ஐம்படைத் தாலி

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. புறநானூறு[1], அகநானூறு[2] போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும்[3], பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்கால நூல்களிலும் ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன. பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ் நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது ஆயினும் இன்று அருகிவிட்டது. இலங்கையில் இந்த வழக்கம் இன்றும் உள்ளது.

சொற்பொருள்தொகு

ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும். தாலாட்டும் பருவத்தில் குழந்தைக்கு அணிவிப்பது தாலி. முதலாம் குலோத்துங்கன் பிள்ளைப் பருவத்தில் இதனை அணிந்திருந்தான் என்று கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகிறது.[4]

தாலி என்பதன் சொற்பிறப்புப் பற்றிய விளக்கம் எதுவும் ஐயத்துக்கு இடமின்றித் தெரிய வரவில்லை. தாலி என்னும் சொல் பலவகையான அணிகளைக் குறிக்கப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயன்பட்டுள்ளது. ஐம்படைத் தாலி தவிர, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, ஆமைத் தாலி போன்ற அணிகள் இவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும் கழுத்தில் அணியப்படும் அணிகள். தற்காலத்தில் திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் தாலியும் கழுத்தில் அணியப்படுவதே. தவிர இவை எல்லாமே அழகுக்காகவன்றி ஒருவகையில் காவலுக்காகவே அணியப்பட்டவை. "தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது. ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை, கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பணிகளைக் குறிக்கும் "தாலி" என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தோற்றம்தொகு

 
பஞ்சாயுதம் பொறிக்கப்பட்ட புலிநகத்தாலி (நிமால் டி சில்வாவைப் பின்பற்றி வரையப்பட்டது)

இன்று அணிகலன்கள் பெரும்பாலும் அழகுக்காகவே அணியப்படுகின்றன. இதனால், பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்திக் கலை அம்சங்களுடன் இன்றைய அணிகலன்கள் செய்யப்படுகின்றன. ஆனால், பேய், பிசாசு, இயற்கைச் சக்திகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காகவே அணிகலன்கள் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு. நாகரிக வளர்ச்சியினால், அணிகலன்கள் அழகுப் பொருள்களாகவும் பயன்படத் தொடங்கின. எனினும், காப்புக்காக அணிகலன்களை அணியும் வழக்கமும் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. இன்றும் பல பண்பாடுகளில் வழக்கில் உள்ளது. ஐம்படைத் தாலி என்பதும் காவலுக்காக அணியப்பட்ட அணிகலன்களில் ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில், காப்புக்காக அணியப்படும் தாலிகள் தொடர்பான குறிப்புக்கள் புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலேயே காணப்பட்டாலும், ஐம்படைத் தாலி என்னும் பெயர் மணிமேகலையிலேயே முதன் முதலில் வருகின்றது.

ஐம்படைத் தாலி என்பது காவலாக ஆண் குழந்தைகளின் கழுத்தில் அணியும் ஒருவகை அணி என்றும், திருமாலின் கையில் உள்ள ஆயுதங்களின் வடிவில் அமைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். காவலாக அணியப்படும் அணி என்பதும், ஆண் குழந்தைகள் அணிவது என்பதும் பழந் தமிழ் இலக்கியங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், திருமாலின் ஆயுதங்களுடனான தொடர்புகுறித்து எவ்வித சான்றுகளும் பழைய தமிழ் இலக்கியங்களில் இல்லை. ஆண் குழந்தைகள் அணியும் காப்பணியைக் குறிப்பிடும்போது சங்க நூல்களாகிய அகநானூறும், புறநானூறும் வெறுமனே "தாலி" என்றே குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. ஐம்படைத் தாலி என்னும் பெயர் இலக்கியங்களில் வருவதற்கு முன்பே ஆயுதங்களின் போல்மங்களை சேர்த்துச் செய்யப்பட்ட அணிகள்பற்றிய குறிப்புக்கள் கலித்தொகை என்னும் நூலில் வருகின்றன[5]. "படை" என்ற சொல்லையோ, "தாலி" என்ற சொல்லையோ பயன்படுத்தாமல் "அணி" என்ற சொல்லாலேயே இவற்றை இப்பாடல்கள் குறிக்கின்றன. கலித்தொகை குறிக்கும் மேற்படி அணிகள் தொடர்பான இன்னொரு வேறுபாடு இங்கே காணப்படும் ஆயுதங்கள் வாள், மழு என்னும் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே. அத்துடன், இவற்றோடு காளைச் சின்னமும் சேர்ந்திருப்பது இவ்வணி சைவச் சார்பு கொண்டதாக இருக்கலாம் என்னும் கருத்துக்கும் வித்திடுகின்றன.

காப்பணியாகக் குழந்தைகள் அணியும் அணியாகக் புலிப்பல் தாலி பற்றிய குறிப்புக்கள் அகநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்ற முற்பட்ட நூல்களில் காணப்படுவது, புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது என்ற கருத்துக் கொள்வதற்கு இடமளிக்கிறது. இதனால், புலிப்பல் தாலி அணியும் வழக்கத்தின் பிற்கால வளர்ச்சி நிலையிலேயே சமயச் சார்பு கொண்ட ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்[6].

அணிதலும், களைதலும்தொகு

ஆண் குழந்தைகளுக்கே பெற்றோர் ஐம்படைத் தாலி அணிவித்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள்மூலம் அறிய முடிகின்றது. "கிருகியரத்தினம்" என்னும் வடமொழி நூல் பிறந்த ஐந்தாவது நாளில் குழந்தைகளுக்கு இதை அணிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இதுகுறித்த தகவல்கள் எதுவும் தமிழ் நூல்களில் இல்லை. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக, "தாலி களைந்தன்று மிலனே" என்று அவன் தாலியை இன்னும் களையாத வயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு குறித்த வயதில் தாலியைக் கழைந்து விடுவது வழக்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது என உணர முடியும். இதனால், ஆண்களின் வளர்ச்சி நிலைகளைக் குறியீடாகக் காட்டுவதற்கு அணிகள் பயன்பட்டதையும், ஐம்படைத் தாலியும் அவ்வாறான ஒரு வளர்ச்சி நிலையின் குறியீடாக விளங்கியமையும் அறிய முடிகின்றது.

தற்காலத்தில் ஐம்படைத் தாலிதொகு

 
பொன் சங்கிலியில் கோத்து அணியப்படும் யாழ்ப்பாணத்துப் பஞ்சாயுதப் பதக்கம் ஒன்று. கதாயுதத்திற்குப் பதிலாகச் சூலம் இருப்பதைக் கவனிக்கவும்.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது. ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்து நகைக் கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும். இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு. சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந் தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது[7]. பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது. பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர். குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது. .

குறிப்புக்கள்தொகு

 1. புறநானூறு, பாடல் 77.
 2. அகநானூறு, பாடல் 54
 3. மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, அடி 138
 4. பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
  படர்களையு மாயனிவ னென்றுதௌி வெய்தத்
  தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத்
  தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே 240
 5. கலித்தொகை, பாடல்கள் 85, 86
 6. காந்தி, க., 2008. பக்: 200
 7. டி சில்வா, நிமால்.; பத்திரன, கிராந்தி.; 2003. பக். 72

உசாத்துணைகள்தொகு

 • காந்தி, க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2008.
 • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), அகநானூறு - களிற்றியானை நிரை, பாரி நிலையம், சென்னை. 2002 (முதற் பதிப்பு 1960)
 • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), புறநானூறு, பாரி நிலையம், சென்னை. 2004 (முதற் பதிப்பு 1958)
 • சிறீ சந்திரன், ஜெ., மணிமேகலை மூலமும் தெளிவுரையும்", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2002.
 • De Silva, Nimal., Pathirana, Hiranthi., Traditions of Hindu Jewellary, "The Sri Lanka Arcitect -Sept 2002 - Feb 2003", Sri Lanka Institute of Architects, Colombo. 2003.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐம்படைத்_தாலி&oldid=3042365" இருந்து மீள்விக்கப்பட்டது