கம்பி வடம்
கம்பி வடம் (cable) என்பது பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகளைக் இணையாகவும் ஒன்றுக்கொன்று பின்னியும் ஒரே அமைப்பாக அமைந்துள்ள தொகுப்பாகும்.[1] பல அடுக்கு உறைகள் இருப்பதால் இவை சற்று தடிமனாக இருக்கும். எந்திரவியலில் இவை பொருட்களைத் தூக்கவோ இழுக்கவோ பயன்படுத்தப்படுகின்றன. காட்டாக தேர் இழுக்கும் மிகவும் தடிப்பான கயிற்றைத் தேர்வடம் என்கின்றனர். இழுவை வடத்தால் நகரும் போக்குவரத்து இழுவை தொடர்வண்டி (Rope Railway) எனப்படுகிறது. கம்பி வடத்தில் தொங்கியவாறு எடுத்துச் செல்லப்படும் பெட்டி கம்பிவடப் பெட்டி (Cable car) எனப்படுகிறது. மின் பொறியியலில் மின்கடத்திக் கம்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கம்பி வடங்கள் மின்சாரத்தைத் தாங்கிச் செல்கின்றன. ஒளியிழைகளை பாதுகாப்பு உறைகளிட்டு அவற்றைத் தாங்கிச் செல்லும் கம்பி வடங்கள் ஒளியிழை வடம் எனப்படுகின்றன.
இக்கட்டுரையில் கட்டிடங்களிலும் தொழிலகங்களிலும் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் கம்பி வடங்கள் விவரிக்கப்படுகின்றன. சில கிலோமீட்டர்களுக்கும் கூடுதலான தொலைவுகளுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல உயர் மின்னழுத்த வடங்கள், மின் வடங்கள், உயர் மின்னழுத்த நேர் மின்னோட்ட வடங்கள் பயன்படுகின்றன.
வரலாறு
தொகுபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே சணல், பருத்தி போன்ற பல இயற்கை இழைகளை பல்லடுக்குகளில் பிணைத்து கயிறுகளும் வடங்களும் பொருட்களை இழுக்கவும் மேலேற்றவும் பயன்படுத்தி வந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆழ் சுரங்கங்களும் பெரிய கப்பல்களும் கட்டமைக்கப்பட்ட காரணத்தால் குறைந்த விலையில் வலுவான வடங்களுக்குத் தேவை ஏற்பட்டது. எஃகுத் தொழில்நுட்பம் முன்னேறியநிலையில் உயர் இரக எஃகு கம்பி வடங்கள் தயாரிக்கப்பட்டன. இதே தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியி்ல் ஆழ்கடல் தொலைத்தொடர்பு கம்பி வடங்கள் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கு கம்பி வடங்களின் பயன்பாடு கூடுதலாயிற்று. இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மின் வடங்களில் இரு மின் கம்பிகளுக்கிடையேயான காப்புறையாக துணி, காகிதம் மற்றும் இரப்பர் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் உயரழுத்த மின் வடங்களன்றி பிறவற்றில் பெரும்பாலும் நெகிழியாலான காப்புறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ "What Is a Cable Assembly?". wiseGEEK. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.
மேலறிவுக்கு
தொகு- R. M. Black, The History of Electric Wires and Cables, Peter Pergrinus, London 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86341-001-4
- BICC Cables Ltd, "Electric Cables Handbook", WileyBlackwell; London 3rd Edition 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-04075-0