக அமைக்கப்பட்டது.

வரலாறு

தொகு

இச்சமூகத்தின் இடைவினைகளால் பல தேசிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன: கொழும்பு தேசிய அருங்காட்சியகம், தொல்லியல் துறை, தேசிய ஆவணக் காப்பகத் துறை, வானிலை ஆய்வியல் துறை, புள்ளியியல் துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், வரலாற்று ஓலைச்சுவடி ஆணையம் மற்றும் சிங்கள அகராதி இவற்றுள் சிலவாகும். இலங்கையின் பழங்குடி மக்களான வேடுவர் குறித்த ஆய்வுகளை முன்நடத்தி உள்ளது. மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, சிங்கள மொழியின் சொல்லியல், டச்சு ஆவணங்களின் மொழிபெயர்ப்பும் ஆய்வும், மாலைத்தீவுகள் குறித்த ஆய்வுகள், இலங்கையின் இடப்பெயராய்வியல் மற்றும் பாலி புத்தகுருக்களின் குறிப்புக்களை சிங்கள மொழியிலாக்கம் போன்ற ஆய்வுகளை முன்னிருந்து மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள், நீதித்துறை, அரசுப்பணி மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் இதன் அங்கத்தினர்களாக இருந்தமையால் துவக்க நாட்களில் இச்சமூகத்திற்கு பெருமதிப்பு இருந்தது.

1916 இலிருந்து இலங்கை அதிகாரிகளும் அனுமதிக்கப்பட்டனர்; முதன்முதலில் அவ்வாறு அங்கத்தினரானவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் இருந்தார். தொடர்ந்து சர் பவுல் பீரிசு, சர் பாரன் ஜயதிலக போன்ற பல உள்ளூர் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

இன்றைய நாளில்

தொகு

1984 வரை நிலையான கட்டடம் இல்லாதிருந்த நிலையில் அதே ஆண்டில் சேர் ஆனந்த குமாரசாமி மாவத்தை (ஆனந்த குமாரசுவாமி சாலை)யில் அமைந்துள்ள மகாவலி மையத்திற்கு மாறியது; இந்தக் கட்டிடத்தை இலங்கை சனாதிபதி செயவர்த்தனவும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சரும் திறந்து வைத்தனர்.

இந்தச் சமூகத்தின் முதன்மை கல்வி வெளியீடான ஜர்னல், முதன்முதலில் 1846 சூன் 15 இல் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 22

வெளி இணைப்புகள்

தொகு