எர்த் (1930 திரைப்படம்)
எர்த் (உக்ரைனியன்: Земля, எழுத்துப்பெயர்ப்பு: Zemlya; பொருள்: உலகம்) என்பது 1930 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சோவியத் நாட்டு ஊமைத் திரைப்படமாகும். ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம், சோவியத் ஒன்றிய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை எதிர்த்த நில உரிமையாளர்களின் விரோதப் போக்கைப் பற்றிய படமாகும். டோவ்சென்கோ இயக்கத்தில் வெளிவந்த மூன்று உக்ரைன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
எர்த் | |
---|---|
இயக்கம் | ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ |
கதை | ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டானிலோ டெமுட்சுகி |
படத்தொகுப்பு | ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ |
வெளியீடு | ஏப்ரல் 8, 1930 |
ஓட்டம் | 76 நிமிடங்கள் |
நாடு | சோவியத் ஒன்றியம் |
மொழி | ஊமைத் திரைப்படம் உக்ரேனிய இடை தலைப்புகள் |
இந்த திரைப்படத்தின் கதையானது இயக்குனரின் சொந்த வாழ்க்கை மற்றும் உக்ரைனில் அப்போது இருந்த செயல்முறைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த படத்தின் கதை மற்றும் அதன் உக்ரைன் பின்னணி ஆகியவற்றால், இது சோவியத் குடியரசின் மற்ற பகுதிகளில் எதிர்மறையான வரவேற்பை பெற்றது.
எர்த் பொதுவாக டோவ்சென்கோவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும் இது உக்ரானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.1958 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்சில் நடந்த உலக கண்காட்சியில் பட்டியலிடப்பட்ட மதிப்புமிக்க 12 திரைப்படங்களின் பட்டியலில், இந்த திரைப்படம் இடம்பெற்றது.
கதை
தொகுகோதுமை பயிர்கள் மற்றும் சூரியகாந்தி மலர்ச் செடிகள் நிறைந்த ஓர் வயல் வழியாக வீசும் காற்றின் தொகுப்புடன் திரைப்படம் தொடங்குகிறது. செமியோன் என்ற ஓர் வயதான விவசாயி, ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் படுத்துறங்கும் போது இறக்கிறார். இவரது மகன் ஓபனாசு மற்றும் பேரன் வாசில் ஆகியோர் இவரது இறுதி சடங்கில் கலந்துகொள்கின்றனர். அந்த நேரத்தில் கிராமத்தில் ஆர்க்கி பிலோக் தலைமையில் உள்ளூர்வாசிகளான குலாக் மக்கள், சோவியத் அரசின் கூட்டுப்பணி செய்யும் நடைமுறையை கண்டித்து, அதற்கு எதிரான போராட்டங்களை அறிவிக்கின்றனர். மேலும் ஓபனாசின் வீட்டில், வாசிலும் அவரது நண்பர்களும் கூடி கூட்டுப்பணிக்கு ஆதராவாக பேசுகின்றனர், மேலும் இதை எதிர்த்த ஓபனாசுடன் வாதிடுகின்றனர்.
பின்னர், ஊரிலேயே முதல் உழவு இயந்திரத்தை அரசாங்க உதவியுடன் வாசில் பெறுகிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தை இயந்திரத்தை கொண்டு உழுது தானியங்களை விதைத்து, பின்னர் அறுவடை செய்கின்றனர். இந்த செயல்பாட்டின் போது உள்ளூர்வாசிகளான குலாக் மக்கள் அமைத்த வேலிகளை அழிக்கின்றனர். பின்னர் அறுவடை செய்த கோதுமையிலிருந்து ரொட்டி உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒரு நாள் இரவு வாசில் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்படுகிறார். இதனால் கோபமுற்ற ஓபனாசு வாசிலின் கொலையாளியைத் தேடி அலைகிறார். பின்னர் சந்தேகத்தின் பேரில் பிலோக்கின் மகன் கோமாவை எதிர்கொள்கிறார். இருப்பினும் கோமா எதையும் ஒப்புக்கொள்ளாமல் நழுவிச் செல்கிறார்.
வாசிலின் இறுதிச் சடங்கிற்கு தலைமை தாங்க வரும் உருசிய மதகுருவை ஓபனாசு திருப்பி அனுப்புகிறார். மேலும் அன்று முதல் தான் நாத்திகத்தை கடைபிடிப்பதாக அறிவிக்கிறார். பின்னர் ஓபனாசு வாசிலின் நண்பர்களிடம் தனது மகனுக்கு மதச்சார்பற்ற முறையில் இறுதிச் சடங்கை செய்து முடிக்க வேண்டுகிறார். வாசிலின் நண்பர்கள் அவருடைய வேண்டுதலின் படி அவ்வாறு செய்கிறார்கள். அதே நேரத்தில் வாசிலுக்காக நிச்சயக்கப்பட்ட நடாலியா இதை கண்டு மிகவும் துக்கப்படுத்துகிறார். மேலும் உள்ளூர் பாதிரியார் இந்த இறுதி சடங்கு முறைகளை கண்டித்து குடும்பத்தை சபிக்கிறார். வாசிலியை அடக்கம் செய்யும் தருணத்தில், கோமா அங்கே வந்து தான் கூட்டுப்பணியை எதிர்ப்பதாகவும், அதை ஆதரித்தற்காக வாசிலியை கொன்றதாகவும் அறிவிக்கிறார். இதை தொடந்து உள்ளூர் கிராமவாசிகள் கோமாவை புறக்கணிக்கிறார்கள். அதே நேரத்தில் வாசிலின் நண்பர் ஒருவர் அவரைப் புகழ்ந்து பாடுகிறார். சிறிது நாட்களுக்கு பிறகு மழையில் நடாலியா தன் புதிய காதலருடன் தழுவிக்கொள்ளும் காட்சியுடன் படம் முடிகிறது.
நடிப்பு
தொகு- குர்ட் சுடீபன் இரோசிபோவிச் - ஓபனாசு
- சுவாசென்கோ அண்டிரியோவிச் - வாசிலி
- யூலியா சொல்ன்ட்சேவா - வாசிலியின் சகோதரி
- எலேனா மக்சிமோவா - நடாலியா
- மிகோலா ககரோவிச் நாடெம்சுகி - செமியோன்
- பெட்ரோ மசோகா - கோமா பிலோகின்
- இவான் பிராங்கோ - ஆர்க்கி பிலோகின்
- வொலோடிமிர் மிகாசலோவ் - கிறித்துவ மதகுரு
- பாவ்லோ பெட்ரிக் - பொதுவுடைமை கட்சி தலைவர்
- உமானெட்சு ஆமாம் - விவசாயி
- பொண்டினா - விவசாயப் பெண்
- லூகா லியாசேன்கோ - ஓரு இளம் குலாக் போராளி
பின்னணி
தொகுஉக்ரேனிய சோவியத் குடியரசில் கூட்டுறவு விவசாயம் செயல்படுத்தப்பட்ட போது, இந்த திரைப்படத்தை டோவ்சென்கோ எழுதி, இயக்கி படமாக்கினார். இந்த திரைப்படம் அப்போதைய காலக்கட்ட மாற்றங்களை பிரதிபலிப்பதாக டோவ்சென்கோ விவரித்தார். 1930 களில் சோவியத் அரசு விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக தனியாருக்கு சொந்தமான பண்ணைகளை ஒருங்கிணைத்து அரசுடைமையாக்க முற்பட்டது. இதை எதிர்த்த விவசாயிகள் தாங்கள் வளர்த்த விலங்குகளைக் கொள்வது, விவசாய இயந்திரங்களை நாசப்படுத்துவது மற்றும் திட்டத்தை செயல்படுத்த வந்த சோவியத் அரசின் முகவர்களைக் கொள்வது என பல வழிகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.[1] மேலும் இந்த கதையின் பெரும்பகுதி இயக்குனரின் செயல்முறையின் அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டதாக தெரிவித்தார். வாசிலி கதாபாத்திரம் அவரது சொந்த மாவட்டத்தில் ஒரு சோவியத் முகவர் படுகொலை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. மேலும் செமியோனின் கதாபாத்திரத்தை தனது சொந்த தாத்தாவை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறினார்.[2] இந்த திரைப்படத்தின் படமாக்கம் 24 மே 1929 அன்று தொடங்கி 25 பிப்ரவரி 1930 அன்று நிறைவடைந்தது. இந்த திரைப்படத்திற்கு லெவ்கோ ரெவட்சுகி இசையமைத்தார்.[3]
ஒளிப்பதிவு
தொகுஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் உக்ரைனின் போல்டாவா மாகாணத்தில் நடந்தது. இந்த படத்தைத் தயாரிக்க டோவ்சென்கோவுக்கு உக்ரேனிய ஒளிப்பதிவாளர் டானிலோ டெமட்சுகி உதவினார். டெமட்சுகி ஏற்கனவே டோவ்சென்கோவின் முந்தைய இரண்டு படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தார். இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்த பல காட்சிகளில் ஒப்பனை பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[4]
வெளியீடு
தொகுஇந்த திரைப்படம் 8 ஏப்ரல் 1930 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளியான ஒன்பது நாட்களுக்குப் பிறகு சோவியத் அதிகாரிகளால் இது தடை செய்யப்பட்டது.[5][6] மேலும் இதை மீண்டும் காட்சிப்படுத்த இதில் பல காட்சிகளை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.[7] 1941 ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிய விமான தாக்குதலில் இந்த திரைப்படத்தின் அசல் பதிவுகள் அழிக்கப்பட்டது.[8] 1952 ஆம் ஆண்டில் டோவ்சென்கோ இந்த திரைப்படத்தை தழுவி ஒரு நாவலை எழுதினார்.[9]
2012 ஆம் ஆண்டில், உக்ரேனிய அரசு திரைப்பட காப்பகமான தேசிய ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ திரைப்பட மையம், எஞ்சி இருந்து பதிவுகளிலிருந்து இந்த படத்தை மீட்டெடுத்து, உக்ரேனிய நாட்டுப்புற இசையமைப்பாளர்கள் தகா பிராகா உதவியுடன் ஒரு புதிய பின்னணி இசையுடன் சேர்த்து வெளியிட்டது. இந்த புது பதிப்பு 2012 ஒடேசா சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்பட்டது.[6]
வரவேற்பு
தொகுஇந்த திரைப்படம் வெளியான சமயத்தில் சோவியத் குடியரசில் திரைப்பட மற்றும் இதர கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மேலும் டோவ்சென்கோ போன்ற முக்கியமான இயக்குநர்கள் மற்றும் விமர்சகர்கள் அரசால் பெரிதும் விமர்சிக்கப்பட்டனர் மற்றும் ஒடுக்கப்பட்டனர்.[10] மேலும் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியாக பாராட்டினாலும், படத்தில் கூறப்படும் கருத்துகளை விமர்சித்தனர். பொதுவுடைமை கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான பிரவ்தா, படத்தின் காட்சி பாணியைப் பாராட்டியதோடு, அதன் அரசியல் உள்ளடக்கம் தவறானது என விமர்சித்தது.[11] கவிஞர் டெமியன் பெட்னி இந்த திரைப்படம் புரட்சிக்கு எதிரானது எனக்கூறி விமர்சித்தார்.[11] இந்த திரைப்படத்தின் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு டோவ்சென்கோ மிகவும் வருத்தப்பட்டார். மேலும் இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட இவர் உக்ரைனை விட்டு வெளியேறி, மேற்கு ஐரோப்பாவிற்கு சென்றார்.[12]
திரைப்பட விமர்சகரான இப்போலிட் சோகோலோவ், டோவ்சென்கோகோவை ஒரு சிறந்த இயக்குநர் என்று பாராட்டினார்.[13] விமர்சகர் லெசூன் படத்தை வெகுவாக பாராட்டினார்.[14] லூயிஸ் சேக்கப்சு டோவ்சென்கோவின் படைப்புகளை செர்கீ ஐசென்சுடைன் மற்றும் வெசுவோலோட் புடோவ்கின் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டார். திரைப்பட இயக்குநர் கிரிகோரி ரோசல், "ஒலெக்சாண்டர் டோவ்சென்ன்கோ எப்போதும் ஒரு புதுமை படைப்பாளர்" என பாராட்டினார்.[14] வரலாற்றாசிரியர் மார்கோ கரினிக் படத்தின் "உணர்ச்சிபூர்வமான எளிமையின் காரணமாக இது உலக சினிமாவின் தலைசிறந்த படைப்பாக மாறியுள்ளது" என்று பாராட்டினார்.[15] 1995 ஆம் ஆண்டில் டைம் அவுட் இதழால் நடத்தப்பட்ட ஓர் வாக்கெடுப்பில், கடந்த நூற்றாண்டின் 100 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த திரைப்படம் இடம் பெற்றது.[16] 2012 ஆண்டு உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் கருத்துக்கணிப்புகளில் இந்த படைப்பு 10 விமர்சகர்களின் வாக்குகளைப் பெற்றது.[17]
எர்த் பரவலாக டோவ்சென்கோவின் மகத்தான படைப்பாக கருதப்படுகிறது. மேலும் இது உக்ரைனில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.[6] ஒலெக்சாண்டர் டோவ்சென்கோ திரைப்பட மையம் இதை உக்ரேனிய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படமாக கருதுகிறது.[18] 1958 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்சில் நடந்த உலக கண்காட்சியில் பட்டியலிடப்பட்ட மதிப்புமிக்க 12 திரைப்படங்களின் பட்டியலில், இந்த திரைப்படம் இடம்பெற்றது. மேலும் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தனது 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில் திரையிடப்பட்ட ஐந்து படங்களில் ஒன்றாக எர்த் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kepley 1986, ப. 76–78.
- ↑ Dovzhenko 1973, ப. 59–60, 65.
- ↑ Leyda 1983, ப. 436.
- ↑ Rollberg 2010, ப. 168–169, 203.
- ↑ Gerhard, Susan. "Earth". San Francisco Silent Film Festival. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
- ↑ 6.0 6.1 6.2 "Earth". National Oleksandr Dovzhenko Film Centre. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
- ↑ Burns 1981, ப. 92.
- ↑ Beumers 2007, ப. 57.
- ↑ Dovzhenko 1973, ப. 58.
- ↑ Youngblood 1991, ப. 194–204.
- ↑ 11.0 11.1 Kepley 1986, ப. 75.
- ↑ Wakeman 1987, ப. 263.
- ↑ Youngblood 1991, ப. 211.
- ↑ 14.0 14.1 Manvell 1949, ப. 159–60.
- ↑ "Top 100 Films (Centenary)". filmsite.org. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
- ↑ Wakeman 1987, ப. 262.
- ↑ "ZEMLYA (1930)". BFI.org.uk. British Film Institute. Archived from the original on 9 April 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
- ↑ "MRC FilmFinder – Full Record: Earth". lib.unc.edu. University of North Carolina at Chapel Hill. பார்க்கப்பட்ட நாள் 2 November 2008.
புத்தகங்கள்
தொகு- Barsam, Richard (1992). Nonfiction Film: A Critical History. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253207067.
- Beumers, Birgit (2007). The Cinema of Russia and the Former Soviet Union. Wallflower Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781904764984.
- Dobrenko, Evgeny (2007). "The Product: Aleksandr Dovzhenko's "Created Space"". Political Economy of Socialist Realism. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300122800.
- Dovzhenko, Oleksandr (1973). "Earth". Two Russian Film Classics. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0671213938.
- Kepley, Vance (1986). In the Service of the State: The Cinema of Alexander Dovzhenko. University of Wisconsin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780299106805.
- Leyda, Jay (1983). Kino: A History of the Russian and Soviet Film. Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691003467.
- Manvell, Roger, ed. (1949). Experiment in the Film. The Grey Walls Press. இணையக் கணினி நூலக மைய எண் 1074067763.
- Rollberg, Peter (2010). The A to Z of Russian and Soviet Cinema. The Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810876194.
- Wakeman, John (1987). World Film Directors: 1890–1945. H. W. Wilson Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824207571.
- Youngblood, Denise (1991). Soviet Cinema in the Silent Era, 1918–1935. University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780292761100.
கட்டுரைகள்
தொகு- Bahry, Romana M. (2011). "Subversions in Dovzhenko's "Earth"". Harvard Ukrainian Studies (Harvard Ukrainian Research Institute) 32/33: 97–106.
- Burns, Paul E. (December 1981). "Cultural Revolution, Collectivization, and Soviet Cinema: Eisenstein's Old and New and Dovzhenko's Earth". Film & History 11 (4): 84–96. பன்னாட்டுத் தர தொடர் எண்:1548-9922.
- Peter Kenez (Autumn 1988). "The Cultural Revolution in Cinema". Slavic Review (Cambridge University Press) 47 (3): 414–33. https://archive.org/details/sim_slavic-review_fall-1988_47_3/page/414.
- Mally, Lynn (January 1993). "Review of Earth". The Russian Review 52 (1): 93. https://archive.org/details/sim_russian-review_1993-01_52_1/page/93.
- Papazian, Elizabeth A. (July 2003). "Offscreen Dreams and Collective Synthesis in Dovzhenko's Earth". The Russian Review 62 (3): 411–28. https://archive.org/details/sim_russian-review_2003-07_62_3/page/411.
- Gilberto Perez (Spring 1975). "All in the Foreground: A Study of Dovzhenko's "Earth"". The Hudson Review 28: 68–86. https://archive.org/details/sim_hudson-review_spring-1975_28_1/page/68.
- Perez, Gilberto (Summer 2011). "Dovzhenko: Folk Tale and Revolution". Film Quarterly (University of California Press) 64 (4): 17–21. https://archive.org/details/sim_film-quarterly_summer-2011_64_4/page/17.