ஏழில் நெடுவரை
ஏழில் நெடுவரையானது ஏழில் குன்றம் என்னும் பெயராலும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுகிறது. இது இக்காலத்தில் கேரளமாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் இக்கால வழக்குப்பெயர் எழில்மலை.[1]
ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனி. இக்காலத்தில் இப்பெயரால் வழங்கப்படும் இந்த ஊர் சங்க காலத்தில் பொதினி என வழங்கப்பட்டது. இது முருகன் தலைபோல் ஆறு குன்றுமுகடுகளை உடையது. ஆறு குன்றுகளைக் கொண்டது.[2] பொதினியின் ஆறு முகடுபோல் ஏழு-முகடுகளைப் பெற்றிருக்கும் மலை ஏழில் குன்றம். ஏழில்குன்றம் என்பது எழில்குன்றம் எனத் திரிந்து, இப்போது ‘எலிமலை’ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இது கொண்கான நாட்டின் ஒரு பகுதி. எருமைமாடுகள் மிகுதி. [3] இங்கு யானைகள் மிகுதி.[4]
பாழிச்சிலம்பு என்னும் மலைக்காடுகளும் இதன் பகுதியாகும். இந்த மலைப்பகுதி நாட்டைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் யானைகளைப் பரிசாக நல்கும் வள்ளண்மைக் குணம் உள்ளவன். அவனது தலைநகர் பாரம்.[5]
இங்குக் கொற்றவை கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கானமர் செல்வியின் புகழைச் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் சிறப்பித்துப் பாடியிருந்தார். அந்தப் பாடலோ, பாடிய புலவரின் பெயரோ நமக்குக் கிடைக்கவில்லை.[6] இந்தப் பேய்த்தெய்வத்துக்குத்தான் மிஞிலி என்பவன் அதிகன் என்பவனைப் பலிகொடுத்தான்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
- ↑ அறுகோட்டு யானைப் பொதினி – அகநானூறு 1
- ↑ காரான் அகற்றிய தண்ணடை ஒண்டொடி மகளிர் இழைகூட்டுண்ணும் பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழில்குன்றம் - நற்றிணை 391
- ↑ பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு ஏழில் குன்றத்துக் கவாஅன் – (யானை வேங்கைப் பூக் கவளம் மாந்தும்) – அகநானூறு 349
- ↑ களிறு வீசி வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் (மயில் போல் அவள் தோள்) - அகநானூறு 152
- ↑ ஓங்குபுகழ்க் கானமர் செல்வி அருளலின் வெண்கால் பல்படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்கு நுண் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழில் குன்றத்து – (வேங்கைச் செம்பூம் பிணையல் மகளிர் அணிந்து உவப்பர்) - அகநானூறு 345