உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாநகரில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை
பெயர்:உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உச்சிநாதர், முக்தீசர், கற்பகநாதர்.
உற்சவர்:உஜ்ஜீவநாதஸ்வாமி
தாயார்:அஞ்சனாட்சி, அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை),
உற்சவர் தாயார்:பாலாம்பிகை.
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருணகிரிநாதர்

தல வரலாறு

தொகு
  • தற்போது இப்பகுதி மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
  • இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.
  • இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்.

சிறப்புக்கள்

தொகு
  • நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற கற்கோயில்
  • இத்திருக்கோவில் அமைந்த பகுதிக்கு 'நந்திவர்ம மங்கலம் ' என்னும் பெயருண்டு.
  • இக்கோவிலில் கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.
  • கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.

கல்வெட்டு

தொகு
  • இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.
  • இத்திருக்கோவில் கல்வெட்டில் 'நந்திவர்ம மங்கலம்','ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' இவ்வூர் என்றும்; இறைவன் 'உய்யக்கொண்டநாதர் ' என்றும் குறிக்கப்படுகிறது.

கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக[1] அறியப்படுகிறது.

திருத்தலப் பாடல்கள்

தொகு

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

திருநாவுக்கரசர் பாடிய பதிகம், ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(காய் காய் மா தேமா அரையடிக்கு)

(’ர்’ இடையின ஆசு)

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி

..முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்(று)

ஆ’ர்’த்தவனை அக்கரவ மார மாக

..அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ

டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்

..கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்

காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே! 1 - 060 திருக்கற்குடி

சுந்தரர் பாடிய பதிகம், ஏழாம் திருமுறை

கலிவிருத்தம்

விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே! 1


சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே!.3 027 திருக்கற்குடி

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு

சான்றாவணம்

தொகு
  1. திருச்சி மாவட்ட ஆங்கிலேய அரசின் அரசிதழ் செய்தி