கற்பகப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்

உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள உரும்பிராய் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில். பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 4 மைல்கள் தொலைவில் இக் கோயில் அமைந்துள்ளது. பலாலி வீதிக்கு மேற்கே, உரும்பிராய் வடக்கில், ஓடையம்பதி என்று அழைக்கப்படும் குறிச்சியில் இக் கோயில் அமைந்துள்ளதால் உரும்பிராய் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார் கோயில் என்ற பெயராலும் இக்கோயில் அறியப்படுவது உண்டு.

கற்பகப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்
உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயிலின் தோற்றம்
உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயிலின் தோற்றம்
பெயர்
பெயர்:கற்பகப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்பகப் பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:இல்லை

கோயிலின் தெற்கு மேற்கு வீதிகளில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும், கிழக்கில் பலாலி வீதிக்கு அடுத்த பக்கத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபமும், வடபால் தோட்ட நிலங்களும் அமைந்துள்ளன.

வரலாறுதொகு

1834 ஆம் ஆண்டில் கணபதி ஐயர் என்பவர் உரும்பிராய் மக்களின் உதவியுடன் தற்போது கோயில் இருக்கும் பகுதியில் மூன்று பரப்பு நிலத்தில் ஒரு சிறிய கோயிலைக் கட்டுவித்தார். இதன் விரிவாக்கத்துக்காக, இதற்கு மேற்குப் பகுதியில் அமைந்திருந்த நிலங்களை உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த அவற்றின் உரிமையாளர் நன்கொடையாக வழங்கினார். அன்றைய கோயிலுக்கும் பலாலி வீதிக்கும் இடையே இன்னொரு நிலமும் வீடும் விரிவாக்கத்துக்குத் தடையாக இருந்தன. இன்னொரு அன்பர் தனக்குச் சொந்தமாக அயலில் இருந்த நிலத்தை மாற்றீடாகக் கொடுத்து அக்காணியையும் கோயிலுக்காகப் பெற்றுக்கொடுத்தார். இதனால், கோயிலைப் பெரிதாகக் கட்டுவதற்குத் தேவையான நிலங்கள் கிடைத்தன. கோயில் விரிவாக்கத்துக்காக மட்டுமன்றி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொதுத் தேவைகளுக்காகவும் குத்தகைக்குக் கொடுக்கக்கூடிய அளவுக்குக் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம் என்பன இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைக்கப்பட்டன.

அக்காலத்தில் உரும்பிராய் கிழக்கிலும், வடக்கிலும் வாழ்ந்த சிலர் ஊர்மக்களின் உதவியுடன் கோயிலின் கருவறை விமானத்தைக் கட்டியதுடன் ஆண்டு தோறும் பத்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவும் ஒழுங்கு செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் உரும்பிராயைச் சேர்ந்த பலர் மலாயாவுக்குச் சென்று செல்வம் சேர்த்தனர். இவர்களிற் பலரும் கோயிலுக்குப் புதிய மண்டபங்களைக் கட்டுவதிலும், திருத்த வேலைகளைச் செய்வதிலும் உதவினர். தற்காலத்திலும், கனடா, ஆசுத்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளி நாடுகளில் வாழும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள் பலர் திருவிழா உபய காரர்களாக இருப்பதுடன், பல்வேறு திருப்பணிகளுக்கும் நிதி உதவி வருகின்றனர். 1982 ஆம் ஆண்டில் கோயிலுக்கு இராச கோபுரம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் கோபுர வேலைகள் நிறைவடைந்து குடமுழுக்கும் இடம்பெற்றது.[1]

நிர்வாகம்தொகு

கோயில், பரிபாலன சபையினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகப் 17 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு ஒன்று உள்ளது. இதில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் என்னும் ஐந்து பதவிகளை வகிப்போரும், 12 சாதாரண உறுப்பினரும் அடங்குவர்.

திருவிழாக்கள்தொகு

இவ்வாலயத் திருவிழா ஆனிப் பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்துத் திருவிழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் தொடங்கும். இரண்டாம் திருவிழா முதல் 9 ஆம் திருவிழா வரை பல்வேறு வாகனங்களில் பிள்ளையார் வீதி உலாவாக எடுத்துவரப்படுவார். 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழாவும், 11 ஆம் நாள் கைலாச வாகனத் திருவிழாவும், 13 ஆம் நாள் சப்பறத் திருவிழாவும், 14 ஆம் நாள் தேர்த் திருவிழாவும் இடம்பெறும். 15 ஆம் நாள் தீர்த்தத் திருவிழா. அடுத்த நாள் பூங்காவனத் திருவிழா நடைபெறும்.

திருவிழாக்களில் பயன்படுத்துவதற்காக இரண்டு தேர்கள், மஞ்சம், சப்பறம், கைலாச வாகனம் என்பனவும் அவற்றுக்கான தரிப்பிடங்களும் கோயிலில் உள்ளன. இவற்றைவிட எலி வாகனம், சிங்க வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், இடப வாகனம், மயில் வாகனம் என்பனவும் இருக்கின்றன.

நூல்கள்தொகு

உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் மீது பல நூல்கள் எழுந்துள்ளன. இவற்றுள் கற்பகவிநாயகர் திருவந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்களும் கற்பகவிநாயகர் அந்தாதி என்ற நூலினைக் கோயிலாக் கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு. பொ. குழந்தை வடிவேலு அவர்களும், இயற்றி வெளியீடும் செய்துள்ளனர்.

குறிப்புகள்தொகு

  1. கோயில் வரலாறு தொடர்பான தகவல்கள் கோயிலுக்கான இணையத்தளத்தின் தலவரலாறு பகுதியில் இருந்து பெறப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு