கசாலா சண்டை

கசாலா சண்டை (Battle of Gazala) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுநாட்டுப் படைகள் நேச நாட்டுப் படைகளின் கசாலா அரண்நிலையினைத் தாக்கிக் கைப்பற்றின.

கசாலா சண்டை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி

கசாலா சண்டைப் பகுதி வரைபடம்
நாள் 26 மே-21 ஜூன் 1942
இடம் கசாலா, லிபியா
தெளிவான அச்சுநாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்


பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரிட்டானிய இந்தியா
 தென்னாப்பிரிக்கா
 சுதந்திர பிரான்ஸ்
 போலந்து

 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் கிளாட் ஆச்சினெலெக்
ஐக்கிய இராச்சியம் நீல் ரிட்சி
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்ம்மல்
பலம்
175,000 பேர்
843 டாங்குகள்[1]
80,000 பேர்
560 டாங்குகள்[1]
இழப்புகள்
98,000 பேர்
540 டாங்குகள்
32,000 பேர்
114 டாங்குகள்

1940-41ல் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுநாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டன. 1941 நவம்பரில் குரூசேடர் நடவடிக்கையில் நேச நாட்டுப் படைகளுக்கு கிட்டிய வெற்றியால் ரோம்மலின் படைகள் லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கின. எல் அகீலா என்ற இடத்திலிருந்த அரண்நிலைகளுக்குப் பின் வாங்கிய ரோம்மல், அங்கு தன் படைகளுக்கு ஓய்வு அளித்து அடுத்த கட்ட தாக்குதல்களுக்குத் தயாரானார். குரூசேடர் நடவடிக்கையில் பெரும் சேதமடைந்திருந்த பிரிட்டானியப் படைகளும் அதற்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கி நின்றுவிட்டன. கசாலா அரண்கோட்டினை (Gazala line) பலப்படுத்தத் தொடங்கின. ரோம்மலின் இழப்புகளை ஈடுகட்டவும் அடுத்த கட்ட தாக்குதலில் பயன்படுத்தவும், ஜெர்மானிய போர்த் தலைமையகம் ஐரோப்பாவிலிருந்து துணைப்படைகளை வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பியது. இதனால் மீண்டும் ரோம்மலின் ஆப்பிரிக்கா கோர் படைபிரிவின் பலம் கூடியது. ஜனவரி 1942ல் பிரிட்டானிய அரண்நிலைகளை நோட்டமிட மூன்று சிறு படைப்பிரிவுகளை ரோம்மல் கிழக்கே அனுப்பினார். அவை பலவீனமாக இருப்பதை உணர்ந்த பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கி ஒரு தாக்குதலைத் தொடங்கினார். பெங்காசி, டிமிமி ஆகிய நகரங்களை எளிதில் அச்சுப் படைகள் கைப்பற்றின.

இப்புதிய தாக்குதலை எதிர்கொள்ள கசாலா முதல் பீர் ஹக்கீம் வரையிலான 50 கிமீ நீளமுள்ள பகுதியில் பிரிட்டானியப் படைகள் குவிக்கப்பட்டன. இப்பகுதியில் நேச நாட்டு பிரிகேட்கள் பெட்டி வடிவில் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒரு நேர் கோட்டில் பலமான அரண்நிலை உருவாக்கப்பட்டது. இந்த பலமான அரண்நிலையினுடன் நேரடியாக மோதாமல் ரோம்மலின் படைகள் தயங்கி நின்றன. பெப்ரவரி-மே காலகட்டத்தில் இரு தரப்பினரும் அடுத்து நிகழவிருக்கும் மோதலுக்காக தயாராகினர். மே 26, 1942ல் ரோம்மல் கசாலா அரண்கோட்டின் மீதான தாக்குதலைத் தொடங்கினார். வடக்கு தெற்காக அமைந்திருந்த கசாலா அரண்கோட்டினை நேரடியாகத் தாக்காமல், பீர் ஹக்கீமுக்கு தெற்கே சென்று அதனைச் சுற்றி வளைத்து பின்புறமாகத் தாக்குவது அவரது திட்டம். ஆரம்பத்தில் இத்திட்டம் நன்றாக வேலை செய்தது, ரோம்மலின் சுற்றி வளைக்கும் உத்தியை நேச நாட்டுப்படைகள் எதிர்பார்க்கவில்லை. ரோம்மலின் படைகள் கசாலா அரண்கோட்டின் பிற்பகுதியை அடைந்தன. ஆனால் நேச நாட்டுப் படைகள் விரைவில் சுதாரித்துக் கொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தத்தொடங்கின. பீர் ஹக்கீமிற்குத் தெற்கே சென்று மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பிய ரோம்மலின் படைகள் ஐந்து நாட்களுக்குப் பின்னர் நன்றாக சிக்கிக் கொண்டன. தெற்கே பீர் ஹக்கீம் நேச நாட்டுப் படைப்பிரிவு “பெட்டி”, மேற்கே கன்னிவெடி களங்கள், வடக்கே டோப்ருக் கோட்டை, கிழக்கே பிரிட்டானிய கவசப் படைகள் என அச்சுப்படைகள் சிக்கிக்கொண்ட பகுதி கொப்பறை (cauldron) என்று அழைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக இப்பொறியிலிருந்து தப்ப மேற்கு நோக்கி தன் படைகளைத் திருப்பினார் ரோம்மல். சில நாட்கள் கடும் சண்டைக்குப்பின்னர் கசாலா கோட்டினை கிழக்கு திசையிலிருந்து தகர்த்து கொப்பறையிலிருந்து தப்பினார்.

ஜூன் முதல் வாரம் மீண்டும் ரோம்மலின் படைகள் கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கின. அடுத்த ஏழு நாட்கள் கொப்பறைப் பகுதியில் இரு தரப்பினரும் மீண்டும் மீண்டும் மோதினர். இம்மோதல்களில் ரோம்மலின் படைகள் வெற்றி பெற்றன. ஜூன் 13ம் தேதிக்குள் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் பெரும் சேதமடைந்திருந்தன. எஞ்சியுள்ளவற்றைக் கொண்டு கசாலா கோட்டினைப் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டானியத் தளபதி கிளாட் ஆச்சின்லெக், கசாலா அரண்நிலைகளை கைவிட்டு விட்டு எகிப்து-லிபிய எல்லைக்குப் பின்வாங்க தன் படைகளுக்கு உத்தரவிட்டார். பின்வாங்கும் படைகளைத் தப்பவிட்ட ரோம்மலின் படைகள் அடுத்து டோப்ருக் கோட்டையைத் தாக்கின. 1941ல் பல மாதகால முற்றுகையை சமாளித்திருந்த டோப்ருக் நகரம் இம்முறை அச்சுத் தாக்குதல்களை சமாளிக்க இயலாமல் ஜூன் 21ல் சரணடைந்தது.

இச்சண்டையில் கிடைத்த வெற்றிக்காக ரோம்மலுக்கு ஃபீல்டு மார்ஷலாகப் பதவி உயர்வு தரப்பட்டது. பிரிட்டானிய தரப்பில் ஆச்சின்லெக் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பெர்னார்ட் மோண்ட்கோமரி வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் தளபதியானார்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Carver, p.167

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசாலா_சண்டை&oldid=4071876" இலிருந்து மீள்விக்கப்பட்டது