ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்

ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர், தொல்குடி அமெரிக்கத் தேசிய இனங்களான செரோக்கீ, சிக்காசோ, சொக்ட்டோ, கிறீக், செமினோலே ஆகிய ஐந்து பழங்குடிகளை ஒருங்கே குறிக்கிறது. அக்காலத்தில் ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் பழக்க வழக்கங்களை இவர்கள் பின்பற்றியதாலும், தமது அயலவருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததாலும் இவர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டனர். அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு, குறிப்பாகப் பிற்காலத்து ஒக்லஹோமாவுக்கு இடம் பெயர்க்கப்படும் முன், இவர்கள் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர்.[1][2][3]

இன்று பல அமெரிக்க இந்தியர்கள், சிறப்பாக மேற்படி ஐந்து இனங்கள் தவிர்ந்த ஏனையோர் ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர் இனவாதத் தன்மை கொண்டது என எண்ணுகின்றனர். குறிப்பிட்ட ஐந்து பழங்குடியினருக்கு இவ்வாறு பெயரிடுவதன் மூலம் ஏனைய பழங்குடியினர் நாகரிகம் அற்றவர்கள் என்னும் தொனி தெளிவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது மட்டுமன்றி மேற்படி ஐந்து பழங்குடிகளும் தங்கள் சொந்தப் பண்பாட்டைக் கைக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் அற்றவர்களாக இருந்தார்கள் என்றும், ஐரோப்பியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னரே நாகரிகம் அடைந்தார்கள் என்றும் இப்பெயர் சொல்கிறது.

இப் பழங்குடிகள், தமது தாயகப் பகுதிகளான மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பக்கமிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். இந்த இடப்பெயர்வுகள், மத்திய அரசின் சட்டவாக்கங்களின் துணையுடன், பல பத்தாண்டுகளாக நடைபெற்று, இம்மக்கள், அன்று இந்தியப் பகுதி என அழைக்கப்பட்ட, இன்றைய ஒக்லஹோமாவின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இவற்றுள் மிகவும் மோசமான இடப்பெயர்வு 1838 ஆம் ஆண்டின் கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனப்பட்ட இடப்பெயர்வு ஆகும்.

அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், இந்த ஐந்து பழங்குடிகளும், பிரிந்து போரிட்டனர். சொக்ட்டோ, சிக்காசோ என்னும் இரண்டு பழங்குடிகளும் கூட்டமைப்பின் பக்கம் நின்றனர். கிறீக், செமினோலே, செரோக்கி பழங்குடிகள் தங்களுக்குள் பிரிந்து ஒரு பிரிவினர் ஐக்கிய அமெரிக்காவின் பக்கமும் மற்றப் பிரிவினர் கூட்டமைப்பையும் ஆதரித்து நின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Clinton, Fred S. "Oklahoma Indian History, from The Tulsa World" பரணிடப்பட்டது 2017-08-24 at the வந்தவழி இயந்திரம். The Indian School Journal, Volume 16, Number 4, 1915, page 175-187.
  2. Barry Pritzker (2000). A Native American Encyclopedia: History, Culture, and Peoples. Oxford University Press. p. 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-513877-1.
  3. Theda Perdue; Michael D Green (2001). The Columbia Guide to American Indians of the Southeast. Columbia University Press. pp. 75–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50602-1.