காதோலை கருகமணி
காதோலை கருகமணி அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையாலான காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி அம்மனை அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி (வெளிர்சிவப்பு நிறத்தில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.
அணிகலன்கள்
தொகுகாதோலை
தொகுகாதோலை என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட சுருள் வடிவிலான ஒரு அணிகலன் ஆகும். தமிழ்நாட்டில் கூடலூர் பகுதியில் பனியர், கரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் பனை ஓலையில் செய்த காதோலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தாளம் செடியின் இலை, கருகமணி, கொசுதேனடை ஆகியவற்றைப் பயன்படுத்திக் காதோலையைச் செய்கின்றனர். [1]
காதோலை கம்மல்
தொகுகாதோலை கம்மல் என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலையின் பந்தலூர், கூடலூர், எருமாடு உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் பனியர் இனத்து பழங்குடி மக்கள் அணியும் வண்ணமயமான பாரம்பரியக் காதணி ஆகும்.[2] நகர நாகரீகத்தின் தாக்கத்தால் இந்தக் கம்மல் அணிவது தண்டட்டியைப் போல அருகிவருகிறது. இதனால் பனியர் இனத்துப் பெண்களில் சிலர் மட்டும் இன்னமும் இந்தக் காதோலை அணிந்துவருகின்றனர். இந்தக் காதணியை இந்த மக்களே செய்து கொள்கின்றனர். இந்தக் கம்மலை அணிவதற்காகக் காதுத்துளையை வளர்ந்து பின்னர், இரண்டு அங்குல விட்டமுள்ள காது துவாரத்தில் காதணி அணியப்படுகிறது.
காதணி செய்யும் முறை
தொகுமுதலில் கைதை சக்கை என்னும் ஒரு காட்டு மரத்தின் ஓலையை, தண்ணியில் வேகவைக்கின்றனர். ஓலை வெந்தபிறகு வெளியில எடுத்து காயவைத்து, மலைத் தேன் மெழுகை ஓலையில் தடவி ஓலையை வேண்டிய அளவுக்குச் சுருட்டி அதில் பாசிமணிகளை ஒட்டுவார்கள் (முற்காலத்தில் சிவப்பு, பச்சை என வண்ணமயமான மர விதைகளை ஒட்டியுள்ளனர். பின்னர், பாசி மணிகளை ஒட்டும் பழக்கம் வந்துள்ளது). ஓலையை மூன்று நாட்கள் உலரவைத்து காதில் அணிவார்கள். தேன் மெழுகால் மெருகேத்துவதால் இந்தக் கம்மல் ஒன்றரை ஆண்டுகள்வரை பயன்படுத்த இயலும், பின்னர் இதேபோலப் புதியதாக வேறொரு காதணியைச் செய்து அணிந்துகொள்வர். [3]
ஆடிப்பெருக்கு விழா
தொகுஆடிமாதம் 18ம் நாள் ஆடிபெருக்கு விழா காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகளும், புதுமணத் தம்பதிகளும், இளம் பெண்களும் குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து அரிசி, பழங்கள், அவல், மலர்கள் ஆகியவற்றை வைத்துப் படையலிடுவார்கள். சுமங்கலிப் பெண்கள் காவிரி ஆற்றுக்கு வந்து எப்போதும் தங்கள் வாழவும், வளமும் குன்றாமல் இருக்க வேண்டும் எனக் காவிரித்தாயிடம் வேண்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் நூலை அணிந்து கொள்வார்கள்.
புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்து கொண்ட மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்து அதனை ஆடிப்பெருக்கு விழாவின்போது கொண்டு வந்து ஆற்றில், குளத்தில் விடுவது வழக்கும். அதேபோலப் புதுமணத் தம்பதிகளின் தாலிகயிற்றைப் பிரித்துப் புதிதாக அணிந்து கொள்ளும் வழக்கமும் இந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பனைஓலையால் செய்யப்பட்ட காதோலையையும், கருப்பு வளையல், குங்குமம் ஆகியவற்றைக் கொண்ட கருகமணியையும் இணைத்துக் காவிரித் தாய்க்குப் படையலிடுவது வழக்கம்.
இந்தக் காதோலை கருகமணியைக் கும்பகோணம் அருகே பாபுராஜபுரத்தில் உள்ள சிலர் கடந்த இருபது ஆண்டுகளாகச் செய்து, தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆடிப்பெருக்கு, வரலட்சுமி நோன்பு, மாசி மகத் தீர்த்தவாரி ஆகிய தினங்களில் காதோலை கருகமணியை நீர்நிலையில் வைத்து படையல் செய்வது வழக்கம். ஆடிப்பெருக்கின் போது இந்தக் காதோலையும், கருகமணியும் படையலில் முக்கியமாக இருக்கும். [4]
வரலட்சுமி விரதம்
தொகுஇந்து சமயத்தில் வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டம் அமைத்து அதில் சந்தனத்தால் ஆன வரலட்சுமியின் முகம் செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் மஞ்சள் ஆடை, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து வழிபடுகின்றனர்.[5]
தயாரிப்பு முறை
தொகுபனை ஓலைகளை நறுக்கி வெயிலில் காய வைத்து இளம் சிவப்பு வணம் கலந்த கொதிக்கும் நீரில் இட்டுப் பனை ஓலைகளுக்குச் சாயமேற்றுகின்றனர். அதன் பின் சாயமேற்றப்பட்ட ஓலைகளை நறுக்கிச் சுருளாக சுற்றி அதில் கருநிற வலையளை பொருத்திவிடுகின்றனர்.[6]
காதோலை கருகமணிகளைத் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாத்தனூர், வேப்பத்தூர் மற்றும் கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஆகிய ஊர்களில் தயாரிக்கின்றனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ அழிவின் விளிம்பில் 'காதோலை' - அக் 11, 2018 - தினமலர் நாளேடு.
- ↑ ஆர்.டி.சிவசங்கர் (9 சனவரி 2017). "நாகரீக கலாச்சாரத்தால் பாரம்பரிய காதணிகளை கைவிடும் பனியர்". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
- ↑ கா.சு.வேலாயுதன் (6 சூலை 2017). "காணாமல் போகுதோ காதோலை கம்மல்!". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ வரலட்சுமி விரதப் பூஜை - ஆன்மீக செய்திகள் -ஆகஸ்ட் 07,2019 - தினமலர் நாழேடு
- ↑ ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570 பரணிடப்பட்டது 2020-07-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570 பரணிடப்பட்டது 2020-07-25 at the வந்தவழி இயந்திரம்