எகுலிங்கு யுத்தம்

எகுலிங்கு யுத்தம் என்பது மங்கோலியப் பேரரசுக்கும் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் நடைபெற்ற முக்கியமான யுத்தம் ஆகும். இலக்கிய ரீதியாக இதன் பொருள் காட்டு நரி மலைத்தொடர் யுத்தம் என்பதாகும். மங்கோலியர்கள் சின் அரசமரபை வென்று கொண்டிருந்ததன் முதல் கட்டமாக இந்த யுத்தம் நடைபெற்றது. இது 1211ஆம் ஆண்டு ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் எகுலிங்கு (野狐嶺; பொருள். "காட்டு நரி மலைத்தொடர்") என்கிற இடத்தில் நடைபெ‌ற்றது. இது தற்போது சீனாவின் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்கில் ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணத்தில் உள்ளது. இந்த யுத்தத்தில் மங்கோலியப் பேரரசு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. யுத்தத்துக்குப் பிறகு சின் பேரரசர் வன்யன் யோங்ஜி தன் தளபதிகளில் ஒருவராலேயே கொல்லப்பட்டார். இந்த யுத்தத்தின் விளைவாக சின் பேரரசு பலவீனமடைந்து சீக்கிரமே அழிந்து போனது.

எகுலிங்கு யுத்தம்
மங்கோலிய-சின் போர் பகுதி

ரசித் அல்-தின் அமாதனியின் சமி அல்-தவரிக் நூலில் எகுலிங்கு யுத்தம் பற்றிய விளக்கப்படம்
நாள் ஆகத்து – அக்டோபர் 1211
இடம் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.
தீர்க்கமான மங்கோலிய வெற்றி
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு சின் அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான்
முகாலி
செபே
ஒகோடி
எலு துகுவா
வன்யன் யோங்ஜி
வன்யன் செங்யு
ஜுஹு கவோசி
ஹெஷிலியே ஜிஜோங் (குசாகு)
வன்யன் ஜியுஜின் 
டுஷன் யி
ஷிமோ மிங்கன் (கைதி)
பலம்
1,00,000 குதிரைப்படை[1] எகுலிங்கில் 4,00,000[2]
ஊசா கோட்டையில் 50,000[3]

ஏகாதிபத்திய இராணுவமானது 8,00,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 1,50,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பெற்றிருந்தது.
இழப்புகள்
குறைவு 3,00,000 இறப்பு[4]
பெரும்பாலான இராணுவம் அழிக்கப்பட்டது
எகுலிங்கு யுத்தம்
சீன எழுத்துமுறை 野狐嶺戰役
எளிய சீனம் 野狐岭战役

பின்புலம்

தொகு

1206 ஆம் ஆண்டு தெமுசின் மங்கோலியாவில் இருந்த அனைத்துப் பழங்குடியினங்களையும் ஒன்றுபடுத்தினார். தனது ஆட்சியைக் கொண்டு வந்தார். "செங்கிஸ் கான்" என்ற பட்டம் பெற்றார். உலகை வெல்ல வேண்டும் என்ற மங்கோலியப் பேரரசின் குறிக்கோளுக்கு ஒரு பெரிய இடைஞ்சலாக வடக்கு சீனாவில் இருந்த சுரசன்களால் ஆளப்பட்ட சின் அரசமரபானது திகழ்ந்தது. முற்காலத்தில் சின் அரசமரபானது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு பல்வேறு மங்கோலிய பழங்குடி இனங்களை பிரித்துத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. எனினும் தங்களது சூழ்ச்சி நீண்ட காலத்திற்கு பயனளிக்காது என்பதை உணர்ந்த அவர்கள் மங்கோலிய ஆபத்தை ஒரே படையெடுப்பில் ஒழித்து விடும் நோக்கத்தோடு போருக்குத் தயாராக ஆரம்பித்தனர். பேரரசர் சங்சோங்கின் ஆட்சியில் ஒரு தொடர்ச்சியான பாதுகாப்பு கட்டமைப்புகளை சுமார் 300 கிலோ மீட்டருக்கு தங்களது வடக்கு எல்லையில் சின் அரசமரபானது அமைத்தது. இது சில நேரங்களில் "சின் அரசமரபின் பெருஞ்சுவர்" என்று அழைக்கப்படுகின்றது.

முன்னதாக 1204 ஆம் ஆண்டு ஒங்குடு என்று அழைக்கப்பட்ட ஒரு மங்கோலிய பழங்குடி இனத்தை செங்கிஸ் கான் அடிபணிய வைத்தார். சின் அரசமரபின் வடக்கு எல்லையைப் பாதுகாப்பதற்கு ஒங்குடு இனத்தவர் உதவி செய்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தனது மகளை ஒங்குடு பழங்குடியினத் தலைவரின் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததன் மூலம் செங்கிஸ் கான் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார். மங்கோலியர்கள் இன் மலைத் தொடருக்கு வடக்கே இருந்த பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனாவுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புக்குத் தேவையான பொருட்களைச் சேமிக்க ஆரம்பித்தனர். சில சுரசன் இனத்தவர்களைத் தங்கள் பக்கம் அணிசேரவோ அல்லது சரணடைய வைக்கவோ ஈர்க்கவும் தூண்டவும் செய்தனர். பேரரசர் சிங்சேங் (வன்யன் யோங்ஜி) மங்கோலிய ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டார். மங்கோலியர்களுக்கு எதிராக இருந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தவறினார். மங்கோலியர்களை விட சின் அரசமரபானது மிகுந்த சக்தி வாய்ந்தது என்கிற மாயையை நம்பிக் கொண்டிருந்தார்.

உசாத்துணை

தொகு
  1. Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing
  2. Jin, Jianfang (2010). The General Theory of Eco-Social Science: The Theory and Road Map for Comprehensive Reform. VII - The Principle of Transformation. AuthorHouse. பக். 153–55 [p. 154]. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-49694-763-5. 
  3. Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History (Boydell Press) 8: 109–17 [p. 116]. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84383-596-7. 
  4. Shi, Li (28 February 2019). The Military History of the Yuan Dynasty. DeepLogic. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகுலிங்கு_யுத்தம்&oldid=3287111" இலிருந்து மீள்விக்கப்பட்டது