ஐசாக் அசிமோவ்

ஐசாக் அசிமோவ் (Isaak Asimov, உருசியம்: Айзек Азимов, சனவரி 2, 1920 – ஏப்ரல் 6, 1992) ஒரு அமெரிக்க அறிபுனை எழுத்தாளரும், பாஸ்டன் பலகலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஐசாக் அசிமோவ்
1965ல் அசிமோவ்
1965ல் அசிமோவ்
பிறப்புஐசாக் யுடோவிச் ஓசிமோவ்
அக்டோபர் 4, 1919 இற்கும் சனவரி 2, 1920 இற்கும் இடையில்[1]
பெட்ரோவிச்சி, உருசியா
இறப்புஏப்ரல் 6, 1992(1992-04-06) (அகவை 72)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
தொழில்எழுத்தாளர், உயிர் வேதியியல் பேராசிரியர்
தேசியம்உருசியர் / அமெரிக்கர்
இலக்கிய இயக்கம்அறிபுனையின் பொற்காலம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஃபவுண்டேஷன் வரிசை, ரோபோ வரிசை, தி பைசென்டின்னல் மேன், ஐ,ரோபோ
துணைவர்கெர்ட்ரூட் ப்லுகர்மேன், 1942–1973; (விவாகரத்தாயிற்று; 2 குழந்தைகள்), ஜேனட் ஒபால் ஜெப்சன் (1973–1992; அவரின் மறைவு வரை)

அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய ஃபவுண்டேஷன் (Foundation series) வரிசைப் புதினங்களும், ரோபோ (Robot series) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் செம்மையான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தனது வாழ்நாளில் 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 90,000 கடிதங்களை எழுதிய அசிமோவ் தூவி தசம முறையிலுள்ள (நூலகப் பகுப்பு முறை) பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதாத ஒரே துறை - மெய்யியல் மற்றும் உளவியல். அசிமோவ் வாழ்ந்த காலத்தில் அறிபுனை இலக்கியத்தின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (மற்ற இருவர் ஆர்தர் சி. கிளார்க்கும் ராபர்ட் ஹெய்ன்லீனும்). புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், அபுனைவு கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும் அசிமோவ் எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சரித்திரம்

தொகு

அசிமோவ் அக்டோபர் 4, 1919 மற்றும் ஜனவரி 2, 1920க்கு இடைப்பட்ட காலத்தில் தற்போதைய பெலாரஸின் எல்லையிலுள்ள சோவியத் ரஷிய ஃபெடரேட்டிவ் சோசலிச குடியரசில் அன்னா ராசேல் (பெர்மன்) அசிமோவுக்கும், ஜுடாஹ் அசிமோவுக்கும் பிறந்தார். அசிமோவின் உண்மையான பிறந்த தினம் தெரியவில்லை; எனினும் அசிமோவே தன் பிறந்தநாளை ஜனவரி 2 ஆம் திகதி கொண்டாடினார். அசிமோவுடன் பிறந்தவர்கள் இருவர்; சகோதரி, மார்ஷியா (பிறப்பு: மான்யா, ஜூன் 17, 1922 - ஏப்ரல் 2, 2011), சகோதரன், ஸ்டான்லி (ஜூலை 25, 1929 - ஆகஸ்ட் 16, 1995), ஸ்டான்லி நியூயார்க் நியூஸ் டே எனும் தினப்பத்திரிக்கையின் துணை அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசிமோவுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவர்கள் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்தது, அவர் யிட்டிஷ் மொழியும், ஆங்கில மொழியும் பேசுவார் ஆனால் ரஷிய மொழியைக் கற்கவில்லை. தன் பெற்றோர்கள், மிட்டாய் கடை ஒன்றினை நடத்தி வந்தனர் அவற்றில் தன் குடும்ப உறுப்பினர்களே வேலை செய்து வந்தனர். 1928ல் தனக்கு 8 வயது ஆன போது அவர் இயற்கையாகவே அமெரிக்கக் குடிமகன் ஆனார்.

கல்வியும், பணியும்

தொகு

அசிமோவ் சிறு வயதிலேயே அறிவியல் புனை கதைகளைப் படிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது தந்தையோ அவற்றைப் படிப்பது வீண் வேலை என்பார். அதற்கு அசிமோவ் அது அறிவியல் எனும் தலைப்பைக் கொண்டுள்ளது எனவே அது கல்வி சார்ந்தது என கூறுவார். அசிமோவ், தன் 11 வயதின் போது சொந்தமாகக் கதை எழுதினார், 19வயதின் போது அவரது அறிவியல் புனைகதைகள் நாளிதழ்களில் வெளியாகி அவருக்கு விசிறிகள் உருவானதை உணர்ந்தார். அசிமோவ் நியுயார்க் சிட்டி பப்லிக் பள்ளியிலும், ப்ரூக்ளின் ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் படித்தார். 15 வயதில் சேத் லோ ஜூனியர் கல்லூரியில் விலங்கியல் சேர்ந்து பின்னர் பூனைகளைச் சோதனைக்காக வெட்டுவதை ஏற்றுகொள்ள முடியாததால் இரண்டாம் பருவத்தின் போது வேதியலில் சேர்ந்தார். 1938ல் சேத் லோ ஜூனியர் கல்லூரி மூடப்பட்ட பின் தற்போதைய கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1939ல் வேதியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் அவர் அதே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1938ல் வேதியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, 1948ல் உயிர்வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இடையில் 3 வருடம் பிலடெல்பியா கடற்படை விமான நிலையத்தில் வேலை செய்து வந்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின் பாஸ்டன் மருத்துவியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1958ல் இருந்து முழு நேர எழுத்தாளர் ஆனார், அவ்வருமானம் தன் ஆசிரியர் வருமானத்தை விட அதிகரித்தது. பின்னர் 1979ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் அவர் எழுத்தை கவுரவப் படுத்தும் விதமாக உயிர்வேதியலில் அவரைப் பேராசிரியராகப் பணியமர்த்தி அவரைப் பெருமைப்படுத்தியது. அசிமோவின் 1956லிருந்தான தனிப்பட்ட ஆவணங்கள் பல்கலைக் கழகத்தின் முகர் நினைவு நூலகத்தில் ஆவணப்படுத்த படப்பட்டு வந்தது. இந்த ஆவணங்கள் 464 பெட்டிகள் அல்லது 71 மீட்டர் அலமாரி இடத்தை நிரப்பக் கூடியதாக உள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அசிமோவ், கெர்ட்ரூட் ப்லுகர்மேன் என்பவரை ஜூலை 26, 1942ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு டேவிட் (பிறப்பு: 1951), ராபின் ஜோன் (பிறப்பு:1955) என இரு குழந்தைகள் பிறந்தனர். 1970ல் இவ்விருவரும் பிரிந்து, அசிமோவ் மான்ஹாட்டனுக்கு சென்று வாழ தொடங்கினார். 1973ல் கெர்ட்ரூடிடமிருந்து விவகரத்து பெற்ற இரு வாரங்கள் கழித்து அவர் ஜேனட் ஜெப்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அசிமோவ் மிகவும் சிறிய அடக்கமான இடங்களையே விரும்பினார். அதே சமயம் விமானங்களில் பறப்பது அவருக்கு அதிக பயத்தை தந்தது. இந்த பயத்தின் தாக்கம் தன் கதைகளின் புனை கதாபாத்திரத்தில் குறிப்பாக வெண்டல் அர்த் மர்மக் கதைகளிலும் பிற ரோபோ கதைகளிலும் காணலாம். அசிமோவ் ஒரு சிறந்த பேச்சாளர், அறிவியல் புனைக்கதை மாநாட்டின் முக்கிய அங்கமாகவே அவர் கருதப்பட்டார். அவர் மிகவும் நட்பானவர், எப்போதும் அணுகக்கூடியவர். பொறுமையாக, ரசிகர்களின் ஆயிரக்கணக்கிலான கடிதங்களுக்கு விடையளிப்பார். அவர் கட்டுக்கோப்பான, நடுத்தர உயரம் உடையவர். ஆனால் உடல் திறமை மிகவும் மோசமாயிருந்தது. அவருக்கு நீச்சல் அடிக்கவோ, மிதி-வண்டி ஓட்டவோ தெரியாது; ஆனால் பாஸ்டனுக்கு பெயர்ந்த பின் சிற்றுந்து ஓட்ட கற்றுக் கொண்டார். 1984ல் அமெரிக்க மனிதநேய சங்கம் அவரை அந்த வருடத்தின் மனிதநேயமிக்க மனிதராக தேர்வு செய்தது. பின் 1985ல் இருந்து 1992 வரை அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கவுரவ முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின் அப்பதவி அவர் நண்பர் கர்ட் வான்னகட்டுக்கு வழங்கப்பட்டது. ஐசாக் அசிமோவ்; கமிட்டி ஃபார் தி சயின்டிஃபிக் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் க்லெயிம்ஸ் ஆஃப் தி பாராநார்மல், இப்போது கமிட்டி ஃபார் ஸ்கெப்டிகல் இன்கௌயரி என அழைக்கப்படும் குழுவை ஆரம்பித்ததில் ஒருவர் ஆவார்.

நோயும் மரணமும்

தொகு

அசிமோவுக்கு 1977ல் மாரடைப்பு ஏற்பட்டு, டிசம்பர் 1983ல் மூன்று மாற்று வழி இணைப்பறுவை (பை பாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. ஏப்ரல் 6, 1992ல் அசிமோவ் இறந்த போது தன் சகோதரர் ஸ்டான்லி அசிமோவின் மரணத்திற்கு இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததே காரணம் என கூறினார். பத்து வருடங்கள் கழித்து ஜேனட் ஜெப்சன் எழுதிய அசிமோவின் சுயசரிதை எனும் புத்தகத்தில் ஐசாக் அசிமோவின் இதயம் மற்றும் சிறுநீரகம் செயலிழக்கக் காரணம், பை பாஸ் அறுவை சிகிச்சையின் போது தான் பெற்ற எச்.ஐ.வி எனும் கிருமி கலந்த இரத்தமே ஆகும் என எழுதி இருந்தார். அவர் அந்த புத்தகத்தின் இறுதியுரையில் அசிமோவின் டாக்டர்கள் இதை முன்னரே வெளியிடாததற்குக் காரணம் தன் குடும்ப உறவினர்களுக்கும் இத்தகைய நோய் தாக்கி இருக்கக் கூடும் எனும் தவறான அபிப்ராயம் மக்களுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் எனவும் எழுதி இருந்தார்.

இவரது நினைவாக ஹோண்டா நிறுவனம் உருவக்கிய இயந்திர மனிதனுக்கு அசிமோ என்று பெயர் சூட்டியது.[2]

குறிப்புகள்

தொகு
  1. Asimov, Isaac (1980). In Memory Yet Green. The date of my birth, as I celebrate it, was January 2, 1920. It could not have been later than that. It might, however, have been earlier. Allowing for the uncertainties of the times, of the lack of records, of the Jewish and யூலியன் நாட்காட்டிs, it might have been as early as October 4, 1919. There is, however, no way of finding out. My parents were always uncertain and it really doesn't matter. I celebrate January 2, 1920, so let it be.
  2. Kupperberg, Paul (2007). Careers in robotics. New York: Rosen Pub. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1404209565.

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசாக்_அசிமோவ்&oldid=3607920" இலிருந்து மீள்விக்கப்பட்டது