எஸ். சி. கிருஷ்ணன்
எஸ். சி. கிருஷ்ணன் (S. C. Krishnan) சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.[1] 1950களில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.[2] தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த 'அத்தானும் நான் தானே', 'சித்தாடை கட்டிக்கிட்டு', 'மண்ணை நம்பி மரமிருக்கு' ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.
எஸ். சி. கிருஷ்ணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சிவகெங்கை செல்வம்ஆச்சாரி கிருஷ்ணன் |
பிறப்பு | 1929 |
இறப்பு | 1983 |
இசை வடிவங்கள் | திரையிசை |
தொழில்(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகர் |
இசைத்துறையில் | 1952 - 1977 |
இளமைக்காலம்
தொகுஅப்போது இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழிருந்த சிவகங்கையில் 1929 ஆம் ஆண்டு செல்வம் ஆச்சாரி என்ற நகைத் தொழிலாளியின் நான்காவது மகனாகப் பிறந்தார். 1937 ஆம் ஆண்டு டி. கே. எஸ். நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணன், கே. ஆர். ராமசாமி ஆகியோரின் நாடகக் குழுக்களிலும் நடிகராக இருந்துள்ளார். அப்போது அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு நாடகங்களும் வேலைக்காரி, ஓர் இரவு என்ற பெயரிலேயே பின்னர் திரைப்படமாக்கப்பட்டன.
தொழில் வாழ்க்கை
தொகு1949 ஆம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் அக்காலத்தில் நடிகர்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்படுவது வழக்கம். அங்கு வேலை செய்யும் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல படங்களில் நடித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் கல்யாணி என்ற திரைப்படத்தைத் தயாரித்த போது அதில் முதன்முதலாக இரண்டு பாடல்கள் பாடினார். ஒரு பாடலைத் தனித்தும், மற்றப் பாடலை கே. ராணியுடன் இணைந்தும் பாடினார். தனித்துப் பாடிய கலப்படம், கலப்படம் என்ற பாடல் புகழ் பெற்றது. அதன் பின் பின்னணிப் பாடகராக விளங்கினார்.
இவர் கருநாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருந்தும் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்குக் குரல் கொடுக்கவே இவரை இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினார். எனினும் அமுதவல்லி என்ற திரைப்படத்தில் இவர் டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடிய தத்துவக் கலையுடன் என்ற பாடல் இவரது சங்கீத ஞானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இவர் சிறிது காலம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.
விருதுகளும் பட்டங்களும்
தொகு1981 ஆம் ஆண்டு தமிழ் நாடு மாநில அரசால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
தொகுஇவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் குடும்பமாக அமைந்தனர். டி. ஆர். மகாலிங்கம் இவரது சிறந்த நண்பராக இருந்தார். தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டார். சுமார் 4 வருடங்கள் நோயால் அவதிப்பட்ட பின்னர் 1983 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sourashtra Community and Cinema Industry". 22 February 2009. Archived from the original on 3 February 2019. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
- ↑ "S C Krishnan - Tamil film songs - Indian Heritage".
நூற்பட்டியல்
தொகு- சகாதேவன் விஜயகுமார். "எஸ். சி. கிருஷ்ணன் - பின்னணிப் பாடகர்". Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.
- கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் கலப்படம் கலப்படம் - அவரது முதல் தனிப்பாடல்.
- எஸ். சி. கிருஷ்ணன் பாடல்கள்