கறுப்பு யூலை

இலங்கையின் இனப்படுகொலைகளுள் ஒன்று
(கறுப்பு ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கறுப்பு யூலை (Black July; சிங்களம்: කළු ජූලිය) என்பது இலங்கையில் 1983 சூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளைக் குறிக்கும்.[4][5][6] இப்படுகொலைகள் திட்டமிடப்பட்டு நடந்தேறியவை ஆகும்.[7][8][9][10] 1983 சூலை 23 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்படாலும்,[11] ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்கள்:இன் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.[12][13]

கறுப்பு யூலை
Black July
இலங்கை இனக்கலவரங்கள், ஈழப் போர்
பொரளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சிங்களக் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார்.[1][2][3]
இலங்கையில் அமைவிடம்
இடம்இலங்கை
நாள்24 சூலை 1983 (1983-07-24)
30 சூலை 1983 (1983-07-30) (ஒசநே+6)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
முக்கியமாக இலங்கைத் தமிழர்கள்
தாக்குதல்
வகை
படுகொலைகள், இனக்கருவறுப்பு, பொதுமக்கள் கொலை
ஆயுதம்கோடாரிகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள், கத்திகள்
இறப்பு(கள்)400-3,000
காயமடைந்தோர்25,000+
தாக்கியோர்சிங்களக் காடையர், இலங்கை அரசு, ஐக்கிய தேசியக் கட்சி; இலங்கை ஆயுதப் படைகள், இலங்கைக் காவல்துறை
தாக்கியோரின் எண்ணிக்கைஆயிரக்கணக்கானோர்
நோக்கம்தமிழர் விரோத இனவாதம், சிங்கள ஆதரவு உணர்வு

1983 சூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தன. இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது,[14] 150,000 பேர் வீடற்றவர்களாயினர்.[15][16] ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.[17] இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.[15] பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.[18]

இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர், மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர்.[14][16] கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.[16][19] சூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதம் ஆனது.[20]

பின்னணி

தொகு

பிரித்தானியக் குடியேற்றக்கால ஆட்சியின் போது, பல இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க மிசனரிகளால் நிறுவப்பட்ட கல்வி வசதிகளால் பெரிதும் பயனடைந்தனர். இதன் விளைவாக பிரித்தானிய நிர்வாகம் பல ஆங்கிலம் பேசும் தமிழர்களை அரசு சேவை மற்றும் பிற தொழில்களுக்கு தகுதி அடிப்படையில் சேர்த்தது. 1956-இல், நாட்டின் மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும், 50% எழுத்தர் வேலைகள் தமிழர்களால் நடத்தப்பட்டன.[21] இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய வேண்டிய ஒரு பிரச்சனையாக சிங்களத் தலைவர்கள் கருதினர்.

1956-இல், பொதுவாக சிங்களம் மட்டும் சட்டம் என அழைக்கப்படும் அரசகரும மொழிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை, மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பேசினாலும், ஆங்கிலம் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது. 75 சதவீதம் பேர் பேசும் சிங்களம், 25 சதவீதம் பேர் பேசும் தமிழ் ஆகியவை குடியேற்றக் காலத்தில் பல்வேறு கொள்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டன. இந்தப் புதிய சட்டம் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களத்தை நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக மாற்றியது. சிங்களம் மட்டும் கொள்கைக்கு எதிராக தமிழர்களாலும் தேசத்தின் இடதுசாரிக் கட்சிகளாலும் நடத்தப்பட்ட போராட்டங்கள் சிங்களவர்களின் கும்பல் வன்முறையை எதிர்கொண்டன, அது இறுதியில் 1958 இனக்கலவரமாக விரிவடைந்தது. சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்துவது நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களைப் பறிகொடுத்ததாகவும், அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்கள் முழுமையாக பங்குகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் தமிழ் இலங்கையர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் குழுக்களும் உணர்ந்தன. தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அன்றைய பண்டாரநாயக்கா அரசு 1958 இல் 'நியாயமான தமிழ்மொழிப் பயன்பாட்டை' அங்கீகரித்து சிங்களம் மட்டும் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவந்தது. இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.

1960கள் முழுவதும், எதிர்ப்புகளும், அரச அடக்குமுறைகளும், மேலும் இனங்களுக்கிடையே பகைமையை உருவாக்கியது. 1972-இல், பல்கலைக்கழகங்களுக்குள் தமிழர்களின் நுழைவைக் கட்டுப்படுத்திய தரப்படுத்தல் கொள்கை, தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் உயரடுக்குகளுக்கு இடையில் ஏற்கனவே இருந்த பலவீனமான அரசியல் உறவை சீர்குலைத்தது. அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் இட ஒதுக்கீடு சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான சர்ச்சைக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. 1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்தன, இது இனப்பாகுபாட்டை மேலும் வளர்த்தது.[22] 1981-இல் யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற பொது நூலகம் சிங்கள வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டது. 1983 வரை, அரசாங்கத்திற்கும் தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இடையில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்றவற்றுக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினர் காரணமாக இருந்தனர்.

கறுப்பு யூலை காலக்கோடு

தொகு

சனி, 23 சூலை

தொகு

1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் நான்கு நான்கு பிராவோ காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து போ போ பிராவோ தாக்குதலை நடத்தியது.[23] வாகனத் தொடரணியை வழிநடத்திச் சென்ற ஜீப்பின் அடியில் சாலையோர வெடிகுண்டு வெடிக்கப்பட்டது, இதன்போது குறைந்தது இரண்டு இராணுவத்தினர் காயமடைந்தனர். அதன் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த இராணுவத்தினர் தங்கள் சக வீரர்களுக்கு உதவக் கீழே இறங்கினர். அவர்கள் மீது பதுங்கியிருந்த போராளிகள் தானியங்கி ஆயுதங்கள், கைக்குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். போராளிகள் சிலரும் கொல்லப்பட்டனர்.[24] தாக்குதல் நடத்தப்பட்டதை புலிகளின் பிராந்தியத் தளபதி கிட்டு ஒப்புக்கொண்டார்.[24] விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சீலன் என்ற சார்ல்சு அந்தோனியை இலங்கைப் படைகள் கொன்றதற்கும்,[25] அரசுப் படைகளால் தமிழ்ப் பள்ளிச் சிறுமிகளைக் கடத்தி[26] வன்புணர்வு செய்ததற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் விவரிக்கப்பட்டுள்ளது.[27]

ஞாயிறு, 24 சூலை

தொகு

புலிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.[7]

பல இடங்களில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்பட்டதால், இறந்த இராணுவத்தினரின் இறுதிச் சடங்குகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாது என இராணுவத்தின் தளபதி திச்ச வீரதுங்க உட்பட்ட இராணுவ அதிகாரிகள் முடிவெடுத்தனர்.[28][24] அதற்குப் பதிலாக கொழும்பில் பொரளை கனத்தை இடுகாட்டில் முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.[28] பிரதமர் ரணசிங்க பிரேமதாசா, வன்முறைக்குப் பயந்து, கொழும்பில் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு எதிராக இருந்தார், ஆனால் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தன அதனை நிராகரித்தார்.[29] சூலை 24 மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த இறுதிச் சடங்கில் அரசுத்தலைவர், பிரதமர் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். இந்த ஏற்பாடு, இறந்த வீரர்களை அவர்களது சொந்தக் கிராமங்களில் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வழக்கமான நடைமுறைக்கு எதிரானது.[24]

பொரளையில் உள்ள காவல் நிலையத்தில் கலகத் தடுப்புப் பிரிவினர் தயார் நிலையில் வைப்பது உட்பட இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன; ஆனால் மாலை 5 மணியளவில் உடல்கள் கொழும்புக்கு வரவில்லை.[30] இராணுவ வீரர்களின் உடல்களை தங்களிடம் ஒப்படைத்து, பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என இராணுவ வீரர்கள் வலியுறுத்தினர். நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சடலங்கள் பலாலி இராணுவ முகாமில் இன்னும் இருந்தன.[30] பலாலி விமானப்படை தளத்தில் இருந்து மாலை 6 மணிக்கு மேல் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. இது நிகழும் வேளையில், தாமதம் காரணமாக கனத்தை இடுகாட்டில் பதற்றம் அதிகரித்தது. கொழும்பு வனாத்தமுல்லை சேரியைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் உட்பட ஒரு பெரிய கூட்டம், தாக்குதல் செய்தியால் கோபமடைந்த நிலையில் கனத்தையில் திரண்டது, இது வதந்தியால் மேலும் பெரிதாக்கப்பட்டது.[30]

உடல்களை ஏற்றிச் வந்த அவ்ரோ விபானப்படை விமானம் இரவு 7:20 மணிக்கு இரத்மலானை வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது, அதற்குள் கனத்தையில் கூட்டம் 8,000க்கும் அதிகமாக இருந்தது.[30] உடல்களை மயானத்தில் அடக்கம் செய்வதை விட குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டத்தினர் விரும்பினர். கூட்டத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது, கலவரப் படை வரவழைக்கப்பட்டது. கலகத் தடுப்புப் பிரிவினர் கூட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர இராணுவம் வரவழைக்கப்பட்டது. இறுதியில் இராணுவ இறுதிச் சடங்கு நிறுத்தப்பட்டு உடல்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அரசுத்தலைவர் முடிவு செய்தார்.[31] இரத்மலானையிலிருந்து உடல்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் இராணுவத் தலைமையகத்திற்கு திருப்பி விடப்பட்டன. கனத்தையில் குழுமி இருந்த கூட்டத்திற்கு இரவு 10 மணியளவில் அரசுத்தலைவரின் முடிவு தெரிவிக்கப்பட்டது.[31] கூட்டம் அமைதியான மனநிலையில் இடுகாட்டை விட்டு விட்டு வெளியேறியது.

வெளியேறிய கூட்டத்தின் ஒரு பகுதியினர் டி. எஸ். சேனநாயக்கா சாலையில் இருந்து பொரளைக்கு அணிவகுத்துச் சென்றனர், அங்கு தமிழருக்குச் சொந்தமான நாகலிங்கம் ஸ்டோர்சு என்ற கடையை எரிந்த்து அழித்தார்கள்.[31] இவ்வேளையில் 10,000 இற்கும் அதிகமானோர் இக்கும்பலில் சேர்ந்தனர். அவர்கள் பொரளையில் உள்ள கடைகளைக் கொள்ளையடித்தனர், பொரளை சந்திக்கு அருகில் உள்ள பொரளை அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகம் உட்பட தமிழ்த் தொடர்பைக் கொண்டிருந்த அனைத்துக் கட்டடங்களையும் தாக்கிக் கொள்ளையடித்துத் தீ வைத்தனர்.[31] அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள தமிழர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டன. கூட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்; வானத்தை நோக்கிச் சுட்டனர்.[32] பின்னர் தெமட்டகொடை, மருதானை, நாரகேன்பிட்டி, பாலத்துறை, திம்பிரிகசாய ஆகிய திசைகளில் கூட்டம் கலைந்து, அங்கு தமிழர்களின் சொத்துக்களை தாக்கி சூறையாடி தீ வைத்தனர்.[32]

திங்கள், 25 சூலை

தொகு

1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாணிலையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.[32] அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது.[32] தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின.[32] அன்று மாலை 6 மணி முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[33][34] சிங்களக் கும்பல் ஒல்கொட் மாவத்தை வழியே சென்று கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இருந்த 'ஆனந்த பவன்', 'இராஜேசுவரி ஸ்டோர்', 'அஜந்தா ஓட்டல்' ஆகியவற்றிற்கும் தீ வைத்தனர்.[32]

அமைச்சர்கள் பலர் அன்று காலை கொழும்பின் பல்வேறு இடங்களில் தமிழர் குடியிருப்புகளைத் தாக்குமாறு கும்பல்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர்.[8] ரணசிங்க பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அடியாளான சிறில் மத்தியூ கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும், கொழும்பு நகர முதல்வரின் அடியாட்கள், மாநகரசபைப் பணியாளர்கள், போக்குவரத்து அமைச்சர் எம். எச். முகம்மதின் ஆட்கள் பொரளையிலும், மாவட்ட அமைச்சர் வீரசிங்க மல்லிமாராச்சியின் அடியாட்கள் கொழும்பு வடக்கிலும், துணை அமைச்சர் அனுர பஸ்தியானின் ஆட்கள் கொழும்பு தெற்கிலும் தமிழ்ர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.[8]

காலை 10 இற்கிடையில், பாலத்துறை, கிருலப்பனை, கொட்டாஞ்சேனை, மருதானை, முகத்துவாரம், நாரகேன்பிட்ட, கொம்பனித் தெரு, வனாத்தமுல்லை உட்பட பெரும்பாலான பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. கம்பிகள், சமையலறைக் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் தெருக்களில் சுற்றித் திரிந்து, தமிழர்களைத் தாக்கிக் கொன்றது.[32] அடுத்ததாக, யாழ்ப்பாணத் தமிழ்ர் பெருமளவு வசிக்கும் வெள்ளவத்தை, தெகிவளை போன்ற பகுதிகளில் வன்முறை பரவியது. பெருமளவு வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன.[32] கொழும்பு பிரதான வீதி, ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள கடைகளும் தாக்கப்பட்டன.[35] அன்டர்சன் தொடர் குடியிருப்பு, எல்விட்டிகல, டொரிங்டன் திம்பிரிகசாய தொடர் குடியிருப்புகளில் இருந்த தமிழ் வீடுகள் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. மிகவும் பாதுகாப்பானதெனக் கருதப்பட்ட கறுவாத்தோட்டத்தில் இருந்த தமிழ்ர் வீடுகளும் தாக்கப்பட்டன. கடவத்தை, களனி, நுகேகொடை, இரத்மலானை போன்ற புறநகர்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.[36] இந்தியத் தூதரின் வீடும் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.[34] மத்தியான வேளையளவில், ஏறக்குறைய நகரின் அனைத்துப் பகுதிகளும் தீயில் மூழ்கின. மாலை 6:00 மணிக்கு அமுலாகவிருந்த ஊரடங்கு பிற்பகல் 2:00 மணிக்கு கொண்டுவரப்பட்டது. நீர்கொழும்பிலும் தமிழ்ர் பகுதிகள் தாக்கப்பட்டதை அடுத்து, கம்பகா மாவட்டத்திலும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.[36] களுத்துறையில் டி.கே.வி.எஸ் என்ற வணிக நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் உரிமையாளரான தமிழர் மாடியில் இருந்து குதித்துத் தப்ப முயன்றார், ஆனால் வன்முறைக் கும்பல் அவரை மீண்டும் தீப்பற்றிய கடைக்குள் எறிந்து அவரைக் கொன்றனர்.[37] ஊரடங்கு சட்டம் களுத்துறை மாவட்டத்திற்கும் நீடிக்கப்பட்டது. காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலோ அல்லது விரும்பாததாலோ, காவல்துறைக்கு உதவ இராணுவம் வரவழைக்கப்பட்டது.[38]

கலவரக்காரர்கள் தமிழர்களைக் குறிவைக்க வாக்காளர் பதிவுப் பட்டியலைப் பயன்படுத்தத் தொடங்கினர்.[37] தமிழர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அடையாளம் காணும் கும்பல்களிடம் தேர்தல் பட்டியல்கள் கைவசம் இருந்தமை, அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பைக் குறிக்கிறது.[39] சனாதிபதி ஜெயவர்தன பின்னர் ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டது போல், "நடந்த கலவரங்கள், கொள்ளைகளில் ஒரு அமைப்பினால் திட்டமிட்ட முறையில் கவனிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது."[40] சொய்சா குடியிருப்பில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான 92 குடியிருப்புகளில் 81 குடியிருப்புகள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.[37] தமிழர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகளைக் கொண்ட இரத்மலானை கைத்தொழில் பகுதி மீது இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது. காலி வீதியில் இருந்த ஜெட்ரோ கார்மென்ட்சு, டாட்டா கார்மென்ட்சு முற்றிலும் எரிந்து நாசமானது.[37] பாண்ட்ஸ், எஸ்-லான், ரீவ்ஸ் கார்மென்ட்சு, ஹைடோ கார்மென்ட்சு, ஹைலக் கார்மென்ட்சு, ஏஜிஎம் கார்மென்ட்சு, மன்ஹாட்டன் கார்மென்ட்சு, புளோய் பெக், பெரெக், மாஸ்கான்ஸ் ஆசுபெசுட்டசு ஆகியவை தாக்கியழிக்கப்பட்ட ஏனைய தொழிற்சாலைகள் ஆகும்.[37] குண்டன்மால்ஸ், ஆக்ஸ்போர்டு மற்றும் பேக்சன் கார்மென்ட்சு போன்ற இந்தியருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் தாக்கப்படவில்லை, இது வேண்டுமென்றே இலங்கைத் தமிழர் இலக்குகளையே வன்முறைக் கும்பல் பின்தொடர்ந்தது என்ற கருத்துக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.[37] இரத்மலானையில் 17 தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கேப்பிடல் மகாராஜா இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இரத்மலானாவில் உள்ள அவர்களது ஆறு தொழிற்சாலைகளும், பேங்சால் தெருவில் உள்ள அவர்களின் தலைமையகமும் அழிக்கப்பட்டன.[41][42] வன்முறைக் கும்பல் கல்கிசையில் உள்ள டில்லிஸ் பீச் ஹோட்டலுக்கு தீவைத்து அன்றைய நாளை முடித்தது.[37]

கொழும்பில் இருந்த பல தமிழர்கள் ஊரை விட்டு வெளியேறிய போது, பல சிங்களவர்களும் முசுலிம்களும் வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பல தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றினர். அடுத்தடுத்த நாட்களில் பல தமிழர்கள் அரசாங்க கட்டிடங்கள், கோவில்கள் மற்றும் சிங்கள மற்றும் முஸ்லிம் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.[38][43][44]

காலி, கேகாலை, திருக்கோணமலை, வவுனியா ஆகிய நகரங்களுக்கும் வன்முறைகள் பரவின.[45]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்

தொகு

சூலை 25 இல் நடந்த மிக மோசமான நிகழ்வு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றது.[38][46] பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 தமிழ்க் கைதிகள், சிங்களக் கைதிகளால் கத்திகள் மற்றும் தடிகளால் தக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். சிறை அதிகாரிகள் அறைகளின் சாவிகள் சிங்களக் கைதிகளுக்கு கிடைக்க அனுமதித்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறினர்; ஆனால் அடுத்தடுத்த விசாரணையில், சிறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சாவிகள் திருடப்பட்டதாகக் கூறினர்.[38]

செவ்வாய், 26 சூலை

தொகு

சூலை 26 அன்று வெள்ளவத்தை, தெகிவளையில் கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்தன. தெகிவளை இரத்னாகர வீதியில் இருந்த 53 வீடுகளில், தமிழர்கள் வசித்து வந்த 24 வீடுகள் எரிக்கப்பட்டன.[41] தமிழர் வாடகைக்குக் குடியிருந்த சிங்களவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை எரிக்காமல் உடமைகளை மட்டும் வெளியே அகற்றி அவற்றை எரித்தனர்.[41] நகரின் பல பகுதிகளில், இராணுவத்தினரும் காவல்துறையினரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும், மக்கள் கொல்லப்பட்டதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.[41]

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கண்டிக்கும் வன்முறை பரவியது.[46] பிற்பகல் 2:45 மணியளவில் பேராதனை வீதியிலுள்ள டெல்ட்டா மருந்தகம் தீப்பற்றி எரிந்தது.[45] அதன் பின்னர், லக்சலா கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள தமிழருக்குச் சொந்தமான கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது; மேலும் வன்முறை காசில் தெரு, கொழும்பு தெரு வரை பரவியது.[45] காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது, ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எரிபொருட்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் கண்டியில் கோட்டை, கொழும்பு, கிங்ஸ், திருகோணமலை வீதிகளில் உள்ள தமிழ்க் கடைகளைத் தாக்கத் தொடங்கியது.[45] பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள கம்பளைக்கு சென்றது.[45] சூலை 26 மாலையே கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[45]

திருகோணமலையில், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதாகவும், காரைநகர் கடற்படைத் தளம் அழிக்கப்பட்டதாகவும், நாக விகாரை தேதப்படுத்தப்பட்டதாகவும் பொய்யான வதந்திகள் பரவ ஆரம்பித்தன.[47] திருகோணமலை கடற்படைத் தளத்தை தளமாகக் கொண்ட கடற்படையினர் மத்திய வீதி, கப்பல்துறை வீதி, பிரதான வீதி மற்றும் வடக்கு கடற்கரைச் சாலையைத் தாக்கி வெறித்தனமாகச் சென்றனர்.[48] அவர்கள் தங்கள் தளத்திற்குத் திரும்புவதற்கு முன் 170 கட்டடங்கள் அல்லது வீடுகளுக்குத் தீ மூட்டினர்.[48] திருஞானசம்பந்தன் வீதியிலுள்ள சிவன் இந்து ஆலயமும் தாக்கப்பட்டது.[48]

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் சூலை 26 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொள்ளைகள் அதிகமாக இடம்பெற்றன.[46] அன்று மாலைக்குள், காவல்துறை மற்றும் இராணுவப் பிரிவுகள் அதிக அளவில் வீதிகளில் சுற்றுப்பணிகளில் ஈடுபட்டு கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதால், கும்பல் வன்முறை குறையத் தொடங்கியது.[49] திருநெல்வேலித் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் இரவு ஊரடங்கு உத்தரவின் போது அமைதியாக அடக்கம் செய்யப்பட்டன.[49]

புதன், 27 சூலை

தொகு

மத்திய மாகாணத்தில், நாவலப்பிட்டி, அட்டன் வரை வன்முறை பரவியது.[48] அதற்கு அண்டைய ஊவா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான பதுளை இதுவரை அமைதியாக இருந்தது; ஆனால் சூலை 27 அன்று காலை 10:30 மணியளவில் மணிக்கூட்டு கோபுரத்தின் முன் தமிழர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டது.[48] நண்பகலில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நகரின் வணிகப் பகுதி வழியாக சென்று கடைகளுக்கு தீ வைத்தது.[48] கலவரம் பின்னர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியது, மேலும் பல தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.[48] பின்னர் அந்தக் கும்பல் தாங்கள் திருடிய வாகனங்களிலும் பேருந்துகளிலும் நகரை விட்டு பண்டாரவளை, ஆலி-எல, வெலிமடை ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு தொடர்ந்து சொத்துக்களுக்கு தீ வைத்து எரித்தது.[50] கலவரம் இரவு நேரத்தில் லுணுகலை வரை பரவியது.[50]

கொழும்பில் சூலை 27 அன்று பகல்நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, அந்த நாள் சற்று அமைதியாகத் தொடங்கியது. ஆனால், கோட்டை தொடருந்து நிலையத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்றின் தண்டவாளத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, தொடருந்து நிறுத்தப்பட்டது. தொடருந்தில் இருந்த சிங்களப் பயணிகள் தமிழ்ப் பயணிகளைத் தாக்கத் தொடங்கினர், 12 பேர் கொல்லப்பட்டனர்.[50] சில தமிழர்கள் ரயில் தண்டவாளத்தில் உயிருடன் எரிக்கப்பட்டனர்.[50]

சூலை 25 இல் வெலிக்கடை சிறைச்சாலைத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் சேப்பல் கட்டடத்தில் இருந்து இளைஞர் குற்றவாளிகள் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். சூலை 27 அன்று மாலை, சிங்களக் கைதிகள் காவலர்களைத் தாக்கி, கோடரி மற்றும் விறகுகளால் ஆயுதம் ஏந்தி, அந்தத் தமிழ்க் கைதிகளைத் தாக்கினர். பதினைந்து தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர்.[50][46][51] யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் ஒரே நாளில் நடந்த கலவரத்தில் இரண்டு தமிழ் கைதிகளும் மூன்றாவது கைதியும் கொல்லப்பட்டனர்.[46][52]

வியாழன், 28 சூலை

தொகு

சூலை 28 அன்றும் பதுளை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது, மேலும் கலவரம் லுணுகலையில் இருந்து பசறை வரை பரவியது.[53] நுவரெலியா மற்றும் சிலாபத்திலும் கலவரம் ஏற்பட்டது.[53] ஆனால் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலையில் வன்முறைகள் குறைந்தன.[53]

அரசுத்தலைவர் ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவையும் சூலை 28 அன்று அவசர அமர்வில் கூடினர். ஜெயவர்தன பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அதில் அவர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.[46][54][53] 1976 ஆம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி, மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்த போது, சுதந்திர தமிழ் அரசுக்காக விடுத்த அழைப்புகளால், "சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வளர்ந்த ஆழமான மோசமான உணர்வும் சந்தேகமும்" வன்முறைக்கு காரணம் என்று ஜெயவர்தன குற்றம் சாட்டினார்.[55] தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. "சிங்கள மக்கள் எதிர்வினையாற்றிய விதம்" தமிழ்ப் போராளிகள் செய்த வன்முறைக்கே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.[55] 2,500 ஆண்டுகளாக ஒரே தேசமாக இருந்த ஒரு நாட்டைப் பிரிப்பதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள் என்று சபதம் செய்த ஜெயவர்தனா, அரசாங்கம் "சிங்கள மக்களின் கூக்குரலுக்கு இணங்கும்" மற்றும் தேசத்தைப் பிளவுபடுத்த முயலும் எந்தக் கட்சியும் தடை செய்யப்படும் என்று அறிவித்தார்.[56][52]

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சூலை 28 அன்று ஜெயவர்தனவை அழைத்து கலவரம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை அவருக்குத் தெரிவித்தார்.[57] வெளிவிவகார அமைச்சர் பி. வி. நரசிம்மராவைத் தனது சிறப்புத் தூதராக ஜெயவர்தனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஜெயவர்தனே அதனை ஏற்றுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ராவ் இலங்கைக்கு வந்தார்.[57]

வெள்ளி, 29 சூலை

தொகு

சூலை 29 வெள்ளிக்கிழமை கொழும்பு அமைதியாக இருந்தது. நகரத்தில் உள்ள பல அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை தமிழ் மக்கள் பார்வையிட்டனர். காலை 10:30 மணியளவில் காஸ் வர்க்சு வீதியில் இரண்டு சிங்கள இளைஞர்கள் சுடப்பட்டனர்.[58] அடம் அலி கட்டடத்தில் இந்த இளைஞர்கள் தமிழ் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.[58] கட்டடம் இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறையினரால் சூழப்பட்டது, அவர்கள் கட்டிடத்தின் மீது துணை இயந்திரத் துப்பாக்கிகளினால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[58] ஒரு உலங்குவானூர்தியும் கட்டிடத்தின் மீது சுட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டிடத்திற்குள் நுழைந்த போது உள்ளே தமிழ் புலிகள், ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை.[59] எனினும், இராணுவம் தமிழ் புலிகளுடன் போரில் ஈடுபட்டதாக கொழும்பில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.[59] புலிகளை எதிர்த்துப் போரிடத் தயாராக கோடரிகள், செங்கல்கள், இரும்புக் கம்பிகள், கத்திகள் மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களுடன் தெருக்களில் கும்பல்களாக சிங்கள் மக்கள் கூடத் தொடங்கினர்.[60][49] வாகனங்களை நிறுத்தித் தமிழர்களைத் தேடினர். அவர்கள் கண்டறிந்த தமிழர்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டனர்.[60] கிருள வீதியில் ஒரு தமிழர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[60] அத்திடிய வீதியில் பதினொரு தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.[60] இரண்டு தமிழர்களினதும், மூன்று முசுலிம்களினதும் சடலங்கள் இருந்த ஒரு வாகனத்தை அதே வீதியில் காவல்துறையினர் [60] 15 கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[51] ஜூலை 29 பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆகத்து 1 திங்கள் காலை 5 மணி நீக்கப்பட்டது.[61]

பதுளை, கண்டி, திருகோணமலை நகரங்களில் அன்று அமைதியாகக் காணப்பட்டது. நுவரெலியாவில் நள்ளிரவு முதல் வன்முறை பரவியது. தமிழருக்குச் சொந்தமான கணேசன் மற்றும் சிவலிங்கம் கடைகள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.[61] இது சந்தை தெரு, லாசன் வீதிக்கும் பரவியது.[61] கேகாலை மாவட்டத்தில் தெகியோவிட்ட முதல் தெரணியகல, அவிசாவளை வரை வன்முறை பரவியது.[61] மாத்தறை மாவட்டத்தில் தெனியாய மற்றும் மொரவாக்க பிரதேசங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.[61] சிலாபத்திலும் வன்முறைகள் இடம்பெற்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் உலங்குவானூர்தியில் கண்டிக்கு செல்வதற்கு முன்னர் அரசுத்தலைவர் ஜனாதிபதி ஜெயவர்தன, வெளிவிவகார அமைச்சர் ஏ. சீ. எஸ். அமீது ஆகியோருடன் கலந்துரையாடினார்.[57][61]

சனி, 30 சூலை

தொகு

சூலை 30 இல் நுவரெலியா, கந்தப்பளை, காவ எலிய, மாத்தளை ஆகிய இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன.[61] நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. வன்முறைகளைத் தூண்டியமைக்காக அதே நாள் இரவில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளுக்கு அரசு தடை வித்தது.[61] ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[62]

அரசாங்கத்தின் பதில்

தொகு

உண்மையான கலவரம் தொடங்குவதற்கு முன்பே இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. தமிழ் கிளர்ச்சிக் குழுக்களின் உருவாக்கத்துடன், பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே தமிழர்களுக்கு எதிரான உணர்வு எழுந்தது. இராணுவத்தினரின் உடல்கள் புதைக்கப்படவிருந்த கொழும்பு கனத்தை இடுகாட்டில் திரண்டிருந்த சிங்களக் கும்பல்களால் முதலில் வன்முறை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பின்னர் கலவரங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடையவர்களும் அவர்களுடன் இணைந்தனர்.[63] கலவரத்தின் ஆரம்பக் கட்டங்களில், உள்ளூர் காவல்துறையினரும் இராணுவத்தினரும் எதிர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் கும்பலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.[64] "பல இடங்களில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் கூட கலவரக்காரர்களுடன் இணைந்தனர்" என்று பல நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன.[65] இருப்பினும், தாக்குதல்கள் தொடங்கி 3 நாட்களின் பின்னரே சூலை 26 பின்னேரம் காவல்துறையும் இராணுவமும் தெருக்களில் இறங்கி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தன. நாட்டின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீடித்தது. சூலை 29 அன்று, 15 சிங்களக் கொள்ளையர்களை பொலிசார் சுட்டுக் கொன்றபோது, ​​ஒரு சிறு கலவரம் வெடித்தது.

இலங்கை அரசாங்கம் படுகொலையின் போது உடந்தையாக இருந்ததாகவும், சிங்களக் கும்பல்களை ஆதரித்து ஊக்குவித்ததாகவும் பல்வேறு தரப்புகளிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.[66][67][68] அரசுத்தலைவர் ஜெயவர்தன வன்முறையைக் கண்டிக்கத் தவறிவிட்டார் என்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கக் கூடத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் அவரோ வன்முறையைத் தமிழர்கள் தங்கள் மீது கொண்டு வந்ததற்காகக் குற்றம் சாட்டினார்.[65] வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறினார், கும்பல்களை சிங்கள மக்களின் வீரர்களாகப் புகழ்ந்தார்.[69] கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 சூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அவர் அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்:

யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்....[70]

கலவரத்தைத் தடுப்பதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சில தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்திய போதிலும், கலவரக்காரர்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தமிழ் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் ஆரம்பக் கட்டங்களிலிருந்தே முக்கிய எதிர் நடவடிக்கைகளை எடுத்தது என்று அரசாங்கம் கூறி வந்தது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, தாக்குதல்கள் கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டன; தொடருந்துகள், கட்டடங்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை ஆரம்ப இலக்குகளாக இருந்தன. கொழும்பில் உள்ள வீடற்ற 20,000 தமிழர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்கு பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஒரு குழுவை அமைத்தார். இந்த தற்காலிகத் தங்குமிடங்கள் ஐந்து பள்ளிக்கூடக் கட்டடங்களும் ஒரு விமான தங்கும் இடமும் ஆகும். அகதிகளின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக அதிகரித்த பின்னர், அரசாங்கம், இந்தியாவின் உதவியுடன், தமிழர்களை வடக்கே கப்பல்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது.[49]

நேரடி சாட்சிகள்

தொகு

முக்கியமான வீதிச் சந்திப்புகளில் பெட்ரோல் ஏந்திய கும்பல் வாகன ஓட்டிகளை நிறுத்துவதைக் காண முடிந்தது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் இன அடையாளத்தை உறுதிசெய்த பிறகு, அவர்கள் வாகனங்களை நிறுத்தினர், உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநர்கள், பயணிகளுடன் வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழ்ப் பயணிகளை அடையாளம் கண்டு பேருந்துகளை நிறுத்தும் கும்பல்களும் காணப்பட்டன. ஒரு நோர்வே சுற்றுலாப் பயணி, 20 பேருடன் உள்ளே இருந்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததைக் கண்டார், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.[63][71] கலவரத்தில் இருந்து தப்பிய ஒரு பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தின்படி, கலவரக்காரர்களில் புத்த பிக்குகளும் அடங்குவர்.[72]

தமிழ் கார்டியன் பல்வேறு ஆதாரங்களில் இருந்து அதிகமான நேரில் கண்ட சாட்சிகளை பட்டியலிட்டுள்ளது:[73]

இலண்டனின் த டெயிலி டெலிகிராப் (சூலை 26) எழுதியது:

வாகன ஓட்டிகள் கற்களை வீசியும், தடியடி நடத்தியும் கார்களில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் கத்திகள் மற்றும் கோடரிகளால் வெட்டப்பட்டனர். தமிழ் சிறுபான்மையினரைத் தேடிச் சென்ற சிங்கள இளைஞர்களின் கும்பல் தெருக்களில் புகுந்து வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை சூறையாடி, தீ வைத்து எரித்தனர். கொழும்பு கண் வைத்தியசாலைக்கு அருகாமையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற தமிழ் சைக்கிள் ஓட்டுநர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அவரை சைக்கிளில் இருந்து இறக்கி, பெட்ரோலை ஊற்றி எரித்தனர். அவர் அலறியடித்துக்கொண்டு தெருவில் ஓடியபோது, கும்பல் மீண்டும் அவரைத் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

The Tragedy of Sri Lanka, என்ற தனது நூலில் வில்லியம் மெக்கோவன் எழுதுகிறார்:

ஒரு பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு கும்பல் அதை முற்றுகையிட்டபோது, ஒரு சிறு பையன் 'உறுப்பு இல்லாத மரணத்திற்கு' வெட்டப்பட்டதை பயணிகள் பார்த்தனர். பேருந்து ஓட்டுநருக்கு ஒரு தமிழரை விட்டுக்கொடுக்க உத்தரவிடப்பட்டது. தனது நெற்றியில் இருந்த குங்கும அடையாளத்தை அழிக்க முயன்ற ஒரு பெண்ணை அந்த ஓட்டுநர் சுட்டிக் காட்டினார். உடைந்த போத்தல் ஒன்றினால் அப்பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, மக்கள் கைதட்டி நடனமாடினர். அதன் பின்னர் அவர் எரிக்கப்பட்டார். மற்றொரு நிகழ்வில், 18, 11 வயதுடைய இரண்டு சகோதரிகள் தலை துண்டிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் எரிக்கப்பட்டனர். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே, புத்த பிக்குகள் வரிசையாகத் தோன்றி, ஆயுதங்களுடன் துள்ளிக் குதித்து, ஒரு மயக்கமான குரல் எழுப்பி, அனைத்துத் தமிழர்களையும் கொல்லுமாறு சிங்களவர்களை அழைத்தனர்.

இலண்டனின் டெய்லி எக்சுபிரசு (சூலை 29) எழுதுகிறது:

நோர்வேயின் இசுட்டாவஞ்சரில் உள்ள திருமதி எலி இசுக்கார்சுட்டீன் என்பவர், தானும் தனது 15 வயது மகள் கிறிஸ்டனும் ஒரு படுகொலையைக் கண்டது எப்படி என்று கூறினார். கொழும்பில் தமிழர்கள் நிறைந்த குறும் பேருந்து ஒன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டது. சிங்களக் கும்பல் ஒன்று பேருந்து மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்தது. வாகனத்தின் கதவை அடைத்து தமிழர்களை வாகனத்தை விட்டு செல்ல விடாமல் தடுத்தனர். 'சுமார் 20 தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்தனர்.' திருமதி இசுக்கார்சுட்டீன் மேலும் கூறியதாவது: 'உத்தியோகபூர்வ உயிரிழப்பு புள்ளிவிவரங்களை எங்களால் நம்ப முடியவில்லை. நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான, ஏற்கனவே கொல்லப்பட்டிருக்க வேண்டும். காவல்துறை (95% சிங்களவர்கள்) கும்பலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. இரக்கம் இல்லை. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையைத் தடுக்க காவல்துறை எதுவும் செய்யவில்லை.'

இலண்டனின் தி டைம்ஸ் ஆகத்து 5 அன்று, "...இராணுவ அதிகாரிகள் கொழும்பில் தமிழ் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்படுவதையும் சூறையாடுவதையும் தீவிரமாக ஊக்குவித்தனர்" என்றும், "இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவோ அல்லது தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. . பல சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் கடைகளை சூறையாடுவதில் பங்கு பெற்றனர்." என்று தெரிவித்தது.

தி எக்கனாமிஸ்ட் ஆகத்து 6 இல் எழுதியது: "...ஆனால் பல நாட்களாக படையினரும் காவல்துறையினரும் அதிகமாக இல்லை; அவர்கள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்தனர், அல்லது சில சந்தர்ப்பங்களில், தாக்குதல் நடத்தியவர்களுக்கு வெளிப்படையாகத் துணைபுரிந்தனர். பல நேரில் பார்த்த சாட்சிகள், சிப்பாய்களும் காவலர்களும் கொழும்பு எரியும் போது அங்கு நின்றதை உறுதிப்படுத்துகின்றனர்."

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையத்தின் பவுல் சீகார்ட் இலங்கையில் கூறினார்: கலவரம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு:

"தெளிவாக இது (சூலை 1983 தாக்குதல்) சிங்கள மக்களிடையே இனவாத வெறுப்பின் தன்னிச்சையான எழுச்சி அல்ல - அல்லது சில பகுதிகளில் கூறப்பட்டது போல, முந்தைய நாள் விடுதலைப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பிரபலமான பதில் அல்ல. கலவரம் தொடங்கும் வரை நாளிதழ்களில் கூட செய்தி வெளியிடப்படவில்லை. இது திட்டமிட்ட செயல்களின் ஒரு தொடராகும், ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டது, முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது".[74]

இழப்பு மதிப்பீடுகள்

தொகு

உயிரிழப்புகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. அரசாங்கம் ஆரம்பத்தில் வெறும் 250 தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினாலும், பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இலங்கைத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என நம்பப்படும் 400 முதல் 3,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பிடுகின்றன.[14][16] வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டும் 53 அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இறுதியில் இலங்கை அரசாங்கம் இறந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 300 பேர் எனக் கூறியது.[75][76]

18,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் அழிக்கப்பட்டன, மேலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு ஐரோப்பா, ஆத்திரேலியா மற்றும் கனடாவிற்கு இடம்பெயர்ந்தனர்.[75][77] பல தமிழ் இளைஞர்களும் தமிழ் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் குழுக்களில் இணைந்தனர்.

வழக்குகளும் இழப்பீடுகளும்

தொகு

ஐக்கிய தேசியக் கட்சி அரசைத் தொடர்ந்து வந்த மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு, கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டதாகவும், வீடுகள் உட்பட 18,000 நிறுவனங்கள் அழிக்கப்பட்டதாகவும் மதிப்பிட்டது. இழப்பீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. இதுவரை எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை அல்லது சம்பந்தப்பட்ட எவருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.[75]

நினைவுகூரல்கள்

தொகு

உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையே சூலை மாதம் துக்க, நினைவுகூரல் காலமாக மாறியுள்ளது, இது தமிழர்களின் இழப்பை ஒன்றுகூடி நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.[20] கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜெர்மனி, பிரான்சு, பிரித்தானியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல உலக நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

 
2009 இல் இலண்டன், திரபல்கர் சதுக்கத்தில் அனுசரிக்கப்பட்ட கறுப்பு யூலையின் 26வது ஆண்டு நினைவு தினத்தின் காட்சிப்படம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Visual Evidence I: Vitality, Value and Pitfall – Borella Junction, 24/25 July 1983". 29 October 2011.
  2. "Black July 1983 remembered". Tamil Guardian. 23 July 2014. http://www.tamilguardian.com/article.asp?articleid=11617. 
  3. Jeyaraj, D. B. S. (24 July 2010). "Horror of a pogrom: Remembering "Black July" 1983". dbsjeyaraj.com. Archived from the original on 27 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 October 2010.
  4. Community, Gender and Violence, edited by Partha Chatterjee, Pradeep Jeganathan
  5. Rajan Hoole, Black July: Further Evidence Of Advance Planning https://www.colombotelegraph.com/index.php/black-july-further-evidence-of-advance-planning/
  6. Rajan Hoole, Sri Lanka’s Black July: Borella, 24th Evening https://www.colombotelegraph.com/index.php/sri-lankas-black-july-borella-24th-evening/
  7. 7.0 7.1 T. Sabaratnam, Pirapaharan, Volume 2, Chapter 2 – The Jaffna Massacre (2003)
  8. 8.0 8.1 8.2 T. Sabaratnam, Pirapaharan, Volume 2, Chapter 3 – The Final Solution (2003)
  9. T. Sabaratnam, Pirapaharan, Volume 2, Chapter 4 – Massacre of Prisoners (2003)
  10. T. Sabaratnam, Pirapaharan, Volume 2, Chapter 5 – The Second Massacre (2003)
  11. Nidheesh, MK (2 September 2016). "Book review: The Assassination of Rajiv Gandhi by Neena Gopal". Live Mint. https://www.livemint.com/Leisure/vGvHn61alReQUEO4HV42EP/Book-review-The-Assassination-of-Rajiv-Gandhi-by-Neena-Gopa.html. 
  12. E.M. Thornton & Niththyananthan, R. – Sri Lanka, Island of Terror – An Indictment, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 9510073 0 0), 1984, Appendix A
  13. "Twenty years on - riots that led to war". பிபிசி. சூலை 23, 2003. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 23, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. 14.0 14.1 14.2 Frances Harrison (23 July 2003). "Twenty years on – riots that led to war". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3090111.stm. 
  15. 15.0 15.1 Aspinall, Jeffrey & Regan 2013, ப. 104.
  16. 16.0 16.1 16.2 16.3 Buerk, Roland (23 July 2008). "Sri Lankan families count cost of war". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7521197.stm. 
  17. "Peace and Conflict Timeline: 24 July 1983". Centre for Poverty Analysis. Archived from the original on 29 July 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013.
  18. "ICJ Review no. 31 (December 1983)" (PDF). p. 24. Archived (PDF) from the original on 28 March 2014.
  19. Tambiah, Stanley Jeyaraja (1986). Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-78952-7.
  20. 20.0 20.1 "Black July '83". Blackjuly83.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
  21. Neil DeVotta, Ethnolinguistic Nationalism and Ethnic Conflict in Sri Lanka, p73
  22. Rajasingham-Senanayake, Darini (May 2001). "Dysfunctional Democracy and the Dirty War in Sri Lanka". AsiaPacific Issues (East–West Center) (52). http://www.eastwestcenter.org/sites/default/files/private/api052.pdf. பார்த்த நாள்: 1 August 2006. 
  23. Dissanayake 2004, ப. 63–64.
  24. 24.0 24.1 24.2 24.3 O'Ballance 1989, ப. 21.
  25. Skutsch, Carl (7 November 2013). Encyclopedia of the World's Minorities (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135193959. Tensions reached a breaking point on July 23, 1983 when the LTTE ambushed and killed 13 Sinhalese soldiers in retaliation for the murder of Charles Antony, the LTTE's second-in-command.
  26. Tambiah, Stanley (1986). Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy. Chicago and London: The University of Chicago Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226789521. An explosive and as yet unproven allegation was the rape in mid-July of Tamil female students, two of whom subsequently committed suicide.
  27. Pavey, Eleanor (13 May 2008). "The massacres in Sri Lanka during the Black July riots of 1983". Online Encyclopedia of Mass Violence (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016. 1983 கலவரத்தின் தோற்றம் தமிழ் கிளர்ச்சியாளர்களால் 13 சிங்கள இராணுவத்தினரைக் கொன்றது என்று பரவலாகக் கூறப்பட்டாலும், தமிழ்க் கிளர்ச்சியாளர்கள் மூன்று தமிழ்ப் பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததே தமிழ் கிளர்ச்சியாளர்களை அரசாங்கப் படைகளைத் தாக்க வழிவகுத்தது என்று பல தமிழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் 1983 சூலை 18 இல் இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
  28. 28.0 28.1 Dissanayake 2004, ப. 66.
  29. Cooray, B. Sirisena (2002). President Premadasa and I: Our Story. Dayawansa Jayakody & Company. pp. 60–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-551-280-9.
  30. 30.0 30.1 30.2 30.3 Dissanayake 2004, ப. 67.
  31. 31.0 31.1 31.2 31.3 Dissanayake 2004, ப. 68.
  32. 32.0 32.1 32.2 32.3 32.4 32.5 32.6 32.7 Dissanayake 2004, ப. 69.
  33. "Travellers warned on Sri Lankan strife". The Free Lance–Star/அசோசியேட்டட் பிரெசு: p. 11. 26 July 1983. https://news.google.com/newspapers?nid=9fRKRCJz75UC&dat=19830726&printsec=frontpage&hl=en. 
  34. 34.0 34.1 "Mobs burn shops in Sri Lanka". தி டைம்ஸ்/ராய்ட்டர்ஸ்: p. 1. 26 July 1983. http://find.galegroup.com/ttda/infomark.do?&source=gale&prodId=TTDA&userGroupName=kccl&tabID=T003&docPage=article&searchType=BasicSearchForm&docId=CS17403130&type=multipage&contentSet=LTO&version=1.0. 
  35. Dissanayake 2004, ப. 69–70.
  36. 36.0 36.1 Dissanayake 2004, ப. 70.
  37. 37.0 37.1 37.2 37.3 37.4 37.5 37.6 Dissanayake 2004, ப. 71.
  38. 38.0 38.1 38.2 38.3 O'Ballance 1989, ப. 23.
  39. Pavey, Eleanor (13 May 2008). "The massacres in Sri Lanka during the Black July riots of 1983". Online Encyclopedia of Mass Violence (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016. The systematic and well-planned nature of the attacks against the Tamils – to which the government itself later alluded – ruled out the spontaneous outburst of anti-Tamil hatred within the Sinhalese masses. Moreover, the possession of electoral lists by the mobs – which enabled them to identify Tamil homes and property – not only implied prior organization, for such electoral lists could not have been obtained overnight, but it also pointed to the cooperation of at least some elements of the government, who had been willing to provide the mobs with such information.
  40. Pavey, Eleanor (13 May 2008). "The massacres in Sri Lanka during the Black July riots of 1983". Online Encyclopedia of Mass Violence (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
  41. 41.0 41.1 41.2 41.3 Dissanayake 2004, ப. 72.
  42. "The Group". Capital Maharaja. Archived from the original on 31 July 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013.
  43. Piyadasa, L. (1986). Sri Lanka: The Holocaust and After. Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-906334-03-9.
  44. "Anti-Tamil Riots and the Political Crisis in Sri Lanka". Bulletin of Concerned Asian Scholars 16 (1): 27–29. January–March 1984. doi:10.1080/14672715.1984.10409780. http://criticalasianstudies.org/assets/files/bcas/v16n01.pdf. பார்த்த நாள்: 1 August 2006. 
  45. 45.0 45.1 45.2 45.3 45.4 45.5 Dissanayake 2004, ப. 74.
  46. 46.0 46.1 46.2 46.3 46.4 46.5 "Sri Lanka ethnic riots kill at least 88 people". Telegraph Herald/United Press International: p. 12. 28 July 1983. https://news.google.com/newspapers?nid=aEyKTaVlRPYC&dat=19830728&printsec=frontpage&hl=en. 
  47. Dissanayake 2004, ப. 74–75.
  48. 48.0 48.1 48.2 48.3 48.4 48.5 48.6 Dissanayake 2004, ப. 75.
  49. 49.0 49.1 49.2 49.3 O'Ballance 1989, ப. 24.
  50. 50.0 50.1 50.2 50.3 50.4 Dissanayake 2004, ப. 76.
  51. 51.0 51.1 O'Ballance 1989, ப. 25.
  52. 52.0 52.1 Hamlyn, Michael (29 July 1983). "Colombo acts to appease mobs". தி டைம்ஸ்: p. 1. http://find.galegroup.com/ttda/infomark.do?&source=gale&prodId=TTDA&userGroupName=kccl&tabID=T003&docPage=article&searchType=BasicSearchForm&docId=CS18582781&type=multipage&contentSet=LTO&version=1.0. 
  53. 53.0 53.1 53.2 53.3 Dissanayake 2004, ப. 77.
  54. Wilson 2001, ப. 113–114.
  55. 55.0 55.1 Dissanayake 2004, ப. 78.
  56. Dissanayake 2004, ப. 78–79.
  57. 57.0 57.1 57.2 Dissanayake 2004, ப. 79.
  58. 58.0 58.1 58.2 Dissanayake 2004, ப. 80.
  59. 59.0 59.1 Dissanayake 2004, ப. 80–81.
  60. 60.0 60.1 60.2 60.3 60.4 Dissanayake 2004, ப. 81.
  61. 61.0 61.1 61.2 61.3 61.4 61.5 61.6 61.7 Dissanayake 2004, ப. 82.
  62. "Ramifications of banning political parties and organisations"
  63. 63.0 63.1 Hoole et al. 1990.
  64. Swamy, M. R. Narayan (2003). Inside an Elusive Mind: Prabhakaran. Literate World. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59121-003-8.
  65. 65.0 65.1 Bose, Sumantra (2007). Contested lands: Israel-Palestine, Kashmir, Bosnia, Cyprus, and Sri Lanka. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-02447-2.
  66. "Remembering Sri Lanka's Black July". BBC News. 23 July 2013. https://www.bbc.com/news/world-asia-23402727. 
  67. "USTPAC Remembers 30th Anniversary of "Black July"- A State-abetted Pogrom Against Tamils in Sri Lanka". PR Newswire. பார்க்கப்பட்ட நாள் 16 April 2015.
  68. Pavey, Eleanor (13 May 2008). "The massacres in Sri Lanka during the Black July riots of 1983". Online Encyclopedia of Mass Violence (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016. Government involvement in this mass uprising was highly suspected. Certain elements of the government in power were suspected of issuing copies of voters' lists to the mobs. In some instances, it is believed that the mobs were dropped off at particular points in vehicles owned by government establishments such as the State Timber Cooperation, the Cooperative Wholesale Establishment, the Ceylon Electricity Board and the Sri Lanka Transport Board (Senaratne 1997:45). In other instances, there were unconfirmed reports that buckets petrol was kept ready in white cans for the mobs at the Ceylon petroleum cooperation. Also, many reports indicate that certain members of the armed forces stood by and watched while much of the looting and arson was taking place (Meyer 2001:121-2). In some instances, security forces even took part in the riots. President Jayawardene himself would later admit that "[…] there was a big anti-Tamil feeling among the forces, and they felt that shooting the Sinhalese who were rioting would have been anti-Sinhalese; and actually in some cases we saw them [the forces] encouraging them [the rioters]" (Tambiah 1986:25).
  69. Razak, Abdul; Imtiyaz, Mohamed (9 March 2010). Politicization of Buddhism and Electoral Politics in Sri Lanka. SSRN (Report). SSRN 1567618. The government neither condemned the violence that killed approximately two thousand Tamils, nor took any meaningful measures to punish the perpetrators of the violence. Instead J.R. Jayewardene, then President of Sri Lanka, praised the mobs as heroes of the Sinhalese people.
  70. Imtiyaz, A. R. M. (2008). "ETHNIC CONFLICT IN SRI LANKA: THE DILEMMA OF BUILDING A UNITARY STATE". In Chatterji, Manas; Jain, B.M. (eds.). Conflict and Peace in South Asia. Emerald Group Publishing. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444531766.
  71. "History of Tamil struggle for Freedom in Sri Lanka: A Photo Album". Ilankai Tamil Sangam.
  72. "Black July '83 – Survivors". www.blackjuly83.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
  73. "Anatomy of a pogrom". www.tamilguardian.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
  74. "Sri Lanka: a mounting tragedy of errors". பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம். 1 March 1984. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  75. 75.0 75.1 75.2 "We must search for unity in diversity – President". Daily News (Sri Lanka). 26 July 2004 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050220012054/http://www.dailynews.lk/2004/07/26/fea01.html. 
  76. Grant, Patrick (2008). Buddhism and Ethnic Conflict in Sri Lanka. நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம். p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9353-3.
  77. Nadesan, Kumaran (23 July 2015). "Riots helped to define Canada's Tamil community". Toronto Star. https://www.thestar.com/opinion/commentary/2015/07/23/riots-helped-to-define-canadas-tamil-community.html. 

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

தமிழ் இணைப்புகள்

தொகு

ஆங்கில இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_யூலை&oldid=4051244" இலிருந்து மீள்விக்கப்பட்டது