ஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்
ஏனாமில் வலிய ஆட்சி மாற்றம் (Coup d'état of Yanaon) 1954ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் பகுதிகளை குறித்து தில்லியிலும் பாரிசிலும் உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தியா மற்றும் பிரான்சின் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வாகும்.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்த ஏனாமின் பெரும்பான்மையானோர் பிரெஞ்சு அரசுக்கு ஆதரவாக இருந்தனர்; சமதம் கிருச்னாயா, காமிச்செட்டி சிறீ பரசுராம வரப்பிரசாத ராவ் நாயுடு, காமிச்செட்டி வேணுகோபால ராவ் நாயுடு, கள்ள வெங்கட ரத்தினம் போன்ற தலைவர்கள் தீவிர பிரஞ்சு ஆதரவாளர்களாக இருந்தனர். இருப்பினும் தடாலா ராஃபேல் ரமணய்யாவின் போராட்டத்தாலும் தலைமை பேராளராக விளங்கிய கேவல் சிங் தலையீட்டாலும் இந்தப் பகுதிகள் விடுதலை பெற்றிருந்த இந்தியாவுடன் இணைந்தன.
இந்த வலிய ஆட்சிமாற்றம் குறித்து பலரால் வெவ்வேறு பார்வைகளில் அலசப்படுகிறது. இந்திய தேசியவாதிகள் இதனை விடுதலைப் போராட்டமாக கருத பிரெஞ்சு ஆதரவாளர்கள் துரோகச் செயலாக நோக்குகின்றனர்.
வலிய ஆட்சி மாற்றத்திற்கான காரணிகள்
தொகுபிரான்சின் இந்தியப்பகுதிகளின் விடுதலை மற்றும் இந்தியாவுடனான இணைப்பிற்கான போராட்டத்தின் ஒரு கட்டமே இந்த வலிய ஆட்சி மாற்றமாகும். எனவே பிரெசுப் பகுதிகளின் விடுதலைக்கான காரணங்களே இதற்கும் பொருந்தும். இருப்பினும் ஏனாமில் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சியே இல்லாது இருந்தது என்பதே முக்கிய வேறுபாடாகும். புதுச்சேரியின் புதிய இந்திய பேராளராகப் பொறுப்பேற்ற கேவல் சிங் ஏப்ரல் 11, 1954 அன்று கண்டமங்கலத்தில் நிகழ்த்திய உரையில் பிரெஞ்சு இந்தியாவின் மிகச்சிறிய ஏனாமை விடுவிக்க தடாலா ராஃபேல் ரமணய்யா திட்டமிடலாம் என தூண்டியதாகக் கூறப்படுகிறது.
வன்முறைக்கு முன்னர்
தொகுதிசம்பர் 10, 1953 அன்று தலைமைப் பேராளர் ஆர். கே. டண்டன் மாற்றப்பட்டு கேவல் சிங் பொறுப்பேற்றார். இவர் விடுதலை விரும்பிய செலியன் நாயக்கர் மற்றும் தடாலாவிற்குத் துணை நின்றார். கேவல் சிங் பிரெஞ்சு ஆதரவுத் தலைவர்களையும் சட்ட பேரவை உறுப்பினர்களையும் பிரித்து புதுதில்லிக்குக் கொண்டு சென்றார.
வி. சுப்பையா தலைமையில் இயங்கிய ஐக்கிய இயக்கம் பிரெஞ்சு-ஆதரவு எட்வர்ட் குபேரின் கட்சி மாற்றத்தால் வலுவடைந்தது. மார்ச் 18, 1954இல் புதுச்சேரி விடுதலை இயக்க வரலாற்றின் ஓர் மைல்கல்லாக அமைந்தது. அன்று புதுச்சேரி மேயரும் செயலாக்கக் குழு உறுப்பினர்களும் அண்மைய நகராட்சிகளும் இந்திய ஒன்றியம்|இந்தியாவுடன் எந்தவொரு வாக்கெடுப்புமின்றி இணைய முடிவு செய்ததை அறிவித்தனர். காரைக்காலின் அனைத்து கம்யூன்களும் உடனேயே இதைப் பின்பற்றின. இந்த முடிவை பிரதிநிதித்துவ அவை உறுதிபடுத்த வேண்டியிருந்தது.
பிரெஞ்சு இந்திய சோசலிசக் கட்சி இதற்கான முன்வரைவை தயாரிக்கையில் பிரெஞ்சு ஆளுனர் இதனைத் தவிர்க்க பேரவைக் கூட்டத்தை தள்ளி வைத்தார். இதனால் கோபமுற்ற சோசலிசத் தோழர்கள் ஒவ்வொரு கம்யூனாகக் கைபற்றி இறுதியில் புதுசேரியை பிடிக்கத் திட்டமிட்டனர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியும் நேரடி செயலுக்கு ஆதரவளித்தது. இத்திட்டத்தினபடி சோசலிச கட்சியினர் 1954ஆம் ஆண்டு மார்சு மாத்த்தின் கடைசிநாள் நெத்தலப்பாக்கம் காவல்நிலையத்தின் மீது இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டனர். நெத்திலப்பாக்கம் சுற்றியப் பகுதிக்கு ஓர் இடைக்கால அரசு எட்வர்டு குபேர் தலைமையில் அமைந்தது. இதன் எல்லைகளைச் சுற்றி இந்திய ஆயுதப் படை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் இந்திய அரசிற்கும் பிரெஞ்சு அரசிற்கும் புதுதில்லியிலும் பாரிசிலும் பேர உரையாடல் நடந்து கொண்டிருந்தது. ந்தியப் பேராளர் கேவல் சிங் கண்டமங்கலத்தில் அனைத்து மாநிலத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். நெத்திலப்பாக்கத்தில் உள்ள இடைக்கால அரசை பிரெஞ்சு அரசினர் இளக்காரமாகப் பேசுவதாகவும் உண்மையான விடுதலை வேண்டுமானால் நான்கு குடியேற்றங்களில் ஒன்றையாவது ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறினார். இந்தச் சந்திப்பிலிருந்து தடாலாவை வீட்டில் இறக்கிவிட்டபோது கேவல் சிங் அவரிடம் தமது திட்டத்தைப் பற்றிய கருத்தைக் கேட்டார். இதனையடுத்து தடாலா ஏனாமை கைப்பற்ற திட்டமிட்டார்.
ஏப்ரல் 13,1 954 அன்று ஏனாம் வந்தடைந்த தடாலா அங்கிருந்த மக்களிடையே விடுதலை வேட்கை இல்லாதிருந்ததைக் கண்டார். ஏப்ரல் 14, 1954இல் அருகாமையில் இந்தியப் பகுதியில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா சென்று அங்கிருந்த மாவட்டத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற முயன்றார். எந்தவொரு ஊக்கமும் கிட்டாது திரும்புகையில் பரம்பேட்டா சிற்றூரில் பிரெஞ்சுக் காவலர்கள் அவரை வழிமறித்தனர். தன்னிடமிருந்த துப்பாக்கியால் காற்றில் சுட்டு தப்பி ஓடினார். இந்தியப் பகுதியில் தஞ்சமடைந்தார்.
காக்கிநாடாவில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரசுக் கொடிகளை வாங்கி வீட்டுக்கு வீடு சென்று பரப்புரை ஆற்றினார். தனது புதிய தேசியவாத இளைஞர்களுடன் வாடகை சரக்குந்துகளில் காங்கிரசுக் கொடிகளைக் கையிலேந்தி ஏனாமில் மேடைப்பேச்சுகளை நடத்தினார். ஏனாமின் விடுதலைக்கு ஒத்துழைப்புத் தருமாறு மக்களை வேண்டினார்.
இதனால் பிரெஞ்சுக் காவல்படையினர் இந்திய சிற்றூர்ப் பகுதிகளில் தேடுதல் நடத்தினர். இது வரம்பு மீறிய செயல் என்று தடாலா கேவல் சிங்கிடம் முறையிட்டார். ஏனாம் நகரைச் சுற்றிலும் ஒலிபெருக்கிகளை அமைத்து நாட்டுப்பற்றுப் பாடல்களை ஒலிபரப்பினார். இடையிடையே ஏன் இந்தியாவுடன் ஏனாம் இணைய வேண்டும் என்று பரப்புரை செய்தார். ஏனாமிற்குள் சமதம் கிருச்னாயா போன்ற பிரெஞ்சு ஆதரவுத் தலைவர்கள் எதிர் பேரணிகளை நடத்தினர்.
சூன் துவக்கத்தில் புதுச்சேரி நிர்வாகத்தின் தலைமைச் செயலர் ஏனாமில் தங்கியுள்ள இரு ஐரோப்பிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளதாகத் தடாலாவிடம் தெரிவித்தார். இவர்களை இந்தியப் பகுதியில் தேசியவாதிகளிடமிருந்து காப்பாற்றி அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவர்களை பாதுகாப்புடன் காக்கிநாடா தொடர்வண்டி நிலையம் வரை உடனிருந்து அனுப்பி வைத்தார்.
ஆட்சிப் பறிப்பிற்கு ஆயத்தங்கள்
தொகுஅனைத்து வெள்ளை பிரெஞ்சுத் தலைவர்களும் கூட்ட வன்முறைக்குப் பயப்படுவதை தெரிந்துகொண்ட இணைப்புவாதிகள் இதுதான் தக்கத் தருணம் என உணர்ந்தனர். காக்கிநாடாவிலுள்ள அலுவலர்கள், ஏனாமின் மேயர் மடிம்செட்டி சத்தியநாராயணா, யெர்ர ஜகன்னாத ராவ், காமிச்செட்டி ஸ்ரீ பரசுராம வரப்பிரசாத ராவ் நாயுடு போன்ற தலைவர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் ஏனாம் நிர்வாகத்தைக் கைப்பற்ற ஏற்பாடுகள் செய்யலானார். இதனிடையே மடிம்செட்டி ஏனாமை விட்டு ஒடிவிட இணைப்பு போராளிகளின் கோபத்திற்கு ஆளாகி அவரது வீடு சூறையாடப்பட்டது. 78 அகவையுடைய மருத்துவர் சமதம் கிருச்னாயா இடைக்கால மேயராகப் பதவி ஏற்றார். இவர் பிரெஞ்சு அரசுக்கு ஆதரவாகவும் இணைப்பு வாதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டார். கவிஞரும் வரலாற்றாளரும் ஆயுர்வேத மருத்துவருமான சமதம் தெலுங்கிலும் பிரெஞ்சிலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஏனாமில் பிரெஞ்சு அரசுக்கு வலிய ஆதரவு இருந்தமையால் இந்திய படைத்துறை தலையீடு தவிர்க்க முடியாததாக ஆயிற்று.
வலிய ஆட்சி மாற்றம்
தொகுசூன் 13, 1954 ஞாயிறு வைகறையில் தடாலா சில ஆயிரம் போராளிகளுடன் காக்கிநாடாவிலிருந்து ஏனாம் நிர்வாக அலுவலர் மாளிகை நோக்கி புற்றப்பட்டார். மாளிகையை கைப்பற்றி இந்திய தேசியக் கொடியை பறக்கவிடுவதே அவர் நோக்கமாக இருந்தது. தனது படைக்கு 50 கசம் முன்னால் சென்றவாறே கையொலிபெருக்கியில் பிரெஞ்சுக் காவல்துறையினரையும் பிற அலுவலர்களையும் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தவாறிருந்தார். பிரெஞ்சுக் காவல்படையினர் எதிரடியாகக் கைக்குண்டுகளை வீசினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். போராளிகள் மண்யம் சமீன்தார் சத்திரத்தின் பின்னர் பதுங்கியிருந்தவாறு காவல்படையினரை சுடத் துவங்கினர். காவல் நிலையத்திற்கு வெளியே திறந்தவெளியில் இருந்த காவல்படையினரில் நான்கு பேருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டது. பிற காவலர்கள் இதனால் காவல்நிலையத்தினுள் ஓடிச்சென்று பூட்டிக்கொண்டனர். தடாலா அவர்களை முற்றுகையிட்டு ஆயுதங்களை கைப்பற்றினார். போராளிகள் ஏனாமில் அனைத்து இடங்களுக்கும் சென்று பிரெஞ்சு ஆதரவாளர்களை கைது செய்து இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தினர். தமது குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆட்சிப் பறிப்பு அனைத்திந்திய வானொலி மற்றும் நாளிதழ்களில் வெளியானது.
நிர்வாக அலுவலர் மாளிகைமீது இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இதன்பிறகு தடாலாவின் தலைமையில் ஏனாமின் புரட்சி இடைக்கால அரசு நிறுவப்பட்டது. Yanaon A Libéré (ஏனாம் விடுதலைப் பெற்றது) என்பதே இதன் முதல் தீர்மானமாக அமைந்தது.
சமதமின் கொலை
தொகுஅன்று நடந்த மற்றுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக சமதம் கிருச்னாயாவின் கொலை அமைந்தது. அன்று பிரெஞ்சுப் படைகளுக்கு ஆதரவாக தனித்துப் போராடினார். அவர் பைடிகொண்டலா மாளிகையிலிருந்து தப்பிக்குமுன் அவரை முன்னாள் மேயர் மடிம்செட்டி சத்தியானந்தம் தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சாகும் தருவாயிலும் சமதம் பிரான்சு வாழ்க (Vive la France) என்றவாறே உயிரிழந்தார். தமது வீடு சூறையாடப்பட்டதற்கு சமதமே காரணம் என்று சத்தியானந்தம் எண்ணினார்.
சமதமின் மறைவு ஏனாமில் பெரும்பாலோருக்கு அதிர்ச்சியும் வருத்தமும் கொடுத்தது. அன்று அவர் பிழைத்திருந்தால் இந்த வலிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்காது. எனவே பிரெஞ்சு அரசு இதனை இந்தியா அரசியல் நோக்குடன் நிறைவேற்றிய கொலையாக கருதியது.
பின்விளைவுகள்
தொகுஇந்நிகழ்வால் பிரெஞ்சு அரசு கடுங்கோபம் கொண்டது. ஏனாமிற்குத் தன் கடற்படையை அனுப்பி மீண்டும் தனதாட்சிய நிறுவப் போவதாக வதந்திகள் கிளம்பின. இந்த ஆட்சிமாற்றத்திற்கு மூன்று நாள் முன்னால்தான் ஏனாமின் கடைசி நிர்வாக அலுவலர் ஜோர்ஜ் சாலா புதுச்சேரியின் ஆளுநர் ஆந்தரே மெனார்டால் திரும்ப அழைக்கப்பட்டிருந்தார்.
தடாலா ஏனாமின் பொறுப்பு ஆணையராக 14 நாட்களுக்கு நியமிக்கப்பட்டார். 1954 சூன் இறுதியில் ஏனாம் வந்த கேவல் சிங் தடாலாவை புதுச்சேரிக்குத் திரும்ப அழைத்தார். சூலை 3 அன்று, கேவல் சிங்கின் அறிவுரைக்கிணங்க, ஏனாமை விட்டு புறப்பட்டார்.
நவம்பர் 1, 1954 அன்று ஏனாம் நிகழ்நிலைப்படி இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு சனவரி 16, 1955இல் புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். கோரிமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் சவகர்லால் நேரு முன்னிலையில் எட்வர்ட் குபேர், எஸ்.பெருமாள், தடாலா, பக்கிரிசாமி பிள்ளை ஆகியோர் புதுச்சேரி,காரைக்கால், ஏனாம், மாகி சார்பாக அறிக்கைகள் வாசித்தளித்தனர்.
இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் மே 28, 1956இல் ஏற்பட்ட பிரிவு உடன்படிக்கையில் சூன் 13, 1954 நிகழ்வுகளுக்குத் தான் பொறுப்பில்லை என பிரான்சு அறிவித்தது.
ஆந்திரப் பிரதேச அரசில் உயர் அதிகாரியாகப் பதவியேற்ற தடாலா ஏனாம் புதியதாக உருவான புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் அங்கமாக இணைவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக சூன் 29, 1963இல் பணி ஓய்வு பெற்றார்.
உசாத்துணை
தொகு- My Struggle for freedom of French Provinces in India, ஸ்ரீ தடாலா ராஃபேல் ரமணய்யா எழுதுயுள்ள தன்வரலாற்று நூல்
வெளி இணைப்புகள்
தொகு- Indian Ministry for External Affaires - 1956 Treaty of Cession
- THE FRENCH AND PORTUGUESE SETTLEMENTS IN INDIA
- Entrevue avec Dr Nallam, Août 2004 பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- Interview with Shanmuganandan Madanacalliany (பிரெஞ்சு)
- Interview with Dr. Nallam (பிரெஞ்சு)
- Future of French India, by Russel H. Fifield (Associate Professor of Political Science at University of Michigan[தொடர்பிழந்த இணைப்பு]