உருது வரலாறு

உருது வரலாறு என்பதில் உருது மொழி தோற்றம் குறித்தவை இயம்பப் படுகின்றன. இந்தியாவில் வழங்கிவந்த இந்திய மொழிகளும், அரபு மொழி, பாரசீக மொழி, துருக்கி மொழி ஆகியவைகளும் கலந்து உண்டான மொழியாகும். இந்துப் பண்பாடும் முஸ்லிம் பண்பாடும் இணைந்ததற்கு, இம்மொழியே அழியாத அடையாளமாகும்.[1] உருது மொழியின் லிபியும், நெடுங்கணக்கும் அரபு மொழியிலும் பாரசீக மொழியிலும் காணப்படுவனவே. இந்திய மொழிகளில் மட்டும் காணப்படும் சில ஒலிகளுக்குரிய எழுத்துக்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

பெயர் தோற்றம்

தொகு

இந்தப் புதியமொழி நீண்டகாலமாக இந்தியாவின் மொழி என்று பொருள் தரும் வண்ணம் இந்தி அல்லது இந்தவி என்று வழங்கி வந்தது. அப்போது இந்தியாவில் அரசமொழியாயிருந்தது பாரசீகமாகும். பிற்காலத்தில் உருது மொழியானது 'உருவாக்கப்பெற்ற' என்ற பொருளுடைய 'ரீக்தா' என்னும் பாரசீகச் சொல்லால் அழைக்கப்படலாயிற்று. பாரசீகமொழியையும் இந்தியமொழிகளையும் கொண்டு அரபுமொழி உருவாக்கப்பெற்றதால் இம்மொழி ' ரீக்தா ' என்று பெயர் பெற்றதாகும். இப் புதுப்பெயர் சிறப்பாகத் தொடக்க உருதுக் கவிதைகளுக்கே வழங்கியது. சிலகாலம் சென்ற பின்னர் ஐபானெ -அகலெ - உருது என்று அழைக்கப்பட்டது. அதன் பொருள் 'பாசறை மக்கள் மொழி' என்பதாகும். அதற்குக் காரணம் அம்மொழியையே பாசறையிலுள்ள போர்வீரர்கள் பயின்று வந்தனர். இதை 'உருது முவல்லா ' அதாவது 'உயர்ந்த உருது' என்றும் கூறுவர். இது கிழக்கிந்தியக் கம்பெனியார் வந்த பின்னர் இந்துஸ்தானத்து மக்களின் மொழி என்று பொருள்படும் ' இந்துஸ்தானி ' என்னும் பெயரால் வழங்கலாயிற்று. டாக்டர் அல்லாமா சையது சுலைமான் நத்வீ போன்ற இக்காலத்து உருது எழுத்தாளர்களில் சிலர் இந்துஸ்தானி என்பதையே உருதுவின் பொதுப்பெயராக ஆக்கிக் கொள்ளவேண்டுமென்று கூறுகின்றனர். ஆனால் அவருடைய கருத்துக்களையும் காரணங்களையும் உருது பேசுவோரில் பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், உருது என்னும் பெயரே நாளிதுவரை வழங்கி வந்துகொண்டிருக்கிறது.

உருதுமொழி சிந்துப்பள்ளத்தாக்கில் பிறந்து, பஞ்சாபிலும் தோவாபிலும் பேச்சு மொழியாகப் பயிலப்பட்ட போதிலும், அது இலக்கிய உருவம் அடையாதிருந்தது. வட இந்தியப் புலவர்கள் இலக்கிய நூல்கள் எழுதுவதற்குப் பாரசீக மொழியையே பயன்படுத்தினர். அவர்கள் கடிதப்போக்குவரத்துச் செய்ததும் அதிலேயே. ஆயினும் அவர்கள் தங்கள் நூல்களைப் பாரசீக மொழியில் இயற்றிவந்த அதே வேளையில் இந்தியிலும் செய்யுள்கள் இயற்றி வந்தனர். அந்த இந்தி முற்றிலும் இந்தியாயிராமல் செம்பாதி பாரசீக மொழி கலந்ததாகவே இருந்தது. அவருள் சிலருடைய இந்திச் செய்யுட்களில் பெரும்பான்மையான சொற்கள் அரபு, பாரசீக மொழியாகவே இருந்தன. இத்தகைய கவிதைகளை இயற்றியவருள் சிறந்தவர்கள் மசூத் சாத் சல்மான் , அமீர் குஸ்ரு ஆவர்.

இவ்வாறு அரபு, பாரசீகச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதும் வழக்கம், அமீர் குஸ்ரு காலத்துக்குப் பின் நீண்டகாலமாக நிகழ்ந்து வந்தது. ஆகவே உருது மொழி உருப்பெறும் வளர்ச்சி நிலையிலேயே இருந்தது. இன்னும் அது இலக்கிய சாதனமாக ஆகத்தக்கவாறு சொல்வளமும் செறிவும் உரமும் பெறாமலே இருந்தது. பாரசீகச் சொற்கள் விரைவில் வந்து குவிந்து கொண்டிருந்தன.

மொகலாயர் பங்கு

தொகு

மொகலாயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் பாரசீகக் கவிதை உச்ச நிலை அடைந்தது. இந்தியாவிலிருந்த உருதுக்கவிஞர்கள் பாரசீகக் கவிதையையே, முன்மாதிரியாகக் கொண்டனர். பாரசீகக் கவிதையில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட இனங்கள் இவை : 1. கஜல், (உணர்ச்சிப் பாடல்), 2. கசீதா (சிறு கவிதை). 3. ருபாயீயாத் (நாலடிச் செய்யுள்), 4. மர்சியா (இரங்கற்பா), 5. மஸ்னவி (நீண்ட கவிதை). உருதுக்கவிஞர்கள் பாரசீகக் கவிதைகளை மொழிபெயர்த்தும், அவைபோல் தாங்களே இயற்றியும் வந்தார்கள்.

தென்னாட்டில் பயிலப்பட்ட உருது மொழியில், இந்திச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்திருந்தன. அந்த உருதுவை 'டெக்கனி உருது' (தக்காண உருது) என்று கூறுவர். தக்காண உருதில், வினைச்சொல் எழுவாயின் பாலையும், எண்ணையும் உடையதாயிருக்கும். செயப்படு பொருள் குன்றா இறந்தகால வினைச் சொல்லின் முன்னால் எழுவாயுடன் 'னே' தக்காண உருதில் வருவதில்லை. இந்த இலக்கணப் பயன்முறைகள், மேற்கத்திய இந்தியின் பல உருவ வகைகளிலும் காணப்படும்.

தக்காணத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் நண்பர்களாக வாழ்ந்தது, அரசாங்க அலுவல்களில் இந்துக்கள் மிகுதியாக இடம் பெற்றது, கணக்குக்கள் சுதேச மொழியில் எழுதப்பெற்றது. முஸ்லிம் அரசர்கள், சுதேசமொழிக்கு ஆதரவு அளித்தது ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து, தக்காண உருது மொழியை வளர்க்கவும், இலக்கியச் சாதனமாகச் செய்யவும் உதவின. கோல்கொண்டாவில் அரசாண்ட முஸ்லிம் மன்னர் வமிசத்தினருள், இறுதியில் ஆண்ட நால்வரும் கல்வியையும் புலமையையும் ஆதரித்ததுடன் சிறந்த கவிஞர்களாகவுமிருந்தனர். முகம்மது குலீகுதுப்ஷா (1580-1611) வினுடைய, குல்லியாத் என்னும் பாடல் திரட்டு, அவருடைய பலதிறப்பட்ட மேதையைத் தெரிவிப்பதற்குத் தக்க சான்றாக இருந்து கொண்டிருக்கிறது.

தற்கால உருது

தொகு

தற்கால உருது வசன நூல்கள், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றியவை. இதற்குமுன் வசன நடையிலிருந்த நூல்கள் பெரும்பாலும் சமயம் பற்றியவை ; தக்காணத்துச் சூபிகளாலும் துறவிகளாலும் எழுதப்பட்டவை. வனதேவதைக் கதைகளும் வேறுகதைகளும் பெரும்பாலும் பாரசீக மொழியிலிருந்து பெயர்க்கப்பட்டவை. கல்கத்தாவிலிருந்த, வில்லியம் கோட்டைக் கல்லூரித் தலைவராயிருந்த, டாக்டர் ஜான் கில்கிரைஸ்ட்டு என்பவர் வட இந்தியாவிலுள்ள உருதுப் புலவர்களைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் அலுவல் பார்த்த ஐரோப்பிய உத்தியோகஸ்தருக்காக, உருதில் பாடப் புத்தகங்களை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். இப்புலவர்கள் பலர் இயற்றிய நூல்களும் மொழிபெயர்த்த நூல்களும் தவிர எதுகை நிறைந்த உரைநடை நூல்கள் ஜூஹலி, பேதில் என்னும் பாரசீகக் கவிஞர்களைத் தழுவி எழுதப்பட்டன. அந்நடை நஸ்ரே-முசஜ்ஜா அல்லது, நஸ்ரே-இ-முகப்பா அல்லது நஸ்ரே முரஸ்ஸா என்று அழைக்கப்படும். இந்த நடையில் எழுதியவர்களுள் சிறந்தவர் ரஜப் அலிபேக் சரூர் (1787-1867). அவருடைய தலைசிறந்த கவிதையாகிய பசானயே அஜாயெப் என்பது நடையழகுக்கு மட்டுமன்றி இலட்சுமணபுரி நகர வாழ்க்கையின் ஓவியச் சிறப்புக்கும் புகழ் பெற்றதாகும்.

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருது_வரலாறு&oldid=2867577" இலிருந்து மீள்விக்கப்பட்டது