உருத்திரர்கள்

உருத்திரர்கள் என்போர், சிவனின் உருத்திர வடிவத்தைத் தாங்கிய கூட்டத்தார் ஆவர். இந்துக்களின் 33 தேவர்களில் இவர்கள் பதினொரு பேர் ஆவர்.[1] சிலவேளைகளில், உருத்திரனின் மகன்களாகக் கூறப்படும் மருத்துக்களே இவர்கள் என்பதுண்டு.[2]

மதுரா அருங்காட்சியகத்திலுள்ள கி.பி 5ஆம் நூற்றாண்டு சிற்பம், உருத்திரர் காட்சியளிக்கும் வியோமமண்டலம்.

தோற்றம் தொகு

பின்னாளில் சிவனாக வளர்ந்த உருத்திரனைச் சார்ந்த கூட்டத்தவர்களே ஆரம்ப கால இலக்கியங்களில் உருத்திரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சிலபல பிரமாணம் நூலானது, உருத்திரர்கள், உருத்திரனின் கணத்தவர் என்கின்றது.[3], யசுர் வேதங்களில், புவர்லோகத்தின் அதிபதிகளாக உருத்திரர்கள் சுட்டப்படுகின்றனர்.[4] பிரகதாரண்யக உபநிடதம் பிராணன் முதலான பத்து வாயுக்களும் ஆன்மாவும் இணைந்த பதினொரு உருப்படிகளுமே பதினொரு உருத்திரர். இவர்கள் மனித உடலிலிருந்து வெளியேறும் போது, மரணத்தை ஏற்படுத்தி, மக்களை அழவைப்பார்கள் என்கின்றது.[3] "ருத்ர" என்ற வடமொழிச் சொல்லுக்கு "அழுபவன்" என்றும் பொருள் உண்டு.[3]

மகாபாரதமானது, உருத்திரர்கள், இந்திரன், இயமன், முருகன், சிவன் ஆகியோரைச் சூழ்ந்துள்ள துணைவர்கள் என்கின்றது மின்னல் ஒளிரும் மேகத்தை ஒத்த நிறமுடையவர்கள் என்றும், அளவற்ற ஆற்றல் படைத்தோர் என்றும், பொன்னணி சூடியவர்கள் என்றும் வருணிக்கின்றது.[1] பாகவத புராணம், பேராற்றலைப் பெற உருத்திரரை வழிபடுக என்று ஆணையிடுகின்றது.[3]

உருத்திரர் பதினொரு பேரும், காசிபர், அதிதி ஆகிய தெய்வத் தம்பதிகளின் மக்கள் என்ற குறிப்பு, இராமாயணத்திலும்[5] வாமன புராணத்திலும்[3] காணப்படுகின்றது. மச்ச புராணமும்[6] அரிவம்சமும்[3][7] இவர்கள் பிரமனுக்கும், பசுக்களின் அன்னையான சுரபிக்கும் பிறந்தனர் என்கின்றன. கபாலியின் தலைமையில் சென்று இவர்கள் கயாசுரனை வதைத்ததாக மச்சபுராணக் கதை விவரிக்கின்றது. சிங்கத்தோலும் பாம்பும் அணிந்து அடர்சடை கொண்ட இவ்வுருத்திரர்கள், அசுரரை அழிக்க திருமாலுக்கு உதவியதாக, வேறொரு இடத்தில் சொல்கின்றது.[6] மகாபாரதம் மூன்று வெவ்வேறு இடங்களில் இவர்களை மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றது.அவற்றிலொரு குறிப்பு, இவர்கள் தர்மதேவதையின் மக்கள் என்கின்றது.[1] இன்னொன்று, அவர்கள் பதினொரு பேர் அல்ல, சிவனைச் சூழ்ந்துள்ள பதினொரு கோடிப் பேர் என்கின்றது. இன்னுமொன்று, உலகைப்படைத்த துவசுத்திரனின் புத்திரர்கள் என்கின்றது.[1]

விஷ்ணு புராணத்தில் வேறொரு வரலாறு சொல்லப்படுகின்றது. பிரம்மனின் கோபம் மாதொருபாகன் வடிவமாக மாறியதாகவும், அதன் ஆண் பெண் பாகங்கள் பதினொரு பதினொரு உருத்திரர், உருத்திரைகளாக மாறியதாகவும், அவர்களைப் பிரமன், ஐந்துகன்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மற்றும் மனம் ஆகிய பதினொரு இடங்களில் வாழுமாறு அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.[5][3]


மருத்துக்களும் உருத்திரர்களும் தொகு

 
மருத்துக்கள்

வேதத்தில் உருத்திரனின் மைந்தர்களாகச் சொல்லப்படும் மருத்துக்களோடு, உருத்திரர்களை சிலவேளைகளில் இணைத்துப் பார்ப்பதுண்டு. மகாபாரதக் காலத்தில், உருத்திரர்கள், சிவனின் துணைவர்களாக மாற, மருத்துக்கள் இந்திரனோடு இணைக்கப்பட்டனர்.[8] இரு பெயருமே இரு வேறு கூட்டத்தாரைக் குறிக்கும் என்று வலியுறுத்தும் சில ஆய்வாளர்கள்,[8] அவ்வாறு மருத்துக்களின் ஒரு குழுவினர் தனியே வளர்ந்து உருத்திரர் எனும் தனிக்கூட்டமானதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.[8] உருத்திரர், காசிபருக்கு அதிதியில் பிறந்த மைந்தராகக் காட்டப்படும் அதே வேளை, வாமன புராணம், மருத்துக்களை, அதிதியின் தங்கை திதியின் மைந்தராகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது.[9]


பதினொரு உருத்திரர்களின் பெயர்ப்பட்டியல் தொகு

மச்ச புராணம், விஷ்ணு புராணம், மகாபாரதத்திலுள்ள மூன்று வெவ்வேறு குறிப்புக்கள், ஏனைய புராணங்களில் சொல்லப்படும் வழக்கமான குறிப்பு என்பன இங்கு பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. விஷ்ணு புராணம், உருத்திரர்களோடு, பதினொரு உருத்திரைகளின் பெயரையும் சொல்கின்றது. பெயர்கள் தரப்பட்ட ஒழுங்கில் இல்லை.

பிங்கல நிகண்டு[10] மச்சபுராணம்[6] விஷ்ணு புராணம்[5][3] மகாபாரதம் 01[1] மகாபாரதம் 02[1] மகாபாரதம் 03[1] வேறு சில புராணங்கள்[5][3]
மகாதேவன் சேனானி மன்யு-தீ பினாகி பினாகி பினாகி அயன்
உருத்திரன் நிருதி மனு-விருத்தி நிருதி பகுரூபன் பித்துருவன் உருத்திரன்
சங்கரன் அபராயிதன் மகிமாசன்-உசானை ஈசுவரன் சவித்திரன் ஈசுவரன் அபராயிதன்
நீலலோகிதன் பிங்கலன் மகான்-ஊர்ணை அயைகபாதன் அயைகபாதன் அயைகபாதன் ஏகபாதன்
ஈசானன் மிருகவியாதன் சிவன்-நியுதை மிருகவாதன் விசுவரூபன் விருசகவி ஈசானன்
விசயன் சம்பு ரிதுத்துவசன்- சர்ப்பி தாணு சயந்தன் கவனன் சம்பு
வீமதேவன் தகனன் உக்கிரரேதசு-இளை தகனன் திரியம்பகன் திரியம்பகன் திரியம்பகன்
பவோற்பவன் கரன் பவன்-அம்பிகை பகன் கரன் மகேசுவரன் கரன்
சவுமியன் அகிரவிரதியன் காமன்-ஐராவதி அகிபுத்தினியன் அகிபுத்தினியன் அகிபுத்தினியன் அகிபுத்தினியன்
கபாலி கபாலி வாமதேவன்-சுதை கபாலி இரைவதன் ரிதன் திரிபுவனன்
அரன் கபர்தினன் திருதவிரதன்-தீக்கை சர்ப்பன் விரூபாக்கன் சம்பு துவாதசன்

மேலும் பார்க்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Hopkins pp. 172–3
  2. Charles Russell Coulter, ‎Patricia Turner (2013) "Encyclopedia of Ancient Deities" p.311
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Daniélou, Alain (1991). The myths and gods of India. Inner Traditions International. பக். 102–4, 341, 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89281-354-7. https://archive.org/details/mythsgodsofindia00dani. 
  4. Keith, Arthur Berriedale. Krishna (Black) Yajur Veda. Zhingoora Books. பக். 670. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9-781475-173611. 
  5. 5.0 5.1 5.2 5.3 Mani pp. 654–5
  6. 6.0 6.1 6.2 A Taluqdar of Oudh (2008). The Matsya Puranam. The Sacred books of the Hindus. 2. Cosmo Publications for Genesis Publishing Pvt Ltd.. பக். 74–5, 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-307-0533-8. 
  7. Hopkins p. 173
  8. 8.0 8.1 8.2 Nagendra Singh, தொகுப்பாசிரியர் (2000). "The Historical Background of the Maruts". Encyclopaedia of Hinduism. 31–45. Anmol Publications PVT. LTD. பக். 1067–72, 1090. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7488-168-9. 
  9. Mani pp. 489–90
  10. "சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்திரர்கள்&oldid=3583073" இலிருந்து மீள்விக்கப்பட்டது