ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள்
ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சிகள் (United Nations trust territories) என்பது உலக நாடுகள் சங்கம் 1946 ஏப்ரலில் கலைக்கப்பட்ட போது, அவ்வமைப்பின் கடைசி உரிமைக்கட்டளைப் பிராந்தியங்களாக இருந்த நாடுகளின் நிருவாக அமைப்பாகும். இப்பொறுப்பாட்சியின் கீழிருந்த அனைத்துப் பிராந்தியங்களும் ஐநா பொறுப்பாட்சி மன்றத்தினூடாக நிருவகிக்கப்பட்டு வந்தன. இவற்றில் தென்-மேற்கு ஆப்பிரிக்கா மட்டும் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளையின் நிருவாகத்திலேயே தொடர்ந்திருந்தது. ஐநா பொறுப்பாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்கள் விடுதலைக்கு, மற்றும் பெரும்பான்மையினரின் ஆட்சிக்குத் தயாராக வேண்டும் என்பது அவ்வமைப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும். இதனால் தென்-மேற்கு ஆப்பிரிக்காவை ஐநா பொறுப்பாட்சியின் கீழ் நிருவகிக்க தென்னாப்பிரிக்கா ஆட்சேபித்து இருந்தது. எனினும் தென்-மேற்கு ஆப்பிரிக்கா 1990 ஆம் ஆண்டில் நமீபியா என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
ஐநா பொறுப்பாட்சிப் பிராந்தியங்கள்
தொகுமுன்னாள் செருமன் காப்பு நாடுகள்
தொகுஇவை அனைத்தும் முன்னர் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை.
- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: 1960 இல் கமரூன் குடியரசாக விடுதலை அடைந்தது.
- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: இது பிரெஞ்சு கமரூனை விடச் சிறியது, வடக்கு கமரூன்கள், தெற்கு கமரூன்கள் என இரு பகுதிகளாக நிருவகிக்கப்பட்டது. பொதுக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 1961 மே மாதத்தில் வடக்குப் பகுதி நைஜீரியாவின் பகுதியாகவும், தெற்குப் பகுதி 1961 அக்டோபரில் கமரூன் குடியரசுடனும் இணைக்கப்பட்டன.
- நியூ கினி பொறுப்பாட்சி (ஆஸ்திரேலியா): முதல் உலகப் போருக்கு முன்னர் இத்தீவின் வட-கிழக்குப் பகுதி உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளையாகவும், தென்கிழக்குப் பகுதி ஆத்திரேலியாவுடையதாகவும் இருந்தன. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நிருவாக வசதிக்காக இரு பகுதிகளும் இணைக்கப்பட்டன, ஆனாலும் பப்புவா மற்றும் நியூகினி பகுதிகளின் சட்டபூர்வ வேறுபாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1975 இல், இரு பிராந்தியங்களும் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டு பப்புவா நியூ கினி என்ற பெயரில் விடுதலை அடைந்தது. முன்னர் டச்சுக்களின் ஆட்சியிலும் தற்போது இந்தோனேசியாவிலும் உள்ள நியூ கினியின் மேற்குப் பகுதி, நியூகினி பொறுப்பாட்சியில் எப்போதும் இருக்கவில்லை.
- ருவாண்டா-உருண்டி பொறுப்பாட்சி (பெல்ஜியம்): இப்பகுதிகள் 1962 ஆம் ஆண்டில் ருவாண்டா எனவும் புருண்டி எனவும் இரு நாடுகளாக விடுதலை அடைந்தன.
- தங்கனீக்கா பொறுப்பாட்சி (ஐக்கிய இராச்சியம்): 1961 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் பிரித்தானிய (ஆரம்பத்தில் சிறிது காலம் செருமனியின் கீழ் இருந்தது) காப்பு நாடான சன்சிபாருடன் இணைந்து 1964 ஆம் ஆண்டில் தன்சானியா என்ற தனிநாடாக உருவானது.
- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரெஞ்சு தோகோலாந்து): 1960 ஆம் ஆண்டில் டோகோ என்ற நாடாக விடுதலை அடைந்தது.
- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரித்தானிய தோகோலாந்து): இது பிரெஞ்சு தோகோலாந்தை விட சிறியது, இப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியேற்ற நாடான கோல்ட் கோஸ்ட் உடன் இணைக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் கானா என்ற நாடாக விடுதலை அடைந்தது.
- மேற்கு சமோவா பொறுப்பாட்சி (நியூசிலாந்து): 1962 ஆம் ஆண்டில் இது விடுதலை அடைந்தது, தற்போது சமோவா என அழைக்கப்படுகிறது.
முன்னாள் செருமன் அல்லது சப்பானியக் குடியேற்றங்கள்
தொகுகீழ்வரும் பிராந்தியங்களும் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை:
- நவூரு பொறுப்பாட்சி (ஆத்திரேலியா (நிருவாகம்), நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம்): 1968 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.
- பசிபிக் தீவுகளின் பொறுப்பாட்சி (ஐக்கிய அமெரிக்கா): மார்சல் தீவுகள் (1979), மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (1979), வடக்கு மரியானா தீவுகள் (1978), பலாவு (1981) என நான்கு நாடுகளாகப் பிரிந்தன. இவற்றில் வடக்கு மரியானா தீவுகளைத் தவிர, ஏனைய மூன்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு மாநிலங்களாகும். வடக்கு மரியானா தீவுகள் அமெரிக்கப் பொதுநலவாய நாடாகும்.
முன்னாள் இத்தாலியக் குடியேற்றங்கள்
தொகு- இத்தாலி நிருவாகத்தின் கீழ் சோமாலிலாந்து பொறுப்பாட்சி: இத்தாலியின் முன்னாள் குடியேற்ற நாடான சோமாலிலாந்து 1950 ஆம் ஆண்டில் இத்தாலி இதன் ஐநா பொறுப்பாட்சி நிருவாகியாக அறிவிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து]]டன் இணைந்து விடுதலை பெற்றது.
முன்மொழியப்பட்ட பொறுப்பாட்சிகள்
தொகுஇரண்டாம் உலகப்போர்க்காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, பிராங்க்ளின் ரூசவெல்ட் கொரியாவை ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறுப்பில் நிருவகிக்கப்பட வேண்டும் என பிராங்க்ளின் ரூசவெல்ட் பரிந்துரைத்திருந்தார். 1945 ஏப்ரல் 12 இல் ரூசவெல்ட் இறந்ததை அடுத்து இப்பரிந்துரைப்பு கைவிடப்பட்டது. ஆனாலும், 1945 டிசம்பரில் மாஸ்கோவில் இடம்பெற்ற மாநாட்டில் இக்கருத்து எதிரொலித்ததை அடுத்து, கொரியாவில் இதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[1]
உசாத்துணை
தொகு- ↑ Gang Man-gil (1994), 한국사 17: 분단구조의 정착 1, pp. 133–137. 한길사, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-356-0086-1
- The United Nations and Decolonization: Trust Territories that Have Achieved Self-Determination
- WorldStatesmen- links to each present nation