கைலாச வாகனம்

கையிலாச வாகனம்
கைலாச வாகனம்
கைலாச வாகனம்
உரிய கடவுள்: சிவபெருமான்
வகைகள்: அதிகாரபீட ராவண வாகனம்,
கைலாசபீட ராவண வாகனம்

கைலாச வாகனம் அல்லது கையிலாச வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் சோமாஸ்கந்த மூர்த்தம் அல்லது உமாமகேஸ்வரர் கோலங்களில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1] இந்த வாகனம் இராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகிறது.

வகைகள்

தொகு

இந்த வாகனத்தில் அதிகாரபீட ராவண வாகனம், கைலாசபீட ராவண வாகனம் என்ற இருவகை காணப்படுகிறது.

பத்து தலைகளுடனும், இருபது கைகளுடனும் சிவ பக்தனான இராவணன் வீணையை மீட்டியபடி இருப்பதாக வடிவமைக்கப்பெறும் வாகனம் அதிகார பீட இராவண வாகனமென்றும், இராவணன் கயிலையை சுமந்து இருப்பது போல வடிவமைக்கப்படும் வாகனம் கைலாசபீட ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

கைலாசபீட ராவண வாகனம் பராய்துறைநாதர் கோயில்

புராண நிகழ்வு

தொகு

செருக்கோடு கயிலையைத் தூக்கி, அதன்கீழ் நசுங்குண்ட இராவணன், அதிலிருந்து மீள்வதற்காக சிவ தாண்டவ தோத்திரம் பாடி, சிவபெருமானை குளிர்வித்ததாகச் சொல்லப்படுகின்றது. அதனை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான் சந்திரகாசம் எனும் வாளை இராவணனுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வை திருநாவுக்கரசர் தமது திருக்கயிலாயம் பதிகத்தில்..

கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே என பாடியுள்ளார்.

தத்துவம்

தொகு

இராவணன்- ஆணவமலம் நிறைந்த உயிர்; கயிலாய மலை பிரபஞ்சம். இராவணன் தன் ஆணவத்தால் கயிலை மலையைத் தூக்குவதென்பது- ஆணவம் பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதைக் குறிப்பதாக உள்ளது. சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் மலையை அழுத்தியபோது, ஆணவம் அழிந்த இராவணன் சாமகானம் பாடி இறைவன் அருளைப் பெற்றான்.

கோயில்களில் உலா நாட்கள்

தொகு
  • திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் சிவாலயத்தில் தீபத்திருவிழாவின் ஒன்பதாம் நாள் இரவு சோமாசுகந்தர் அதிகாரபீட இராவண வாகனத்தில் உலா வருகிறார்
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை மாதத் தெப்பத்திருவிழாவின் மூன்றாம் நாள் கைலாய வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவர் உலா வருகின்றனர்.
  • ஸ்ரீசைலம் பிரம்பராம்பாள் உடனுறை மல்லிகார்ஜுனஸ்வாமி கோயிலில் நவராத்திரிப் பெருவிழாவின் மூன்றாம் நாளில் பிரம்பராம்பாள், மல்லிகார்ஜுனஸ்வாமி இராவண வாகனத்தில் உலா வருகின்றனர்.
  • திருப்பெருந்துறை (எ) ஆவுடையார்கோவிலில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாத சுவாமி சிவாலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ நான்காம் திருநாளில் மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமான் அலங்காரத்தில் வெள்ளிக் கயிலாய வாகனத்தில் திருவீதியுலா வருகிறார்.
  • கன்னியாகுமாரி(சுசீந்திரம்)மார்கழி மாதம் நடக்கும் 7ம் நாள் திருவிழா அன்று சிவபெருமான் வெள்ளிக் கயிலாய வாகனத்தில் திருவீதியுலா வருகிறார்.

இவற்றையும் காண்க

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?". https://tamilandvedas.com. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாச_வாகனம்&oldid=3929257" இலிருந்து மீள்விக்கப்பட்டது