கறுப்பு அன்னம்

நீர்ப்பறவை
(கருப்பு அன்னம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கறுப்பு அன்னம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. atratus
இருசொற் பெயரீடு
Cygnus atratus
(லதாம், 1790)
உப இனங்கள்
வேறு பெயர்கள்
  • Anas atrata Latham, 1790
  • Chenopis atratus

கறுப்பு அன்னம் (கருப்பு அன்னம்) (Cygnus atratus) அல்லது காரோதிமம் என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவுசுதிரேலியாவில் இது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயரும் ஓருயிரனமாகவே காணப்படுகின்றது. கறுப்பு அன்னம் உடல் முழுவதும் கருமையாயும் சொண்டு சிவப்பாயுமுள்ள பெரிய பறவைகளுள் ஒன்றாகும்.

கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும்.[2] கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு.

விபரம்

தொகு
 
"S" வடிவ கழுத்தமைப்பைக் கொண்ட வளர்ந்த கறுப்பு அன்னமொன்றின் பக்கவாட்டுத் தோற்றம்

கறுப்பு அன்னம் பொதுவாக கரு நிற இறகுகளையும் வெண்ணிற பறத்தல் இறகுகளையும் கொண்ட பறவையாகும். அதன் சொண்டு பளிச்சென்ற செந்நிறத்திலமைந்திருப்பினும் சொண்டின் ஓரங்களும் முன் பகுதியும் வெளிறியதாகவே இருக்கும். அதன் கால்களும் பாதங்களும் சாம்பல் நிறம் கலந்த கறுப்பாகவே அமைந்திருக்கும். கறுப்பு அன்னங்களின் ஆண் பறவைகள் அவற்றின் பெண் பறவைகளை விட ஓரளவு பெரியவையும் ஒப்பீட்டளவில் நீண்டு நேரான சொண்டுகளையும் கொண்டிருக்கும். அவற்றின் குஞ்சுகள் சாம்பல் கலந்த கபில நிறத்தில் காணப்படுவதோடு ஓரங்கள் வெளிறிய இறகுகளைக் கொண்டிருக்கும்.[2]

வளர்ந்த கறுப்பு அன்னமொன்று 110-142  ச.மீ. (43–56  அங்குலம்) நீளமும் 3.7–9  கி.கி. (8.1-20  இறாத்தல்) நிறையும் கொண்டிருக்கும். அதன் இறக்கைகளை விரிப்பதால் பெறப்படும் நீளம் 1.6-2 மீற்றராகும் (5.3-6.5  அடி).[2][3] கறுப்பு அன்னத்தின் கழுத்து ஏனைய அன்னங்களின் கழுத்தின் நீளத்தை விடவும் மிக நீண்டது என்பதுடன் "S" வடிவத்தில் வளைந்து காணப்படும்.

கறுப்பு அன்னத்தின் ஒலி நீண்ட தூரம் கேட்கக் கூடியதும் மெல்லிசை போன்றும் இருக்கும். அத்துடன், அது இரை தேடும் வேளைகளிலோ அடையும் வேளைகளிலோ ஏதும் குழப்பமுறக் காணின் சீட்டியடிக்கக் கூடியதாகும்.[2][4]

நீந்தும் வேளைகளில் கறுப்பு அன்னம் தன் கழுத்தை நன்கு வளைத்தோ அல்லது நன்கு நேராகவோ வைத்திருக்கக் கூடியதாகும் என்பதுடன் அதன் இறகுகளை அல்லது சிறகுகளை மூர்க்கமாகத் தோன்றும் வண்ணம் மேல் நோக்கி வைத்திருக்கும். கூட்டமாகப் பறக்கும் போது கறுப்பு அன்னங்கள் நேர் கோட்டிலோ அல்லது V வடிவத்திலோ பறக்கும் தன்மையுள்ளன. அக்கூட்டத்தில் பறக்கும் ஒவ்வொரு பறவையும் பல்வேறு வகையிலான ஒலிகளை எழுப்பிக் கொண்டும் சிறகுகளினால் அசைவுகளைக் காட்டிக் கொண்டும் பறக்கும் தன்மையுள்ளதாகும்.[2]

இலக்கியத்தில்

தொகு

பண்டைத் தமிழிலக்கியங்களிலும் (சிலப்பதிகாரத்தில்), உரையாசிரியர்களாலும் காரோதிமம் எனும் பெயரில் கறுப்பு அன்னம் குறிக்கப்பட்டுள்ளது.[5][6]. மேலும், இவ்வகை அன்னமானது, 18 ஆம் நூற்றாண்டு வரை எந்தவொரு மேற்கத்தேய நூல்களிலும் காணப்படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.[7]

பரவல்

தொகு

கறுப்பு அன்னமானது அவுசுதிரேலியாவின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் அவற்றை அண்டிய கரையோரச் சிறு தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவை தஸ்மானியாவிலும் முரே டார்லிங் படுகையிலும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன.[2][8] எனினும் கறுப்பு அன்னங்கள் அவுசுதிரேலியாவின் வட பகுதியிலோ நடுப் பகுதியிலோ பொதுவாகக் காணப்படுவதில்லை.

நடத்தை

தொகு
 
கறுப்பு அன்னமொன்று ஆழ் நீரில் இரை தேடித் தலை கீழாகச் செல்கிறது
 
Cygnus atratus

காப்பு

தொகு

கறுப்பு அன்னம் 1979 ஆம் ஆண்டின் அவுசுதிரேலிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது மிகக் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Cygnus atratus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Pizzey, G. (1984). A Field Guide to the Birds of Australia. Sydney: Collins. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0002192012.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2011-03-22.
  4. Falla, R.A., Sibson, R.B., & Turbott, E.G. (1981). The New Guide to the Birds of New Zealand and Outlying Islands. Auckland: Collins. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0002175630.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. ஞா.தேவநேயப் பாவாணர், வண்ணனை மொழிநூலின் வழுவியல்(1968) , பக் 17
  6. ஞா. தேவநேயப் பாவாணர், செந்தமிழ்ச் சிறப்பு (1968)பக், 118
  7. Black swan theory (English Wikipedia Article), retrieved: August 4,2011
  8. Waterfowl in New South Wales. Sydney: CSIRO and NSW Fauna Panel. 1964. pp. 11–12.

வெளித் தொடுப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cygnus atratus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_அன்னம்&oldid=3766076" இலிருந்து மீள்விக்கப்பட்டது