காந்தள்

(கார்த்திகைப் பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காந்தள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Liliales
குடும்பம்:
Colchicaceae
பேரினம்:
இனம்:
G. superba
இருசொற் பெயரீடு
Gloriosa superba
L.
வேறு பெயர்கள்

Eugone superba
Gloriosa rothschildiana
Gloriosa simplex
Gloriosa virescens
Gloriosa abyssinica
Gloriosa carsonii
Gloriosa lutea
Methonica superba

செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.[1][2][3]

அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைப்பூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்து பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

தன்மைகள்

தொகு
  • இக்கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்தில் உள்ள மரஞ்செடி முதலியவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்துக்கொண்டு இந்தத் தண்டு 10-20 அடி உயரம் வளரும்.
  • கிளை விட்டுப் படரும் ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும் 1-1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது.
  • கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3 அங்குலம் தொடக்கம் 6 அங்குலம் வரையான நீளம், 0.75 அங்குலம் தொடக்கம் 1.75 அங்குலம்வரை அகலமிருக்கும். மாற்றொழுங்கில் அல்லது எதிரொழுங்கில் அமைந்திருக்கும். கணுவிடைகள் வளராமையால் வட்டவொழுங்கில் அமைந்திருப்பதும் உண்டு. இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில், நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.
  • பூக்கள் பெரியவை. இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.
  • தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
  • இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75 அங்குலம், மரகதப்பை 0.5 அங்குலம். முதுகொட்டியது, இங்குமங்கும் திரும்பக் கூடியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2அங்குலம் ஒரு புறம் மடங்கியிருக்கும்.

கிழங்கின் தன்மைகள்

தொகு

இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும். கிழங்கு ஆனது ஆடிப்பட்டத்தில் நடவு செய்யப்படுகிறது.

கிழங்கின் வளர்ச்சி

தொகு

கிழங்கு ஆனது நடவு செய்த 90 நாட்களில் பலன் தரத் தொடங்குகிறது. கிழங்கின் வளர்ச்சியைக் களைகள் பாதிக்காதவாறு 30, 60, 90 ஆகிய நாட்களில் களை எடுக்கப்படுகிறது. நட்ட உடன் நீர் பாய்ச்சப்பட்டு பின்னர் 20-25 நாட்கள் கழித்து நீர்ப்பாய்ச்சல் நல்ல வளர்ச்சியைத் தரும். கிழங்கு வளரச் சராசரி மழையளவு 70 செ.மீ. ஆக இருக்க வேண்டும். கிழங்கு ஒவ்வொன்றும் 100 கிராம் எடைவரை இருக்கும். கோடைக் காலத்தில் கிழங்குகள் ஓய்வடைகின்றன. இதனால் காந்தள் கொடியானது துளிர்ப்பதில்லை.

அறுவடை

தொகு

அயல்மகரந்தச் சேர்க்கைமூலம் கருவுற்ற பூக்கள்மூலம் உருவான காய்களிலிருந்து செடி ஒன்றிற்கு 100 கிராம் விதைகளும், ஒரு கிலோ கிராம் அளவிலான கிழங்கும் கிடைக்கும். ஓர் ஏக்கருக்குக் கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் அளவுக் கிழங்கு கிடைக்கும். விதைகள் 2500 - 3000 வரை விற்பனையாகும்.

இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். காந்தளை விதைகள் மூலமும் கிழங்குகள் மூலமும் பயிர் செய்யலாம். எனினும் கிழங்குகள் மூலமே வணிக வழியில் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.

காந்தளின் பெயர்கள்

தொகு
 
காந்தள் பூ
  • இதன் பூத்தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
  • இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
  • இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
  • இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
  • வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
  • கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
  • நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
  • பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

ஏனைய மொழிப் பெயர்கள்

தொகு

சிறப்புகள்

தொகு

செங்காந்தள் (Gloriosa) அல்லது கார்த்திகைப்பூ சிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் தேசிய மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

தொகு
  1. "Gloriosa superba L." Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. 2017. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  2. Scheper, J. Gloriosa superba. Floridata.com.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gloriosa superba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தள்&oldid=3889993" இலிருந்து மீள்விக்கப்பட்டது