எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்

சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (பிறப்பு: சனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2023 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதினைப் பெற்ற இவர், 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றுள்ளார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

வரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்[1]. 1959இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுகலை (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளியியலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963 இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968இல் இணைப்பேராசிரியரானார். 1972இல் பேராசிரியராக பணி உயர்வுபெற்று, 1980இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.

இவரது மனைவி வசுந்தரா வரதன் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூயார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

பரிசுகளும் பெருமைகளும்

தொகு

பேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு:

 • வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77)
 • வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972)
 • வருகையாளர் பதவி, முன்னிலை ஆய்வுக்கான கழகம் (Institute for Advanced Study), பிரின்சிட்டன் (1991-92)
 • ஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் (1970-72)
 • கூகன்ஃகைம் பேராளர் (1984-85)
 • அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)
 • மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995)
 • மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003)
 • கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004)
 • அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010
 • இன்ஃபோசிசுப் பரிசு, 2013

ஏபெல் பரிசு

தொகு

நார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003 இலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள்.

பேராசிரியர் வரதனின் ஏபெல் பரிசு

தொகு

2007இன் ஏபெல் பரிசு இவருக்குக் கொடுக்கப்பட்டபோது இது 'நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு இவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக 'பெரிய விலக்கங்கள் கோட்பாடு' (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்&oldid=3656009" இலிருந்து மீள்விக்கப்பட்டது