எலு மொழி (Eḷu) அல்லது ஹெல மொழி (Helu) என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படும் கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய ஐரோப்பியப் பிராகிருத மொழியாகும். இதைப் பழம் சிங்கள மொழி எனக் கொள்வாரும் உளர். இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும்.

எலு
ஹெல
பிராந்தியம்இலங்கை
ஊழிevolved into சிங்களம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புNone

வரலாறு

தொகு

எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. பல்வேறுபட்ட கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுவே உலகின் முதல் மொழி என்பது முதல் கிறித்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் உருவான மொழி என்பதுவரை கருத்துக்கள் உள்ளன. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எலுவும் வடமொழிகளும்

தொகு

வட இந்திய மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதும், இந்திய- ஆரிய மொழிகளுள் ஒன்றானதுமான எலு மொழி இலங்கையின் பிராகிருதம் என்று குறிப்பிடப்படுவது உண்டு. இதனால், எலு மொழிக்கும், சமசுக்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பௌத்த சமயத்தின் மொழியான பாளி மொழியின் தாக்கம் எலு மொழியில் பெருமளவு காணப்படுகிறது.

எலு மொழியும் தேசியவாதக் கருத்தாக்கங்களும்

தொகு

எலு மொழி தூய சிங்கள மொழி என்றும் வேறு மொழிகளின் கலப்பு இல்லாதது என்றும் ஒரு கருத்தை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில சிங்களத் தேசியவாதத் தலைவர்கள் முன்வைத்தனர். மிகப் பழைய காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகப் பழைய இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் முதலியோர் எலு மொழியையே பேசினர் என்பது இவர்களது கருத்தாக இருந்தது. வட இந்திய இதிகாசமான இராமாயணத்தில் வரும் இராவணன் எலு மொழியைப் பேசிய எலு இனத்தவனே என்பதும் இவர்களது வாதம். கலப்பற்ற மொழி என்னும் வாதத்தை முன்னிறுத்திய இவர்களிற் சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று சமசுக்கிருதம், பாளி முதலிய இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் மொழி எலு மொழியே என்ற கருத்தை முன்வைத்ததையும் காண முடிகிறது.[1][2]

ஹெல மொழி இயக்கம்

தொகு

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பிரித்தானிய ஆதிக்கத்துக்கு எதிரான சிங்களத் தேசியவாதத்தின் எழுச்சி, சிங்கள இனத்துக்கான வலுவான அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் எலு மொழி தொடர்பான கருத்தாக்கத்தைப் பயன்படுத்த முயன்றது.[3] குமாரதுங்க முனிதாச போன்ற தலைவர்களால் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இவர்கள், சிங்கள மொழியில் ஆங்கில மொழியினதும் ஐரோப்பிய பண்பாட்டினதும் தாக்கங்களை மட்டுமன்றி, சமசுக்கிருதம், பாளி முதலிய இந்திய மொழிகளின் தாக்கங்களையும் எதிர்த்தனர். இதனால், பிற மொழித் தாக்கங்களினால் ஏற்பட்ட சொற் கலப்புக்களையும், இலக்கணக் கலப்புக்களையும் நீக்கித் தூய சிங்களம் என அவர்களால் கருதப்பட்ட எலு மொழிச் சொற்களைப் பயன்படுத்தவும், புழக்கத்தில் இருந்த சமசுக்கிருத இலக்கணத்தை அடியொற்றிய சிங்கள இலக்கணத்துக்கு மாற்றாக எலு மொழி இலக்கணத்தைப் பின்பற்றிப் புதிய இலக்கணத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் வாதித்தனர்.[4] எனினும் இது போதிய வெற்றியை அடையவில்லை.[5][6] ஆனாலும், இந்த ஹெல மொழிக் கருத்தாக்கம், மொழியை அரசியல்மயப்படுத்தவும், சிங்கள மொழியை மட்டும் அரச மொழியாக்கும் கொள்கைக்கும் பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளது.[7]

குறிப்புகள்

தொகு
  1. Coparahewa, Sandagomi., 2011. p.24.
  2. Wickramasinghe, Nira., 2009. p.91.
  3. Coparahewa, Sandagomi., 2011. p.23.
  4. Coparahewa, Sandagomi., 2011. p.16.
  5. Coparahewa, Sandagomi., 2011. p.34.
  6. Dharnadasa, K. N. O., 1993. pp 278-281.
  7. Coparahewa, Sandagomi., 2011. p.35.

உசாத்துணை

தொகு
  • Wickramasinghe, Nira., Sri Lanka in the Modern Age: A History of Contested Indentities, University of Hawai Press, Honalulu, 2006.
  • Coparahewa, Sandagomi., Purifying the Sinhala Language: The Hela Movement of Munidasa Cumaratunga (1930s–1940s), Modern Asian Studies: page 1 of 35, �Cambridge University Press 2011.
  • Dharnadasa, K. N. O., Language, Religion, and Ethnic Assertiveness: The Growth of Sinhalese Nationalism in Sri Lanka, University of Michigan Press, 1993.
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 9, கண்டி சிந்தனை வட்டம், 7ம் பதிப்பு 1998
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலு_மொழி&oldid=3300352" இலிருந்து மீள்விக்கப்பட்டது