இளைய பத்மநாதன்
அண்ணாவியார் இளைய பத்மநாதன் அரங்கில் தமிழின அடையாளம் தேடும் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராவர்.
1960களின் இறுதியில் இலங்கையின் வட பகுதியில் இடதுசாரி இயக்கம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு போன்ற வெகுசன இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு வடபகுதிக் கிராமங்கள் தோறும் நாட்டுக்கூத்துக் கலைவடிவத்தினூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அக்காலப்பகுதியில் 'அம்பலத்தாடிகள்' என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகிய கந்தன் கருணை நாடகத்தில் இளைய பத்மநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கந்தன் கருணை (1970) நாடகம் பின்னர் கொழும்பில் ஆட்டக்கூத்தாக அறிமுகமானது. அத்துடன் இவரின் 'ஏகலைவன்' என்ற கூத்து நாடகம் கொழும்பில் மண்டபம் நிறைந்த காட்சியாக அரங்கேறியதுடன் இலங்கையின் தேசிய ஒளிபரப்புச் சேவையான ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.
இவ்வாறு படிப்படியாக நாடறிந்த கூத்துக் கலைஞராக பரவலாக அறிமுகமான இளைய பத்மநாதன் கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞராகப் பணியாற்றியவர்.
1983 இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர், அங்கே பல்கலை அரங்கக் குழுவுடன் இணைந்து Bertolt Brecht என்பவரின் The Exception and the Rule என்ற நாடகத்தின் தமிழ் வடிவமான "ஒரு பயணத்தின் கதை", மற்றும் தீனிப்போர், ஏகலைவன் முதலானவற்றை எழுதி அரங்கேற்றினார். 'ஒரு பயணத்தின் கதை' பின்னர் அவுஸ்திரேலியாவில் சிட்னியிலும் மெல்பேர்னிலும் அரங்காக்கினார்.
Skin in Deep என்ற தனிநபர் நாடகத்தை அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியுள்ளார். பாஞ்சாலி சபதம் உட்பட பல நாடகப்பாடல் பிரதிகளை இவர் எழுதியுள்ளார். காத்தவராயன் கூத்தை முறையாக கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் பயின்றுள்ள இளைய பத்மநாதன் சிட்னியில் இதனை அரங்கேற்றினார்.
மெல்பேர்ன் விக்டோரியா பல்கலக்கழகத்தில் அரங்கக் கலைகளில் (Performance Studies) சிறப்புப் பட்டம் பெற்ற இளைய பத்மநாதன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
வெளிவந்த நூல்கள்
தொகு- தீனிப்போர்
- ஏகலைவன்
- மீண்டும் இரமாயணம் மீண்டும் பாரதம்