கச்ச தேவயானி

கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கச்ச தேவயானி 1941 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு துன்பியல் காதல் கதையைக் கூறுவதாகும்.[2] இதில் கொத்தமங்கலம் சீனு, டி. ஆர். ராஜகுமாரி, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[3]

கச்ச தேவயானி
சுவரொட்டி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
சி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மூலக்கதைமகாபாரதம் இதிகாசத்திலிருந்து ஒரு கதை
திரைக்கதைகே. சுப்பிரமணியம்
இசைவி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
டி. ஆர். ராஜகுமாரி
கொத்தமங்கலம் சுப்பு
மற்றும் பலர்
ஒளிப்பதிவுகமால் கோஷ்
படத்தொகுப்புஆர். ராஜகோபால்
கலையகம்மதராஸ் யூனைட்டட் ஆர்ட்ஸ் கார்ப்பரேசன்[1]
விநியோகம்ஜெமினி பிக்சர்ஸ்
வெளியீடு1941[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

முற்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அடிக்கடி போர் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் அமிர்தசஞ்சீவனி என்ற உயிர் காக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். அதன் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியும். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு இந்த வித்தை தெரியவில்லை. அதனால் போர் ஏற்படும்போது இறந்த அசுரர்கள் மீண்டும் உயிர் பெற்ற போது இறந்த தேவர்கள் இறந்தே போனார்கள். இதனால் தேவர்கள் ஒன்று கூடி பிரகஸ்பதியின் மகனான கச்சன் என்பவனை சுக்கிராச்சாரியரிடம் சீடனாகச் சேரும்படியும், அமிர்தசஞ்சீவனி வித்தையைத் தெரிந்து கொள்ளும்படியும் அனுப்பினார்கள். கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். தான் பிரகஸ்பதியின் மகன் என்றும் சுக்கிராச்சாரியாரிடம் சீடனாக ஆயிரம் வருடங்கள் சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தான். சுக்கிராச்சாரியாரும் அவனை மகிழ்ச்சியுடன் சீடனாக ஏற்றுக் கொண்டார். சுக்கிராச்சாரியருக்கு தேவயானி என ஒரு மகள் இருந்தாள். அவள் கச்சன் மீது காதல் கொண்டாள். 500 வருடங்கள் கடந்தன. கச்சன் சுக்கிராச்சாரியாரின் மாடுகளை மேய்ப்பதற்காக காட்டிற்குக் கூட்டிச் சென்றான். அவன் தங்கள் எதிரியான பிரகஸ்பதியின் மகன் என அறிந்து கொண்ட அசுரர்கள் இது தான் தக்க தருணம் என தீர்மானித்து, காட்டுக்குப் போய் கச்சனைக் கொன்று அவனது உடலை புலிகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள். மாடுகள் திரும்பி வந்தன. கச்சன் வராததைக் கண்ட தேவயானி தந்தை சுக்கிராச்சாரியரிடம் சென்று முறையிட்டாள். தான் கச்சனை விரும்புவதாகவும் அவனை யாரோ கொன்றிருக்கவேண்டும் எனவும் அவன் இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனவும் தந்தையிடம் சொன்னாள். சுக்கிராச்சாரியார் தனது மந்திர சக்தியினால் கச்சனை உயிர் பெறச் செய்தார். அவனும் நல்ல பலத்துடன் திரும்பி வந்தான். சில காலம் போனது. ஒரு நாள் கச்சன் மலர்கள் பறிப்பதற்காகக் காட்டுக்குள் போனான். அசுரர்கள் அவனைக் கொன்று, அவன் உடலை எரித்து அந்த சாம்பலை ஒரு பானத்தில் கரைத்து சுக்கிராச்சாரியர் அருந்தக் கொடுத்தார்கள். அவரும் அதைப் பருகி விட்டார். தேவயானி மீண்டும் தந்தையிடம் முறையிட்டாள். தன் சக்தியினால் கச்சன் தன் வயிற்றில் இருப்பதை சுக்கிராச்சாரியர் அறிந்து கொண்டார். எனவே மகளிடம், "அவன் இப்போது என் வயிற்றில் இருக்கிறான். அவனை உயிர் பெறச் செய்தால் அவன் என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். அப்போது நான் இறந்து விடுவேன். ஆகையால் உனக்கு அவன் வேண்டுமா, நான் வேண்டுமா?" என்று கேட்டார். அதற்குத் தேவயானி "எனக்கு அவரும் வேண்டும், நீங்களும் வேண்டும். நீங்கள் தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டாள். சுக்கிராச்சாரியார் யோசித்தார். இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அவர் தனது வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்த மந்திர சக்தியினால் அவனை உயிர் பெறச் செய்தார். கச்சன் அவரது உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். உடல் கிழிந்ததால் சுக்கிராச்சாரியார் இறந்தார். ஆனால் கச்சன் அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லி அவரை மீண்டும் உயிர் பெறச் செய்தான். ஆயிரம் வருடங்கள் கழிந்தன. தான் தேவலோகத்துக்குப் புறப்படுவதாக கச்சன் சொன்னான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தேவயானி அவனிடம் கேட்டாள். அதற்கு அவன் "நீ என் குருவின் மகள். ஆகவே நீயும் எனக்கு குருதான். அப்படியிருக்க உன்னை நான் எப்படி மணம் செய்வது. மேலும் நான் உன் தந்தை வயிற்றிலிருந்து வந்தேன். ஆகவே நீ எனக்கு சகோதரி போன்றவள். எனவே திருமணம் செய்ய முடியாது" என்று சொன்னான். தேவயானிக்குக் கோபம் வந்தது. "நீ வார்த்தைகளால் விளையாடுகிறாய். நீ கற்றுக்கொண்ட வித்தை உனக்குச் சமயத்தில் மறந்து போகும்" எனச் சாபமிட்டாள். கச்சன் அவளிடம் "நீ தேவையில்லாமல் சாபம் போட்டுவிட்டாய். உன்னை ஒரு பிராமணனும் திருமணம் செய்ய மாட்டான். நீ நினைத்த எதுவும் வாழ்வில் நடக்காது" எனப் பதில் சாபம் போட்டான். இவ்வாறு கச்சன், தேவயானி இருவர் வாழ்வும் முடிந்தது. தேவர்களின் எல்லா முயற்சிகளும் வீணாயின. அவர்கள் பரமசிவனிடம் போய் முறையிட்டார்கள். விஷ்ணுவிடம் போய்ச் சொல்லுமாறு பரமசிவன் அவர்களுக்குச் சொன்னார். ஆகவே தேவர்கள் விஷ்ணுவிடம் போனார்கள். பின்னர் விஷ்ணு பாற்கடலிலிருந்து அமிர்தத்தை எடுத்து தேவர்களுக்கு கொடுத்தார். அமிர்தத்தை உண்டதனால் தேவர்கள் சாகா வரம் பெற்றார்கள்.

நடிகர்கள்

தொகு
  • கொத்தமங்கலம் சீனு - கச்சன்
  • வித்துவான் சீனிவாசன் - சுக்கிராச்சாரியார்
  • மாஸ்டர் ராஜகோபால் - நாரதர்
  • எஸ். ராமச்சந்திர ஐயர் - விருஷபார்வ
  • கொத்தமங்கலம் சுப்பு - மதனாசுரன்
  • சி. என். சதாசிவையா - சிஷ்யன்
  • பி. ஆர். ராஜகோபால ஐயர் - சிஷ்யன்
  • ராமானுஜாச்சாரியார் - குக்குடாசுரன்
  • ஆர். எஸ். ராமசுவாமி ஐயர் - தேவேந்திரன்
  • தஞ்சாவூர் மணி ஐயர் - பிரகஸ்பதி
  • பி. ராஜகோபால ஐயர் - பரமேஸ்வரன்
  • டி. ஆர். ராஜகுமாரி - தேவயானி
  • கே. நாகலட்சுமி - சிம்ஹாசினி
  • டி. எஸ். ராஜம்மாள் - இந்திராணி
  • வி. சுப்புலட்சுமி - சர்மிஷ்டா
  • சி. வி. ராமச்சந்திரன்
  • சாம்பமூர்த்தி ஐயர்
  • விட்டல் ராவ்

[3]

தயாரிப்புக் குழு

தொகு
  • ஒளிப்பதிவு: கமால் கோஷ்
  • உதவி: சி. வி. ராமகிருஷ்ணன்
  • ஒலிப்பதிவு (வசனங்கள்): ஆர். ஏ. ஜீவரத்தினம்
  • உதவி: 'கே. மணவாளன்
  • ஒலிப்பதிவு (பாடல்கள்): சி. இ. பிக்ஸ்
  • உதவி: காந்தி
  • தொகுப்பு: ஆர். ராஜகோபால்
  • ஒளிப்படம்: எம். சி. அபூபக்கர்
  • ப்ராசசிங்: சரஸ்வதி சினி லேப்
  • கலை: ஓ. ஆர். எம்பரையா
  • ஒப்பனை: ஹரிபாத சந்திரா
  • உதவி: கோபால் ராவ் & கே. சோமு
  • தயாரிப்பு உதவியாளர்கள்: ஆர். ஜெகதீசன் & வத்திராயிருப்பு சீனு
  • கலையகம்: வேல் புரொடக்சன்ஸ், கிண்டி[3]

தயாரிப்பு

தொகு

கச்ச தேவயானி திரைப்படம் 1938 ஆம் ஆண்டு தெலுங்கில் தயாரானது. அதன் வெற்றியைக் கண்ட கே. சுப்பிரமணியம் அதே படத்தைத் தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். டி. ஆர். ராஜகுமாரியை பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்து இத் திரைப்படத்தைத் தயாரித்து 1941 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் நீண்ட காலம் கழித்து 1955 ஆம் ஆண்டு இதே பெயரில் கன்னடத்தில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார். கன்னடப் படத்தில் பி. சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார்.[2]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார். பாபநாசம் சிவன், அவரது சகோதரர் பி. ஆர். ராஜகோபால ஐயர் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். இப்படத்தில் 25 பாடல்கள் இருந்தன.[3]

சான்றாதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15. {{cite book}}: Cite has empty unknown parameter: |8= (help)
  2. 2.0 2.1 "KACHA DEVAYANI (1938)". தி இந்து. 20 மார்ச் 2011. Archived from the original on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 கச்சதேவயானி பாட்டுப் புத்தகம். சென்னை: ஆனந்த விகடன் பிரஸ், சென்னை. 25 ஏப்ரல் 1941. {{cite book}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்ச_தேவயானி&oldid=3793029" இலிருந்து மீள்விக்கப்பட்டது