டி. ஆர். ராஜகுமாரி

தமிழ் திரைப்பட நடிகை

டி. ஆர். ராஜகுமாரி (5 மே 1922 – 20 செப்டம்பர் 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.

டி. ஆர். ராஜகுமாரி

இயற் பெயர் தஞ்சாவூர் இராதாகிருஷ்ணன் ராஜாயி
பிறப்பு (1922-05-05)5 மே 1922
தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 20 செப்டம்பர் 1999(1999-09-20) (அகவை 77)
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1939–1963
துணைவர் திருமணம் செய்யவில்லை
உறவினர் எஸ். பி. எல். தனலட்சுமி (சித்தி) [1]
டி. எஸ். தமயந்தி (ஒன்றுவிட்ட சகோதரி)
டி. ஆர். ராமண்ணா (தம்பி)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு முதல் மகளாக பிறந்தார். பிரபல பாடகியான தஞ்சை குசலாம்பாளின் இரண்டாவது மகளே இவர் தாயார் ரெங்கநாயகி ஆவார். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனாரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தம்பி ஆன டி. ஆர். ராமண்ணா குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்தார்.

திரைப்படத்துறை பங்களிப்புகள்

தொகு

நடிப்பு

தொகு

1939-ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.

எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.

பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.

மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37-ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.

சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

தொகு

பின்னணிப் பாடகியாக

தொகு

இதய கீதம் திரைப்படத்தில் வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே, ஓடி வா வெண்முகில் போலே ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.[2]

திரைப்படத் தயாரிப்பாளர்

தொகு

ராஜகுமாரி தன் தம்பி டி.ஆர்.ராமண்ணாவுடன் இணைந்து ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார். அதன் வழியாகப் பின்வரும் படங்களைத் தயாரித்தார் :[3]

  1. வாழப்பிறந்தவள்
  2. கூண்டுக்கிளி (1954)
  3. குலேபகாவலி

திரையரங்க உரிமையாளர்

தொகு

சென்னை தியாகராயர் நகரில் ராஜகுமாரி என்ற திரையரங்கை உருவாக்கினார். அதனை எஸ். எஸ். வாசன் திறந்துவைத்தார். பின்னர் அதனை விற்றுவிட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. பா. தீனதயாளன் (11 சனவரி 2016). டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீல்!. தினமணி.
  2. "Ithaya Geetham (1950)". தி இந்து. 17 ஜூன் 2010. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 தினத்தந்தி, 2004 12 01, பக்.13

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._ராஜகுமாரி&oldid=3930522" இலிருந்து மீள்விக்கப்பட்டது