ஒசுக்கார் நிமேயெர்
ஒசுக்கார் ரிபெய்ரோ டி அல்மெய்தா நிமேயெர் சோவாரெசு ஃபிலோ என்னும் முழுப் பெயர் கொண்ட ஒசுக்கார் நிமேயெர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் அனைத்துலக புதுமக் கட்டிடக்கலை (modern architecture) தொடர்பில் புகழ் பெற்ற ஒரு கட்டிடக்கலைஞர். அழகியல் தொடர்பில் வலிதாக்கிய காங்கிறீட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் பற்றி ஆய்வு செய்த முன்னோடிகளுள் இவரும் ஒருவர்.
ஒசுக்கார் நிமேயெர் | |
---|---|
40 வயதில் நிமேயெர். | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | பிரேசில் நாட்டவர் |
பிறப்பு | ரியோ டி செனெய்ரோ, பிரேசில் | திசம்பர் 15, 1907
இறப்பு | திசம்பர் 5, 2012 இரியோ டி செனீரோ, பிரேசில் | (அகவை 104)
பணி | |
கட்டிடங்கள் | எடிபிசியோ கோப்பான் பிரேசில் தேசிய பேரவை |
திட்டங்கள் | ஐக்கிய நாடுகள் தலைமையகம் பிராசீலியா நகரம் |
வடிவமைப்பு | பிராசீலியா பேராலயம் |
விருதுகள் | 1988 பிரிட்சுக்கர் பரிசு |
இவரது கட்டிடங்கள் பெரிய இடவசதிகளோடு கூடியவையாகவும் வெளிப்பாட்டுத் தன்மை கொண்டவையாகவும் இருந்தது அவற்றின் சிறப்பு ஆகும். பெரிய தூண்களின் மீது தாங்கப்படுவது போன்ற அமைப்பைக் கொண்ட இவரது கட்டிடங்கள், பருமப் (volume) பகுதிகளையும், வெறுவெளிகளையும் (empty space) கலந்து உருவான வழமைக்கு மாறான கோலங்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன. நிமேயெர் கட்டிடங்களைச் சிற்பங்களாக உருவாக்கியவர் எனப்பட்டார். அதற்காகவே அவரைப் புகழ்பவர்களும், விமரிசிப்பவர்களும் உள்ளனர். இவரது தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரும் கட்டிடக் கலைஞர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். இவர் வடிவமைத்த கட்டிடங்களுள் பிராசீலியாவில் உள்ள பொதுக் கட்டிடங்களும் அடங்கும். வேறும் சிலருடன் சேர்ந்து நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகக் கட்டிடத்தை வடிவமைத்தவரும் இவரே.