கே. ஆர். ராமசாமி

தமிழ் திரைப்பட நடிகர்

கே. ஆர். ராமசாமி (ஏப்ரல் 14, 1914 - ஆகத்து 5, 1971) தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.

கே. ஆர். ராமசாமி
KRRamasamy1.jpg
பிறப்புகும்பகோணம் ராமபத்ர இராமசாமி
ஏப்ரல் 14, 1914(1914-04-14)
கும்பகோணம்
இறப்பு5 ஆகத்து 1971(1971-08-05) (அகவை 57)
தேசியம்இந்தியர்
பணிநடிகர், பாடகர்
வாழ்க்கைத்
துணை
கல்யாணி
பிள்ளைகள்2

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமசாமியின் கலை வாழ்க்கை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் ஆரம்பமானது. தனது ஆறாவது வயதிலேயே நாடக மேடையில் ஏறினார். தனது பதின்மூன்றாவது வயதில் டி. கே. எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் இணைந்து கொண்டார். எட்டாண்டு காலம் இதே கம்பனியில் பணியாற்றினார். அப்போது மேனகா என்ற தங்களது நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் மேனகா என்ற அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் பைத்தியக்காரனாக கே.ஆர்.ராமசாமி நடித்தார். இதுவே இவரது முதலாவது படமும் தமிழில் வெளிவந்த முதலாவது சமூகப்படமும் ஆகும்.

இதன் பின்னர் சண்முகம் சகோதரர்களின் குமாஸ்தாவின் பெண் (1941) படத்தில் "சினிமா இயக்குநர் வி.பி.வார்" என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார். ராமசாமியை முதன் முதலாகக் கதாநாயகனாக்கியது பூம்பாவை (1944). இவருடன் யூ. ஆர். ஜீவரத்தினம் இணைந்து நடித்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் என்.எஸ்.கே நாடகக் குழுவில் இணைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் சிறை செல்ல நேர்ந்த பிறகு, அவரது நாடக சபையில் இருந்து விலகி கலைவாணர் பெயரிலேயே கிருஷ்ணன் நாடக சபாவை ஜூலை 17, 1946 இல் தொடங்கினார். திராவிட இயக்கத்தோடு, குறிப்பாக அறிஞர் அண்ணாவோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சொந்தத்தில் ராமசாமி நாடகக் குழுவைத் தொடங்கியதும், இக்குழுவிற்காகவே அண்ணா வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

தெய்வ நீதி (1947), கங்கணம் (1947), பில்ஹணா ஆகிய படங்களில் நடித்தார். கிருஷ்ண பக்தியில் துணை நடிகராக நடித்தார்.

ராமசாமிக்கு பெரும்புகழைத் தேடித்தந்த படம் வேலைக்காரி. இது 1949 இல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து 1950 இல் விஜயகுமாரியில் டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து நடித்தார். அண்ணாவின் ஓர் இரவு (1951) திரைப்படமும் இவருக்குப் புகழைத் தேடித்தந்தது.

எதையும் தாங்கும் இதயம் திரைப்படத்தில் எஸ். ஜானகியுடன் இணைந்து உள்ளம் தேடாதே என்று சொல்லுதே என்ற பிரபலமான பாடலைப் பாடினார்.

பிற்காலம்தொகு

பின்னாட்களில் நாடோடி (1966), அரச கட்டளை (1967), நம் நாடு (1969) போன்ற படங்களில் கௌரவ நடிகராக ராமசாமி நடித்தார். திரையுலகில் பல துறைகளிலும் தன்னை நிலை நிறுத்திப் புகழ்பெற்ற கே. ஆர். ராமசாமி ஆகஸ்ட் 1971 இல் மறைந்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்தொகு

 1. பூம்பாவை (1944)
 2. தெய்வ நீதி (1947)
 3. கங்கணம் (1947)
 4. கிருஷ்ண பக்தி (1949)
 5. வேலைக்காரி (1949)
 6. விஜயகுமாரி (1950)
 7. காஞ்சனா (1952)
 8. துளி விசம் (1954)
 9. சுகம் எங்கே (1954)
 10. சொர்க்க வாசல் (1954)
 11. மேனகா (1955)
 12. நீதிபதி (1955)
 13. சதாரம் (1956)
 14. அவன் அமரன் (1958)
 15. கன்னியின் சபதம் (1958)
 16. தலை கொடுத்தான் தம்பி (1959)
 17. செந்தாமரை (1962)
 18. எதையும் தாங்கும் இதயம் (1962)

உசாத்துணைதொகு

 • வானொலி மஞ்சரி, ஜனவரி 1999, கொழும்பு
 • பேசும்படம், மார்ச் 1949, சென்னை
 • பேசும்படம், மே 51, சென்னை
 • திராவிட இயக்கத் தூண்கள் (1999), க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._ராமசாமி&oldid=2863922" இருந்து மீள்விக்கப்பட்டது