ஆர்தர் சி. கிளார்க்

சர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க் (Arthur Charles Clarke, டிசம்பர் 16, 1917மார்ச் 19, 2008[2]) பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும், அறிவியல் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன்படுத்தியவர். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதனின் தலைவிதி பரந்துள்ளது என்ற தொலைநோக்கக் கருத்தை வலுவாக முன்னிறுத்தியவர். 1968 இல் இவர் எழுதிய 'எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற புதினமும் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட '2001: எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற திரைப்படமும் இவரது இந்தத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகளாக உள்ளன. கிளார்க் இருபதாம் நூற்றாண்டு அறிபுனை எழுத்துலகின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார் மற்ற இருவர் ஐசாக் அசிமோவ் மற்றும் ராபர்ட் ஏ. ஹெய்ன்லீன் ஆகியோராவர்.

சர் ஆர்தர் சி. கிளார்க்
ஆர்தர் சி. கிளார்க் தனது கொழும்பு வீட்டில் மார்ச் 28, 2005
ஆர்தர் சி. கிளார்க் தனது கொழும்பு வீட்டில் மார்ச் 28, 2005
பிறப்பு(1917-12-16)16 திசம்பர் 1917
சொமர்செட், ஐக்கிய இராச்சியம்
இறப்பு19 மார்ச்சு 2008(2008-03-19) (அகவை 90)
கொழும்பு, இலங்கை
புனைபெயர்சார்ல்ஸ் வில்லிஸ்,[1]
ஈ.ஜீ.ஓ'பிறையன்[1]
தொழில்எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர்
தேசியம்பிரித்தானியர் மற்றும்
இலங்கையர்
வகைஅறிபுனை
கருப்பொருள்அறிவியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்2001: ஸ்பேஸ் ஒடிசி
ராண்டவூ வித் ராமா
Childhood's End
The Fountains of Paradise
துணைவர்மரிலின் மேஃபீல்ட் (1953-1964)
இணையதளம்
http://www.clarkefoundation.org/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கிளார்க் இங்கிலாந்தில் சொமர்செட் என்ற இடத்தில் டிசம்பர் 16, 1917 இல் பிறந்தார்[2]. அவரது தந்தை ஒரு உழவர். தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனராகப் பணியாற்றினார். நான்கு குழந்தைகளில் மூத்தவரான கிளார்க் அருகில் உள்ள டாண்டன் (Taunton) நகர உயர்நிலைப்பள்ளியில் 'புலமைப்பரிசில்' (கல்வித்திறமைப் பரிசில்) பெற்ற மாணவனாகக் கல்வி பயின்றார். தான் பிள்ளைப் பருவத்தில் சோமர்செட் கடற்கரையோரம் நடக்கையில் தனது அறிவியல் கற்பனைகளை விழித்தெழச் செய்த பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். அவற்றில் ஒரு சில, தன் தந்தை ஒரு முறை ஒரு டைனோசர் படமுள்ள ஒரு சீட்டுக்கட்டு கொடுத்தது; கட்டுமானம் செய்யும் விளையாட்டுப் பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றது போன்றன. முதல் உலகப்போரில் படுகாயமடைந்திருந்த தன் தந்தையை தன் 13-வயதில் கிளார்க் இழந்தார். இதன் பின் டான்டூனில் உள்ள ஷாய்ஷ் இலக்கணப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்ட ஆர்தர் பழைய அமெரிக்க அறிவியல் புதின நூல்களைப் படிப்பது வழக்கம். ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டவர் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க அவரது குடும்ப வருவாய் போதாமையினால், தனது 19 ஆவது வயதிலேயே லண்டன் அரசுப் பணியில் (கல்வித்திணக்களத்தில்) சேர்ந்து பணியாற்றினார்.

பணிகள்

தொகு

இவர் தனது 17-ஆம் அகவையிலேயே பிரித்தானியாவில் கோள்களியல் கழகத்தில் சேர்ந்தார். பின்னாளில் இதன் பொருளாளராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அரசுப் பணியில் இவரது கணிதக் கூர்மை கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் பணிக்கு உயர்வித்தது. ஆனால் 1941-ல் இரண்டாம் உலகப் போரின்போது அப்பணியிலிருந்து விலகி ராயல் வான்படையில் இணைந்தார். அங்கு இலத்திரனியலில் பயிற்சி பெற்று வானொலிப் பள்ளியில் செய்முறைப் பயிற்சியாளரானார். இறுதியில் தென்மேற்கு இங்கிலாந்தில் வட காரன்வாலில் உள்ள டேலிட்ஸ்டோமூர் என்ற இடத்தில் அமெரிக்காவின் தரைக் கட்டுப்பாட்டு ராடார் அமைப்புக் குழுவில் பணியாற்றினார். இவர் பணியாற்றிய இந்த அமெரிக்கக் குழுவின் தலைவர், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற லூயிஸ் டபிள்யூ ஆல்வாரெஸ் ஆவார். இந்தக் காலகட்டமே கிளார்க்கைச் சாதாரண புதினங்கள் எழுதுவதிலிருந்து அறிவியல் பக்கம் திருப்பியதாக 1963-ல் எழுதிய "பறத்தல் வழி" (Glide path) என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிவின் பின்னர் ராயல் வான்படையிலிருந்து விலகி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் மற்றும் கணிதவியலில் சேர்ந்தார். அதன் பின் பட்ட மேற்படிப்பாக வானவியலில் சேர்ந்தார். இப்படிப்பு அவருக்குச் சோர்வைத் தந்ததால் அதை விடுத்து "சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்" (Science Abstracts) (1949-50) என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பணி அவருக்குச் சிந்திக்கவும் எழுதவும் நேரத்தைக் கொடுத்தது. 1951-இலிருந்து கிளார்க் முழுநேர எழுத்தாளரானார்.

நூலாக்கம்

தொகு
  • 1945-ல் "உலகாய மற்றும் கோள்களுக்கிடையேயான தகவல் தொடர்பிற்கு புவிநிலை செயற்கைக் கோள் பாதைகள்" (Geostationary Satellite Orbit) குறித்தான தொழில்நுட்பக் குறிப்புகள் கொண்ட தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
  • 1937 தொடக்கம் 1945 வரையான காலப்பகுதியில் சில புதினங்களைக் கிளார்க் எழுதியிருந்தாலும் 1946 ஆம் ஆண்டில் அவர் எழுதிய Astounding Science Fiction என்ற நூல் தான் முதன் முதலில் விற்பனைக்கு வந்தது.
  • 1949 -ல் இவர் எழுதி வெளியிட்ட "கோள்களுக்கிடையே பறத்தல்" (Inter Planetary Flight) என்ற நூல் பாமர மக்களும் படித்தறியும் விதமாக இருந்தது. இதில் புவியீர்ப்புப் புல அளவு, உந்தத் தேவையான கணக்கீடு, கோள்களைச் சென்றடையத் தேவையான பாதை (Trajectory) போன்ற தொழிநுட்பக் கூறுகளைத் தனியே இணைப்பாக அளித்திருந்தார். இவரது இந்தக் கற்பனை வளம் விண்வெளியில் புதிய தேடலுக்கு வித்திட்டது எனலாம்.
  • 1952 -ல் இவர் எழுதிய "விண்வெளியைக் கண்டறிதல்" (Exploration of Space) என்ற நூல் இவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனால் இவரது புகழ் உலகெங்கும் பரவியது.

இலங்கைக்கு புலம் பெயர்வு

தொகு

1953 இல் கிளார்க் மரிலின் மேஃபீல்ட் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். மணம் புரிந்து ஆறு மாதங்களில் அவர்கள் பிரிந்தனர். ஆனாலும் 1964 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அதிகாரபூர்வமாகப் பிரிந்தனர்[3]. 1962-ல் இவர் போலியோ நோயினால் தாக்குண்டார். நோயின் தொடர் விளைவால் வாழ்வில் பிற்காலங்களைப் பெரும்பாலும் இவர் நகரும் நாற்காலியிலேயே கழித்தார். இவரது வெளியுலகத் தொடர்பு, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகவே இருந்தது. தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையில் கொழும்பு நகரைத் தேர்ந்தெடுத்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார்[4]. அங்கு அவர் இறக்கும் வரை ஏறக்குறைய 45 ஆண்டு காலம் வாழ்ந்தார்.

விண்வெளி ஆய்வு

தொகு
 
புவிநிலை வலயம் (Geostationary orbit). புவியும் தன்னைத்தானே சுற்றுவதால், அதனோடு ஒப்ப ஆனால் சற்று எட்டி உலா வரும் செய்மதி யைப் படத்தில் காணலாம்.

"புவியிலிருந்து பார்க்கும்பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதி எனப்படும் செயற்கைக்கோள்களை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்" என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை இவர் 1945-இல் முன்வைத்தார்.[5] இக்கருத்துதான் தற்கால வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறவியலாது எனினும், இவர் நினைவாக, (புவிநிலை வலயம்-geostationary orbit) புவியிடமிருந்து மாறாச் சுற்றுப்பாதைகளை சிலநேரங்களில் கிளார்க் வலயம் என்றும் அழைப்பர்.

கருத்துக்கள்

தொகு
  • கிளார்க்கின் படைப்புகள் ஏனைய மனிதர்களின் கற்பனைப் பார்வையிலிருந்து மாறுபட்டவை. தொலைநோக்குடன் வருவதுரைப்பவை. 1945-இல் முன்னறிவிப்புப்போல் உலகைச் சுற்றி ஏவுகணைகள் பறப்பதற்கு ஒரு பதின்ம ஆண்டுகளுக்கும் முன்னரே இவர் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள்பற்றி விவரமாக எழுதினார். விண்வெளித் திட்டங்களின் முதல் ஆதரவாளர்கள் சிலர், ஆர்தர் கிளார்க்கின் இந்தப் புதிய தொழில் நுணுக்கத்தைத் தூண்டி தொடங்கினால் அதுவே அதன் செலவுகளுக்கு ஈடு செய்யும் என்றனர். கிளார்க்கோ தன் குறிக்கோளை இன்னும் மேலே உயர்த்தி வைத்தார்.
  • 1960களில் கருத்தூன்றிய "நட்சத்திரப் போர்" (Star War) என்ற இராணுவப் பாதுகாப்புத் திட்டத்தை ஆர்தர் முழுவதுமாக எதிர்த்தார். இதனால் விண்வெளிப் போர் ஏற்பட்டு விண்வெளி போர்க்களமாகுமென எச்சரித்தார். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளுக்குச் செலவிடப்படும் பணம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக, செவ்வாய்க் கோளுக்குப் பன்னாட்டு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தலாமென மொழிந்தார்.
  • 1492-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடற்பயணம் மேற்கொண்டு அமெரிக்காவைக் கண்டு பிடித்ததன் 500-ஆம் ஆண்டைக் குறிக்கும் விதமாக 1942-ல் செவ்வாய்க்கு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளலாமெனக் குறிப்பிட்டார்.
  • வில்லியம் ஜேம்ஸ் என்பவரது ஒரு வாசகத்தைக் கடன் பெற்று, சூரிய குடும்பத்தைச் சென்று ஆய்வது "போர் செய்வதற்கு இணையான தருமம்" என்று சொல்லி, அணுக்கருவால் உலக படுகொலைக்கு இட்டுச் செல்லாமல், நாடுகளின் ஆற்றலுக்கு ஒரு வடிகால் கொடுத்தார்.
  • விண்வெளி பற்றிய பொதுமக்களின் மனப்பாங்கு, கிளார்க் அவர்களால் மாற்றம் உற்றது என்பது அமெரிக்க, மற்றும் ருசிய விண்வெளி வீரர்களால் ஆமோதிக்கப்பட்டது.
  • ஜீன் ராட்பெர்ரி என்பவர், தொலைக்காட்சி செயல் இயக்குநர்களால் பாராமுகத்துக்கும், ஏன் கிண்டலுக்கும் ஆளான ஸ்டார் ட்ரெக் (Star Trek) என்ற திட்டத்தைத் தொடரத் துணிவைக் கொடுத்தற்கு கிளார்க்கின் எழுத்துக்களுக்கு நன்றி நவில்கிறார்.

மூன்று விதிகள்

தொகு

ஆர்தர் சி கிளார்க் தான் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் அவருடைய மூன்று விதிகளையும் (Three Laws) நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இது அவரது அறிவியல் புதினங்களில் நடைமுறை சாத்தியமாக வெளிப்படுத்திய உள்ளுணர்வுக் கோட்பாடுகளின் அறிவார்ந்த உந்தமாகக் கருதலாம். அவை:

  1. ஒரு சிறந்த அறிவியலாளர், ஏதாவது ஒன்று செயல்படுத்தக்கூடிய அல்லது முடியக்கூடிய ஒன்று எனக் கூறினால் அவர் சரியானவர்; அப்படி இல்லாமல், எதுவும் செயல்படுத்த முடியாது என்றால், அவர் கூற்று சரியில்லை.
  2. முடியக்கூடிய ஒன்றின் எல்லையைக் கண்டறிய வேண்டுமென்றால் முடியாதது என்ற நோக்கினுள் ஓரளவாவது கடந்து பார்க்க வேண்டும்.
  3. எந்த அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றமும் மாயத்திலிருந்து (imagine) வேறுபடுத்த முடியாது.

சிறப்பு

தொகு

1998 இல் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசியாரால் "நைட்" பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருகை தந்தபோது இப்பெருந்தகைக்கு சர் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். இலங்கை அரசின் மிக உயரிய விருதான "ஸ்ரீ லங்காபிமன்யா" என்ற விருது 2005 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

மறைவு

தொகு

2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார். மார்ச் 19 ஆம் தேதி, 2008, புதன்கிழமை காலை அவர் கொழும்பில் உயிர் துறந்தபோது அவருக்கு வயது 90.

எழுதிய புதின நூல்கள்

தொகு
  • Prelude to Space (1951)
  • The Sands of Mars (1951)
  • Islands in the Sky (1952)
  • Against the Fall of Night (1953)
  • Childhood's End (1953)
  • Earthlight (1955)
  • The City and the Stars (1956)
  • The Deep Range (1957)
  • A Fall of Moondust (1961)
  • Dolphin Island (1963)
  • Glide Path (1963)
  • 2001: A Space Odyssey (1968)
  • Rendezvous with Rama (1972)
  • Imperial Earth (1975)
  • The Fountains of Paradise (1979)
  • 2010: Odyssey Two (1982)
  • The Songs of Distant Earth (1986)
  • 2061: Odyssey Three (1988)
  • A Meeting with Medusa (1988)
  • Cradle (novel)|Cradle (1988) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
  • Rama II (1989) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
  • Beyond the Fall of Night (1990) (கிரெகரி பென்ஃபோர்ட்டுடன் இணைந்து)
  • The Ghost from the Grand Banks (1990)
  • The Garden of Rama (1991) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
  • Rama Revealed (1993) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
  • The Hammer of God (1993)
  • Richter 10 (1996) (மைக் மக்கீ உடன் இணைந்து)
  • 3001: The Final Odyssey (1997)
  • The Trigger (1999) (மைக்கல் கியூப்-மக்டோவல் உடன் இணைந்து)
  • The Light of Other Days (2000) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
  • Time's Eye (2003) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
  • Sunstorm (2005) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
  • Firstborn (2007) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "books and writers" Arthur Charles Clarke bio பரணிடப்பட்டது 2015-01-11 at the வந்தவழி இயந்திரம், retrieved 2008-03-18.
  2. 2.0 2.1 "Science fiction author Arthur C Clarke dies aged 90". த டைம்சு. 18 மார்ச் 2008. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/books/article3579120.ece. பார்த்த நாள்: 2008-03-19. "Science fiction writer Sir Arthur C Clarke has died aged 90 in his adopted home of Sri Lanka, it was confirmed tonight." 
  3. McAleer, Neil. "Arthur C. Clarke: The Authorized Biography", Contemporary Books, Chicago, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8092-3720-2
  4. "Happy Birthday Sir Arthur C. Clarke!". Sunday Observer. 2005-12-11. Archived from the original on 2007-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08.
  5. "Extra-Terrestrial Relays — Can Rocket Stations Give Worldwide Radio Coverage?", published in Wireless World in October 1945

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_சி._கிளார்க்&oldid=3924137" இலிருந்து மீள்விக்கப்பட்டது