எத்தியோப்பிய உயர்நில முயல்

ஒரு பாலூட்டி இனம்

Bilateria

எத்தியோப்பிய உயர்நில முயல் (ஆங்கிலப்பெயர்: Ethiopian Highland Hare, உயிரியல் பெயர்: Lepus starcki) என்பது குழி முயல் மற்றும் முயல் குடும்பமான லெபோரிடேவிலுள்ள மிதமான அளவுள்ள பாலூட்டி இனம் ஆகும். இதன் முதுகுப்புற ரோமம் நரை நிறம், பழுப்பு வெள்ளை மற்றும் புள்ளிகள் மற்றும் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் வயிற்றுப் பகுதி ரோமங்கள் சுத்த வெள்ளை நிறத்துடன் பஞ்சு போன்று காணப்படும். இது எத்தியோப்பியாவின் உயர்நில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. சோவா, பலே மற்றும் ஆர்சி மாகாணங்களின் ஆஃப்ரோ ஆல்பைன் பகுதிகளில் இது காணப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி ஆகும். இது பெரும்பாலும் முட்புதர் தரிசுநிலத்தின் புற்களை உண்கிறது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய உயர்நில முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. starcki
இருசொற் பெயரீடு
Lepus starcki
பெட்டெர், 1963
எத்தியோப்பிய உயர்நில முயலின் பரவல்

விளக்கம் தொகு

எத்தியோப்பிய உயர்நில முயலானது நடுத்தர அளவுள்ள ஒரு முயல் ஆகும்.[2] இது 46 முதல் 60 சென்டிமீட்டர் வரை நீளமும் 2 முதல் 3.5 கிலோ கிராம் வரை எடையும் இருக்கும்.[3] இதன் மண்டை ஓடு 7.7 முதல் 9.3 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும்.[4] இதன் தலை முதுகைப் போலவே பல்வண்ண புள்ளிகள் வாய்ந்த பழுப்பு மஞ்சள் நிறத்திலும் மற்றும் தாடை வெள்ளை நிறத்திலும், கழுத்தின் பின்புறம் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், உதடுகள் லவங்கப்பட்டை பூசப்பட்டது போன்ற நிறத்திலும் இருக்கும்.[4][3] சில முயல்கள் கண்களைச் சுற்றி வெள்ளை வளையங்களை கொண்டிருந்த பதிவுகளும் உள்ளது. இது நடுத்தர அளவுள்ள நீளமுள்ள காதுகளை கொண்டுள்ளது. அவற்றின் நீளம் 10 முதல் 11.5 சென்டிமீட்டர் இருக்கும். இதன் காதின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும், வெளிப்புற பரப்பு வெள்ளை ஓர முடிகளையும், உள் புறப்பரப்பு வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு ஓர முடிகளையும், நுனி தவிர மற்ற இடங்களில் பெற்றிருக்கும். சில முயல்களில் வெளிப்புறத்தில் கருப்பு நிறமானது உள்புற பரப்பின் எல்லைக் கோட்டுப் பகுதியில் மற்றும் வெளிப்புற பரப்பின் எல்லைக்கோட்டு பகுதி வழியாக காதின் அடிப்பகுதி வரை பரவியிருக்கும். இது நரைத்த வெளிர் பழுப்பு வெள்ளை நிற ரோமத்தை முதுகுத் தண்டின் நடுப்பகுதியில் கொண்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கருப்பு நிற புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். முதுகுத் தண்டின் நடுப்பகுதியில் காணப்படும் முடிகள் 20 முதல் 25 மில்லி மீட்டர் நீளம் இருக்கும். அம்முடிகள் வெள்ளை பழுப்பு அடிப்பகுதிகளை, கருப்பு நிற அகலமான துணை முனையைப் பட்டைகள், வெள்ளை முனையை பட்டைகள் மற்றும் கருப்பு நுனிகளுடன் கொண்டிருக்கும். வாலின் அடிப்பகுதி ரோமமானது சுத்த வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று இருக்கும். பக்கவாட்டுப் பகுதிகள் அடிப்பகுதியில் வெள்ளை சாம்பல் முடிகளை வெளிர் பழுப்பு அல்லது வெள்ளை துணை முனைய பட்டை மற்றும் கருப்பு அல்லது வெள்ளை நுனிகளுடன் கொண்டிருக்கும். இந்த முயலின் அடி பக்கவாட்டுப் பகுதிகள் லவங்கப்பட்டை போன்ற சிவந்த பழுப்பு நிறத்திலும் லவங்கப்பட்டை நுனிகளை உடைய வெள்ளை முடிகளையும் கொண்டிருக்கும்.[4] இந்த முயலின் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும்[3] பிட்டம் சாம்பல் நிறத்திலும் இருக்கும்.[2] கழுத்தின் பின்புறம் பிரகாசமான லவங்கப்பட்டை நிறம் அல்லது சிவந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த நிறம் கழுத்தின் பக்கவாட்டு பகுதிகளுக்கு பரவியிருப்பது இல்லை. இதன் அடிப்புற ரோமம் அடர்ந்து,[4] சாம்பல் அல்லது சாம்பல் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் வால் 7 முதல் 12 சென்டிமீட்டர் நீளம் உடைய நடுத்தர அளவுள்ள வால் ஆகும்.[3] சோவா மாகாணத்தில் காணப்படும் முயல்களுக்கு வால் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பேல் மலைகளில் காணப்படும் முயல்களுக்கு வால் வெள்ளை நிறத்தில் அதன் நடுப்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படும்.[2] கால்களில் அடர்ந்த பழுப்பு முடிகள் இருக்கும். முன்னங்கால்கள் நீளமானவை. வெளிர் லவங்கப்பட்டை நிறத்தில் இருக்கும். பின்னங்கால்கள் 8.8 முதல் 12 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். மேல் பகுதி லவங்கப்பட்டை பழுப்பு மஞ்சள் நிறத்தில் மற்றும் கீழ்ப்பகுதி நடுத்தர அளவுள்ள பழுப்பு நிறத்தில் காணப்படும்.[4] முதன்மை முன் வாய் பற்கள் அகன்று இருக்கும்.[4]

எத்தியோப்பிய உயர்நில முயலானது அபிசீனிய முயலைப் போலவே இருக்கும். அபிசீனிய முயல் நரைத்த நிறத்திலும் முதுகுத்தண்டின் நடுப்பகுதி வெள்ளி சாம்பல் நிறத்திலும் மற்றும் காதுகளின் நுனியில் சிறிய கருப்பு ஓரத்தையும் கொண்டிருக்கும். மேலும் எத்தியோப்பிய உயர்நில முயலானது ஆப்பிரிக்க சவானா முயலை போலவே இருக்கும். சவானா முயலின் முதுகுத்தண்டின் நடு புறமானது பழுப்பு நிறத்திலும் ஆங்காங்கே கருப்பு முடியுடனும் காணப்படும். அதே நேரத்தில் அவற்றின் காதுப் பகுதியின் நுனியில் கருப்பு நிறமானது குறைந்த அளவே இருக்கும். அதன் கழுத்தின் பின்புறம் பழுப்பு ஆரஞ்சு முதல் ஆரஞ்சு நிறம் வரையான நிறத்தில் காணப்படும். அந்த முயல் எத்தியோப்பிய பீடபூமியில் காணப்படுவதில்லை.[4]

உசாத்துணை தொகு

  1. Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus starcki". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41287A10413250. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41287A10413250.en. http://www.iucnredlist.org/details/41287/0. பார்த்த நாள்: 11 January 2018. 
  2. 2.0 2.1 2.2 Chapman, Joseph A.; Flux, John E. C. (1990) (in en). Rabbits, Hares and Pikas: Status Survey and Conservation Action Plan. IUCN. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9782831700199. 
  3. 3.0 3.1 3.2 3.3 Kingdon, Jonathan (2015) (in en). The Kingdon Field Guide to African Mammals: Second Edition. Bloomsbury Publishing. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781472925312. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Happold, David C. D. (2013) (in en). Mammals of Africa. 3. A&C Black. பக். 705. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781408189962.