ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு - மேல் நிலை
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு - மேல் நிலை (Joint Entrance Examination-Advanced) இத்தேர்வு ஆண்டுதோறும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடத்தப்படுகிறது. 15 இ.தொ.கழகங்களைத் (பழையன:7;புதியன:8) தவிர இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி, இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் மற்றும் இந்திய சுரங்கவியல் பள்ளி பல்கலைக்கழகம் (Indian School of Mines University,ISMU) தன்பாத் கல்வியகங்களும் தங்கள் கல்லூரிச் சேர்க்கைக்கு இத்தேர்வை மையமாக கொண்டிருக்கின்றன. 2007ஆம் ஆண்டிலிருந்து புதிதாக நிறுவப்பட்ட
- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழகங்கள் (Indian Institutes of Science Education and Research), கொல்கொத்தா, புணே, மொகாலி, போபால், திருவனந்தபுரம்
- இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Space Science and Technology), திருவனந்தபுரம்
- இந்திய கடல்வழி ஆய்வுகள் கழகம் (Indian Institute of Maritime Studies), மும்பை
- இராசீவ் காந்தி பாறைநெய் தொழில்நுட்பக் கழகம்(Rajiv Gandhi Institute of Petroleum Technology),ரே பரேலி,உத்திரப் பிரதேசம்
கல்விக்கூடங்களும் இத்தேர்வின் விரிவாக்கப்பட்ட தகுதிப்பட்டியலை (Extended Merit List) தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன.
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு - மேல் நிலை எழுத, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இ.தொ.கவினால் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் இக்கழகங்களில் நடத்தப்படும் இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes),ஒருங்கிணைந்த இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப பட்டங்கள், ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் பட்டம் பாடதிட்டங்களுக்கும் சேர தகுதி பெறுகிறார்கள்.45 பேருக்கு ஒருவர் வெற்றி வாய்ப்பு பெறும் இத்தேர்வு உலகின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டிற்கான தேர்வில் 384,977 பேர் பங்குகொண்டனர்;அவர்களில் 10,035 பேர் தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
தற்போதைய தேர்வு வடிவம்
தொகுஇந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு-2009 ஏப்ரல் 12,2009 நடத்தப்பட்டது. இதில் மூன்று மணி நேரம் கொண்ட இரு வினாத்தாள்கள் இருந்தன. இரு தாள்களிலுமே கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் வினாக்கள் இருந்தன (2007க்கு முந்தைய ஆண்டுகளில் இவை ஒவ்வொன்றிற்கும் இரண்டு மணி நேர அளவிலான தனி தாள்கள் இருந்தன). வினாக்கள் மத்திய உயர்நிலைப்பள்ளி வாரியம்(CBSE), இந்திய பள்ளிச்சான்றிதழ் வாரியம் (ISC) பாடதிட்டங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.மனனம் செய்து வெற்றி பெறவியலாத வகையில் வினாக்களும் வடிவமும் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.தற்போது விடைத்தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் முறை பயன்படுத்தப்பட்டு விடைத்தாளகள் தானியங்கியாக ஒளிமுக அடையாள அறிதல் (Optical mark recognition) முறையில் மதிப்பிடப்படுகின்றன.
மாணவர்களால் இத்தேர்வினுக்குக் கொடுக்கப்படும் சிறப்பிற்கேற்ப இதனை நடத்த மிக கடுமையான செயல்முறையை பின்பற்றுகிறது. பங்குபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களிலிருந்து நியமிக்கப்பட்ட ஒ.நு.தே செயற்குழு இத்தேர்வினை மிகுந்த பாதுகாப்பிற்கிடையே நடத்துகிறது. தயாரிக்கப்படும் பல வினாத்தாளகளில் தேர்வுநாளன்று வரவிருக்கும் வினாத்தாளை மிகக் குறைந்த நபர்களே கையாளுகிறார்கள்.
வரலாறு
தொகுஒ.நு.தே கடந்த 45 ஆண்டுகளில் தனது துவக்க வடிவங்களிலிருந்து வளர்ச்சி யடைந்துள்ளது. துவக்கத்தில் நான்கு வினாத்தாள்கள் (ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல்) இருந்தன. 2000 ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை முதன்மை தேர்வில் பங்குபெறும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஓர் வடிகட்டும் தேர்வுத்தாளும் கொண்டிருந்தது.1997ஆம் ஆண்டு வினாத்தாள் சில தேர்வுமையங்களில் முன்னதாகவே வெளியானதை அடுத்து இருமுறை நடத்தப் பட்டது.
2005ஆம் ஆண்டு அனைத்து இ.தொ.க இயக்குனர்களும் கொண்ட குழு இதேர்வுமுறைகளை ஆய்வு செய்து பெரும் மாற்றங்களை 2006ஆம் ஆண்டு முதல் அமலாக்கினர். இதன்படி ஒரே வினாத்தாளில் கணிதம்,இயற்பியல்,வேதியியல் வினாக்கள் விடைத்தேர்வுகளுடன் அமைந்த முறை கடைபிடிக்கப்பட்டது.
இ.தொ.க ஆய்வின்படி, ஒ.நு.தே தகுதியாளர்களில் பெருமளவு வெற்றிபெற்றிருப்பவர்கள் மருத்துவர்களின் மக்கள்;அடுத்து பொறியாளர்களின் மக்கள். கூடுதல் எண்ணிக்கையில் பங்கெடுக்கும் மாணவர்கள் அரசு அலுவலர்களின் மக்கள்,ஆனால் அவர்களது வெற்றி விகிதம் மிகக் குறைவு.[1]
இடங்கள்
தொகுஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வில் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. 2008ஆம் ஆண்டு 311,258 பேர் பங்கெடுத்தனர். அண்மைக் காலங்களில் பல்வேறு இ.தொ.கழகங்களில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:[2]
கழகம் | சேர்க்கை(2003) | சேர்க்கை(2006) | சேர்க்கை(2007) | சேர்க்கை(2008) | சேர்க்கை(2009) |
---|---|---|---|---|---|
இ.தொ.க மும்பை | 554 | 574 | 574 | 648 | 746 |
இ.தொ.க தில்லி | 552 | 553 | 553 | 626 | 721 |
இ.தொ.க குவகாத்தி | 350 | 365 | 365 | 435 | 498 |
இ.தொ.க கான்பூர் | 456 | 555 | 541 | 608 | 702 |
இ.தொ.க கரக்பூர் | 659 | 895 | 874 | 988 | 1138 |
இ.தொ.க சென்னை | 554 | 520 | 540 | 612 | 713 |
இ.தொ.க ரூர்க்கி | 546 | 616 | 746 | 884 | 1013 |
புதிய இ.தொ.கழகங்கள் 2008 | |||||
இ.தொ.க புவனேசுவர் | 120 | 120 | |||
இ.தொ.க காந்திநகர் | 120 | 120 | |||
இ.தொ.க ஐதராபாத் | 120 | 120 | |||
இ.தொ.க பட்னா | 120 | 120 | |||
இ.தொ.க பஞ்சாப் | 120 | 120 | |||
இ.தொ.க இராசத்தான் | 120 | 120 | |||
புதிய இ.தொ.கழகங்கள் 2009 | |||||
இ.தொ.க இந்தூர் | 120 | ||||
இ.தொ.க மண்டி | 120 | ||||
மொத்தம் (இதொகக்கள்) | 3571 | 4078 | 4193 | 5521 | 6491 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி | 568 | 708 | 686 | 766 | 881 |
இந்திய சுரங்கவியல் பள்ளி பல்கலைக்கழகம்,தன்பாத் | 444 | 658 | 658 | 705 | 923 |
மொத்தம் | 4583 | 5444 | 5537 | 6992 | 8295 |
இத்தேர்வில் பங்கெடுக்க கூடுதல் அகவை 25 ஆகும். பட்டியலிட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் ஊனமுற்றோருக்கு 30 அகவைகள். மேலும் 2007ஆம் ஆண்டிலிருந்து ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்வு எழுத முடியும். தவிர ஒருமுறை ஏதேனும் இ.தொ.கவில் சேர்க்கப்பட்டவர்கள் மீண்டும் தேர்வெழுத முடியாது.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மருத்துவர்களின் மக்கள் ஐஐடி நுழைவில் கூடுதல் வெற்றி:அறிக்கை. 30 செப் 2008, 0221, நேகா புஷ்கர்ணா,டைம்ஸ் செய்தி பிணையம்.
- ↑ Seats in JEE-2005 பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம் on IIT Madras' Website; all figures from respective year JEE Counseling brochure; url varies every year. URL accessed on 10 April 2006.