காந்தாரி மக்கள்
காந்தாரிகள் (Gandharis) என்பவர்கள் இருக்கு வேதம் மற்றும் பிற நூல்களிலிருந்து சான்றளிக்கப்பட்ட ஒரு பழங்குடியினர் ஆவர். ஜிம்மரின் கூற்றுப்படி, இவர்கள் வேத காலங்களில் குபா நதியில் வாழ்ந்தனர். [1] பிற்காலத்தில், இவர்கள் பாரசீக பேரரசின் ஒரு பகுதியை உருவாக்கினர். [2] இவர்கள் இருக்கு வேதத்தில் காந்தாரி என்றும், பின்னர் அதர்வண வேதத்தில் எல்லைப் பழங்குடியினரான பால்கிகாக்கள் (பாக்திரியர்கள) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். விதேக நாட்டின் மன்னர் ஜனகனின் சமகாலத்தவராக இருந்த காந்தார நாட்டின் ஐத்தரேய பிராமணரான நாகனஜித்தை இவர்களில் ஒருவராக குறிப்பிடுகிறார்கள். சந்தோக்ய உபநிடதங்களிலும், கல்ப சூத்திரங்களிலும் காந்தாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புராண மற்றும் பௌத்த மரபுகளின் உத்தரபாத (வடக்கு) பிரிவில் காந்தாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏழு நதிகளின் நிலத்திலிருந்து மந்தத்தர் என்பவரால் துரூகு மன்னர் விரட்டப்பட்டதாகவும், அவர்களின் அடுத்த மன்னர் காந்தார நாட்டின் ஒரு வடமேற்கு பிராந்தியத்தில் குடியேறினார் என்றும் அது காந்தார தேசம் என்று அறியப்பட்டது என்றும் புராணங்கள் பதிவு செய்கின்றன . [3] பிற்கால துரூகு மன்னர் பிரசெட்டாசின் மகன்கள் வடக்கு ஆப்கானித்தானின் அருகிலுள்ள பகுதியில் வசித்து வந்தனர். இதைப்பற்றி பாகவத புராணம் ( 9.23.15-16); விஷ்ணு புராணம் (4.17.5); வாயு புராணம் (99.11–12); பிரம்மாண்ட புராணம் (3.74.11–12), மச்ச புராணம் (48.9) போன்ற புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. [4]
மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக கௌரவர்களின் வலுவான கூட்டாளிகளாக காந்தாரர்களும் அவர்களுடைய அரசன் சகுனி முக்கியமாக விளங்குகிறார்கள். காந்தாரர்கள் ஒரு ஆத்திரமடைந்த மக்களாகவும், போர் கலையில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். புராண மரபுகளின்படி, யயாதியின் வழித்தோன்றலான அருத்தாவின் மகன் காந்தாரத்தை நிறுவினார். இந்த நாட்டின் இளவரசர்கள் இருக்கு வேத காலத்தின் புகழ்பெற்ற மன்னராக இருந்த துரூகுவின் வரிசையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிந்து ஆறு காந்தார நிலங்களில் பாய்ந்தது. வாயு புராணத்தின் (II.36.107) கருத்துப்படி, காளுகத்தின் முடிவில் காந்தாரர்கள் பிரமிதி என்கிற காளியால் அழிக்கப்பட்டனர்.