உருவ விகிதம்
படிமம் ஒன்றின் உருவ விகிதம் (aspect ratio) என்பது அப் படிமத்தின் அகலம், உயரம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்குகிறது. இது பொதுவாக 16:9 என்றவாறு ஒரு முக்காற்புள்ளியால் பிரிக்கப்படும் இரண்டு எண்களினால் குறிக்கப்படுகிறது. உருவ விகிதம் படிமத்தின் அளவில் தங்கி இருப்பதில்லை. x:y என்னும் உருவ விகிதம் கொண்ட படிமம் ஒன்று எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், அகலம் குறித்த ஒரு அலகில் x அளவு இருக்கும்போது உயரம் அதே அலகில் y அளவு இருக்கும் என்பதே இதன் பொருள் ஆகும். இதனால், 16 அடி x 9 அடி, 16 அங்குலம் x 9 அங்குலம், 16 சதம மீட்டர் x 9 சதம மீட்டர் ஆகிய அளவுகளைக் கொண்ட எல்லாப் படிமங்களுமே 16:9 என்னும் உருவ விகிதம் கொண்டவை. உருவ விகிதத்தைக் குறிப்பிடும்போது உயரத்தை எப்போதும் "1" ஆக வைத்துக் குறிப்பிடுவதும் உண்டு. எடுத்துக் காட்டாக 1.33:1 என்பது இத்தகையது. இதன்படி x:y என்பது x/y:1 என்றவாறு குறிப்பிடப்படும். 16:9, 1.77:1 என ஆகும்.
தற்காலத்தில் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் திரைப்படங்கள் பொதுவாக 1.85:1, 2.39:1 ஆகிய உருவ விகிதங்களைக் கொண்டவை.[1] நிகழ்படங்கள், 20 ஆம் நூற்றாண்டின் பொது நிகழ்பட வடிவமான 4:3 (1.33:1) அல்லது உயர் வரைவுத் தொலைக்காட்சி, ஐரோப்பிய எண்ணிமத் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான 16:9 (1.77:1) என்னும் இரண்டு உருவ விகிதங்களைக் கொண்டவை. வேறு உருவ விகிதங்களும் உள்ளன ஆயினும் மிகவும் அரிதாகவே பயன்படுகின்றன.
நிலைத்த ஒளிப்படங்களுக்கு 4:3, 3:2 ஆகிய உருவ விகிதங்களும், அண்மைக் காலத்தில் 16:9 உருவ விகிதமும் பயன்படுகின்றன.[2] 5:3, 5:4, 1:1 ஆகிய உருவ விகிதங்களும் ஒளிப்படங்களும் உள்ளன. இவை பொதுவாக நடுத்தர அளவு, பெரிய அளவு ஒளிப்படங்களைப் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
திரைப்படச் சுருள்
தொகுதிரைப்படச் சுருளில், இரு பக்கங்களிலும் காணப்படும் துளைப்பட்டைகளுக்கு இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஏற்பவே படிமத்தின் அளவு அமைகின்றது. 1892 ஆம் ஆண்டில் வில்லியம் டிக்சனும், தாமசு எடிசனும் உருவாக்கிய பொதுத் தரத்தின்படி ஒரு படம் நான்கு துளைகள் உயரம் கொண்டது. படச்சுருளின் அகலம் 35 மிமீ (1.36 அங்). துளைபட்டைகளை நீக்கிப் படச்சட்டத்தின் அளவு 24.89 மிமீ x 18.67 மிமீ (0.985 அங் x 0.735 அங்). இது 4:3 அல்லது 1.33:1 என்னும் உருவ விகிதத்தைத் தருகிறது.[3] இந்த உருவ விகிதம் மனிதக் கண்ணின் பார்வைக் கோணங்களான 155°கிடை x 120°நிலை என்பவற்றிலிருந்து கிடைக்கும் 4:3.075 என்னும் உருவ விகிதத்தை ஒத்துள்ளது. படச் சுருளில் ஒளிவழி ஒலிப்பட்டை சேர்க்கப்பட்ட போது படச் சட்டத்தின் அகலம் குறைந்தது. இதனால் படச் சட்டத்தின் அளவைக் குறைத்து 22 மிமீ x 16 மிமீ அளவு கொண்டதும் 1.37:1 உருவ விகிதம் கொண்டதுமான "அக்கடமி படத்துளை" எனப்படும் அளவு ஏற்படுத்தப்பட்டது.
திரைப்படச் சொற்கள்
தொகுதிரைப்படத் தொழில் துறை மரபின்படி படத்தின் உயரம் 1 எனக் கொள்ளப்படுகிறது. எனவே பெருப்பிக்கத்தக்க படச் சட்டத்தின் அளவு 2.40:1 அல்லது 2.40 (ஆங்கிலத்தில் "டூ ஃபோர்-ஓ") எனக் குறிப்பிடுவது வழக்கம். அமெரிக்கப் படங்களில் பொதுவான படமெறி விகிதங்கள் 1.85:1, 2.40:1 என்பன. சில ஐரோப்பிய நாடுகளில் அகலத்திரைக்கான உருவ விகிதம் 1.66:1 ஆக உள்ளது. 1953 ஆம் ஆண்டு வரை "அக்கடமி விகிதம்" என அழைக்கப்பட்ட 1.37:1 என்னும் விகிதமே எல்லாப் படச் சுருள்களிலும் பயன்பட்டன. அக்காலத்தில் அதே போன்ற உருவ விகிதத்துடன் (1.33:1) அறிமுகமான தொலைக்காட்சி திரைப்படங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு அகலத்திரை வடிவங்கள் உருவாக்கப்பட்டன. "சினிமாசுக்கோப்பு" (2.66:1 வரை), "டாட்-ஏ.ஓ" (2.20:1), "விசுத்தாவிசன்" (முதலில் 1.50:1, இப்போது 1.66:1 இலிருந்து 2.00:1 வரை) என்பவை அவற்றுட் சில. 1.85:1 உருவ விகிதம் 1953 மே மாதம் அறிமுகமானது. இதுவே இப்போது அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் ஒரு பொதுவான தரமாக இருந்து வருகிறது.
காட்சி ஒப்பீடுகள்
தொகுஇரு வேறு உருவ விகிதங்களை ஒப்பிடுவதில் பல நுணுக்கங்கள் உள்ளன. உயரம், அகலம், மூலைவிட்டம், பரப்பளவு என்பவற்றில் ஏதாவது ஒன்றைச் சமமாக எடுத்துக்கொண்டு இவ்வகையான ஒப்பீட்டைச் செய்யலாம். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்கு இயல்பான ஒரு உருவ விகிதம் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, "அகல் காட்சி" (panorama) அகலம் கூடியதாக இருக்கும், மனிதரின் முழு அளவுப் படம் உயரம் கூடியதாக இருக்கும். இவை தவிரப் பொன் விகிதம் (~1.618) போன்ற சில உருவ விகிதங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதனால் பயன்படுத்துவது உண்டு. பொதுவான காட்சிக்குரிய உருவ விகிதங்களில் 16:10 (8:5) விகிதமே பொன் விகிதத்துக்கு மிக நெருங்கியது.
பல்வேறு உருவ விகிதங்களில் மூலை விட்டம் ஒரே அளவாக இருக்கும்போது 4:3 என்னும் உருவ விகிதம் கொண்ட வடிவம் கூடிய பரப்பளவு உள்ளதாக இருக்கும். எதிர்முனைக் கதிர்க் குளாய் நுட்பத்தைப் பயன்படுத்துபோது ஏறத்தாழச் சதுரமான வ்டிவத் திரைகளை உற்பத்தி செய்வதற்குச் செலவு குறைவாக இருக்கும். படமெறி கருவிகள், ஒளிப்படக் கருவிகள், நிகழ்படக் கருவிகள் போன்றவற்றிலும் அவ்வாறே. நீர்மப் படிகக் கட்சித் திரை, பிளாசுமா காட்சித் திரை போன்றவற்றில் பரப்பளவு கூடும்போது உற்பத்திச் செலவு கூடுதலாக இருக்கும். எனவே, ஒரு குறித்த மூலைவிட்ட அளவுக்கு அகலம் கூடியதும் உயரம் குறைந்ததுமான திரைகளைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம்.
வெவ்வேறு கூறளவுகளைச் சமமாக வைத்திருப்பதன் மூலம், பல்வேறு உருவ விகிதங்களில் அமைந்த ஒரே படத்தின் நறுக்குகளை ஒப்பிட முடியும். இவ்வாறு ஒரு படத்தின் 4:3, 16:9 ஆகிய உருவ விகிதங்களின் ஒப்பீட்டைக் கீழே காணலாம். சதுர வடிவத்துக்குக் கிட்டிய உருவ விகிதம் கொண்ட படங்களில் காட்சியில் உள்ள சதுக்கம் முக்கியத்துவம் பெறுவதையும், அகலம் கூடிய உருவ விகிதம் கொண்ட படங்களில், நீளமான கட்டிடம் முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.
- மூலைவிட்டத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:
- பரப்பளவைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:
- உயரத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:
- அகலத்தைச் சமமாகக் கொண்ட ஒப்பீடு:
குறிப்புக்கள்
தொகு- ↑ The 2.39:1 ratio is commonly labeled 2.40:1, e.g., in the American Society of Cinematographers' American Cinematographer Manual (Many widescreen films before the 1970 SMPTE revision used 2.35:1).
- ↑ Panasonic Introduces 2 New Cameras. India: Tech Tree. http://www.techtree.com/India/News/Panasonic_Introduces_2_New_Cameras/551-97953-893.html. பார்த்த நாள்: 2013-11-08
- ↑ Burum, Stephen (2004). American Cinematographer Manual (9th ed.). ASC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-935578-24-2.