உமைரா பேகம்
உமைரா பேகம் (Humaira Begum; 24 சூலை 1918 - 26 சூன் 2002) மன்னர் முகமது சாகிர் ஷாவின் உறவினரும் மனைவியுமாவார். இவர் ஆப்கானித்தான் இராச்சியத்தின் கடைசி இராணியாக இருந்தார்.
உமைரா பேகம் | |
---|---|
தனது கணவர் முகமது சாகிர் ஷாவுடன் வெள்ளை மாளிகையில் உமைரா பேகம், 1963. | |
ஆப்கானித்தானின் இராணி | |
Tenure | 8 நவம்பர் 1933 – 17 சூலை 1973 |
Installation | 8 நவம்பர் 1933 |
பிறப்பு | 24 சூலை 1918 ஆப்கானித்தான் அமீரகம் |
இறப்பு | 26 சூன் 2002 உரோம், இத்தாலி | (அகவை 83)
புதைத்த இடம் | மரஞ்சன் மலை |
துணைவர் | முகமது சாகிர் ஷா கான் |
தாய் | சரீன் பேகம் |
மதம் | சுன்னி இசுலாம் |
திருமணம்
தொகுசர்தார் அகமது ஷா கானின் முதல் மனைவி சரின் பேகத்தின் மகளான உமைரா பேகம் தனது முதல் உறவினரும், ஆப்கானித்தானின் பட்டத்து இளவரசருமான முகமது சாகிர் ஷாவை 7 நவம்பர் 1931 அன்று காபூலில் மணந்தார். [1] இவர்களுக்கு ஆறு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.
ஆப்கானித்தான் இராணி
தொகு8 நவம்பர் 1933 இல், இவரது மாமனார் முகமது நாதிர் ஷா படுகொலை செய்யப்பட்ட பிறகு, இவரது கணவர் மன்னராக அறிவிக்கப்பட்டார். உமைரா ஆப்கானித்தானின் இராணியாக ஆனார். தனது கணவரின் ஆட்சியின் முதல் பகுதியில், இவர் ஒரு பெரிய பொதுப் பாத்திரத்தை வகிக்கவில்லை. அரசர் அமனுல்லா கான் 1929இல் ராணி சொரயா தார்சியின் நடவடிக்கையினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் முக்காடை மீண்டும் அணிய வைத்து பெண்களின் உரிமைகளில் பின்னடைவை ஏற்படுத்தினார்.[2] 1930களில், அரச குடும்ப பெண்கள் அரண்மனை வளாகத்திற்குள் மேற்கத்திய பாணியில் ஆடை அணிந்தனர். ஆனால் அவர்கள் காபூலின் வெளியே பாரம்பரிய முக்காடு அணிந்து திரும்பினர். மேலும் அவர்கள் பொதுவில் தங்களை வெளிகாட்டவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பெண்களின் நிலையில் சீர்திருத்தங்கள் உட்பட நவீனமயமாக்கல் சீர்திருத்தங்கள் அரசாங்கத்தால் அவசியமாகக் கருதப்பட்டபோது இந்நிலை மாறியது. 1946ஆம் ஆண்டில், இராணி உமைரா பெண்கள் நல சங்கத்தை உருவாக்கினார், இது ஆப்கானித்தானில் முதல் மகளிர் நிறுவனம் ஆகும். மேலும் பெண்கள் இயக்கத்தை மீண்டும் தொடங்குவதைக் குறிக்கிறது.[2] முகமது தாவூத் கான் 1953இல் பிரதமரானபோது, பெண்கள் விடுதலையை நோக்கிய வளர்ச்சி வேகமாக முன்னேறத் தொடங்கியது. மேலும் அரச குடும்பத்தின் பெண்களுக்கு, இராணியை மையமாகக் கொண்டு, இந்த செயல்பாட்டில் முன்மாதிரியாக ஒரு முக்கியமான பணி வழங்கப்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் முக்காடு அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.
1959ஆம் ஆண்டில், பிரதமர் முகமது தாவூத் கான், பெண்கள் தானாக முன்வந்து தனது முக்காட்டை அகற்ற வேண்டும் என்ற அழைப்பை இவர் ஆதரித்தார்.[3] ஆப்கானித்தானில் பெண்களின் வரலாற்றில் இது ஒரு பெரிய நிகழ்வாகும். மேலும் இது அந்த நேரத்தில் தாவூத் அரசாங்கத்தின் பெண்கள் விடுதலையின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.[4] 1957ல் காபூல் வானொலியில் பெண் தொழிலாளர்களை அறிமுகப்படுத்தி, கெய்ரோவில் நடந்த ஆசிய மகளிர் மாநாட்டிற்கு பெண் பிரதிநிதிகளை அனுப்பி, 1958இல் மட்பாண்டத் தொழிற்சாலைக்கு நாற்பது பெண்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இந்த நடவடிக்கை கவனமாகத் தயாரிக்கப்பட்டது.[4] இது எந்த பிரச்சனையையும் சந்திக்காதபோது, அரசாங்கம் மிகவும் சர்ச்சைக்குரிய முக்காட்டை நீக்குவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தது.[4] ஆகத்ட் 1959 இல், ஜெஷின் பண்டிகையின் இரண்டாம் நாளில், இராணி உமைரா, இளவரசி பில்கிஸ் ஆகியோர் பிரதமரின் மனைவி ஜமீனா பேகத்துடன் இராணுவ அணிவகுப்பில் தோன்றினர்.[4]
இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை இசுலாமிய மதகுருமார்களால் கோபத்தை சந்தித்தது.[4]
நாடுகடத்தல்
தொகு17 ஜூலை 1973 இல், இவரது கணவர் இத்தாலியில் கண் அறுவை சிகிச்சை பெற்றபோது, அவரது உறவினரான முகமது தாவூத் கான் ஒரு சதிதிட்டத்தை மேற்கொண்டு ஒரு குடியரசு அரசாங்கத்தை நிறுவினார். இவர், வீட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், இவர் இத்தாலிக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர் உரோம் நகரில் இருபத்து ஒன்பது வருடம் தனது கணவனுடன் தங்கியிருந்தார்.
இறப்பு
தொகுசுவாச பிரச்சனையுடனும், இதய பிரச்சனையுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Soszynski, Henry. "AFGHANISTAN". members.iinet.net.au. Archived from the original on 13 August 2016. பார்க்கப்பட்ட நாள் 15 June 2016.
- ↑ 2.0 2.1 Robin Morgan: Sisterhood is Global: The International Women's Movement Anthology
- ↑ Morgan, Robin (1996). Sisterhood is Global. Feminist Press. pp. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55861-160-6.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Tamim Ansary (2012) Games without Rules: The Often-Interrupted History of Afghanistan