உனகோடி
உனகோடி (Unakoti) என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்பது. இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், கைலாசகர் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.[1] இது சைவ சமய யாத்திரை தலமாக உள்ளது. இது கி.பி. 7 – 9 நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த அற்புத பாறைக்குடைவுகளும், இதன் பழமையான அழகான சிற்பங்களும், அருவிகளும் தவறாமல் காண வேண்டியவை ஆகும். இங்கு ஈர்க்க்கூடியவை அற்புதமான பாறைச் செதுக்கல்கள், பழமையான அழகான சிற்பங்கள் மட்டுமல்லாது, இந்த இரம்மியான மலை காட்சியமைப்பும், அருவிகள் உட்பட இயற்கை அழகும் ஆகும்.
உனகோடி | |
---|---|
ஆள்கூறுகள்: | 24°19′N 92°4′E / 24.317°N 92.067°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | திரிபுரா |
மாவட்டம்: | உனகோடி |
அமைவு: | கைலாசகர் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 600-700 BC |
தல வரலாறு
தொகுஇந்த மக்களின் நம்பிக்கைப்படி ஒரு சமயம் சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் கைலாயம் செல்லும் வழியில் இங்கு இளைப்பாறினார். பரிவாரங்கள் இரவு அங்கேயே தங்க விரும்ப அவர்களுக்கு சிவபிரான் அனுமதி அளித்தார். ஆனால் மறுநாள் கதிரவன் தோன்றுமுன் கிளம்பிவிட வேண்டும் என்றார். மறுநாள் விடிந்தபோது, மகேசன் மட்டுமே எழுந்தார். மற்றவர்கள் யாரும் எழாததால், சினமுற்ற ஈசன், சோம்பேறி தேவர்களைச் சிலைகளாக்கி அங்கேயே இருக்கும்படி சபித்தார். அதனால்தான் இங்கு இத்தனைச் சிற்பங்கள் உள்ளன என கருதுகின்றனர். இந்த சிலைகள் அழகான பசுமையான காடுகளால் சூழ்ந்து காணப்படுகின்றன.[2]
இந்த சிற்பங்களை பற்றிய இன்னொரு செவிவழிக்கதையும் மக்களிடம் நிலவுகிறது. அது இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும், சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்றுகொண்டிருந்தனர், அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் கயிலைவாசனின் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். ஆனால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பியால் செதுக்க முடிந்தது.
உருவம்
தொகுஉனகோடியில் காணப்படும் சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன: அதாவது பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், கல் சிற்பங்களும் ஆகும். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில், சிவனின் தலையும், பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. உனகோடிசுவர கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் தலையும், ஆடைகளும் கொண்ட சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலைநயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் கொண்டது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. கூடுதலாக நந்தி உருவமும் காணப்படுகிறது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன.
விழா
தொகுஒவ்வொரு ஆண்டும் பிரபலமான 'அசோகாஷ்டமி மேளா' என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. மற்றொரு சிறிய திருவிழா சனவரியில் நடைபெறுகிறது.
இருப்பிடம்
தொகுஉனகோடி அகர்த்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவே அருகில் உள்ள வானூர்தி நிலையம் ஆகும். கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது வடக்கு திரிபுரா மாவட்ட தலைநகரான கைலாஷகர், அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள குமார்காட் ஆகும்.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- ஆன்மிகச் சுற்றுலா - உனகோடி: கோடிக்கு ஒன்று குறைவு, தி இந்து (தமிழ்), அக்டோபர் 15, 2015.