கிமோனோ
கிமோனோ (kimono) என்பது ஒரு சப்பானிய மரபுவழி ஆடை ஆகும். இதை ஆண், பெண் இருபாலாரும் அணிவர். சப்பானிய மொழியில் கிமோனோ என்ற சொல்லுக்கு "அணியும் பொருள்" ("கி" - அணிதல், "மோனோ" - பொருள்)[1] என்பது பொருள். தற்காலத்தில் முக்கியமான விழாக்களிலும், முறைசார்ந்த நிகழ்வுகளிலுமே கிமோனோ பயன்படுத்தப்படுகிறது.
"T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். கிமோனோக்களின் இடப்பக்கப் பகுதி வலப்பக்கத்தின் மேலாகச் செல்லும்படி உடம்பைச் சுற்றி அணியப்படுகின்றன. இது ஒபி எனப்படும் நாடா மூலம் உடம்பின் பிற்பகுதியில் முடிச்சு இட்டுக் கட்டப்படும். இறந்தவர்களுக்கு, புதைப்பதற்கு முன் அணிவிக்கும்போது மட்டும் மறுபுறமாகச் சுற்றப்படுகிறது.[2] கிமோனோக்கள் பொதுவாக "சோரி" அல்லது "கோதா" எனப்படும் மரபுவழிக் காலணிகளுடனும், பெருவிரல் பிரிந்திருக்கும் காலுறைகளுடனும் (தாபி) அணிவது வழக்கம்.[3]
இக்காலத்தில், சிறப்பு நிகழ்வுகளில் பெண்களே பெரும்பாலும் கிமோனோக்களை அணிகின்றனர். மரபுவழியாக, திருமணமாகாத பெண்கள் ஏறத்தாழ நிலமட்டம் வரை நீண்டிருக்கும் கைகளுடன் கூடிய "புரிசாடே" [3]எனப்படும் ஒரு வகைக் கிமோனோவை அணிகின்றனர். சில வயதான பெண்களும், மிகச் சில ஆண்களும் மட்டுமே தற்காலத்தில் அன்றாடம் கிமோனோவை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பல ஆண்கள், திருமண நிகழ்வுகள், தேநீர் விழாக்கள் போன்றவற்றிலும், பிற முக்கியமான சிறப்பு நிகழ்வுகளிலும் மட்டுமே கிமோனாவை அணிகின்றனர். தொழில்ரீதியான சுமோ மல்யுத்த வீரர்கள் பெரும்பாலும் கிமோனோவுடனேயே காணப்படுகின்றனர். பொது இடங்களில் தோன்றும்போது அவர்கள் மரபுவழி உடைகளையே அணிய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.[4]
வரலாறு
தொகுகிமோனோவுக்கு கெர்ஃபூக்கு என்னும் இன்னொரு பெயர் உண்டு. “‘‘வூ‘’ க்களின் உடை“ என்பது இதன் நேரடிப் பொருள். வூ, கிபி 222–280 காலப் பகுதியில் பலம் வாய்ந்த அரசுகளில் ஒன்றாக இருந்தது. இது, தொடக்ககாலக் கிமோனோக்கள் மரபுவழி ஹான் சீன ஆடைகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டளவில் சப்பானிலிருந்து சீனாவுக்குச் சென்ற தூதுக்குழுக்கள் ஊடாகவே சப்பானில் சீனப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போக்கு ஏற்பட்டது. எட்டாம் நூற்றாண்டிலேயே சீனப் பாங்குகள் சப்பானில் பிரபலமாகியதுடன் ஒன்றன்மேல் ஒன்று படியும் கழுத்துப் பட்டை பெண்களின் கிமோனோக்களில் பிரபலமாகியது.[3] ஈயான் காலப் பகுதியில் கிமோனோ மேலும் மேலும் பிரபலமாகியது. ஆனாலும், கிமோனோவுக்கு மேல் ஒரு அரை மேலங்கியையும் அணிந்தனர்.
முரோமோச்சி காலத்தில், முன்னர் உள்ளாடைபோல் அணியப்பட்ட கிமோனோவை அதற்கு மேல் அணியப்பட்டு வந்த பிரிபாவாடை வகையைச் சேர்ந்த அக்காமா (hakama) எனப்படும் உடை இல்லாமலேயே அணியத் தொடங்கினர். ஏடோ காலத்தில் கைகளின் நீளமும் அதிகரித்தது. குறிப்பாக, மணமாகாத பெண்கள் நீளமான கைகளுடன் கூடிய கிமோனோக்களை அணிந்தனர். ஒபி எனப்பட்ட பட்டியும் அகலமாகியதுடன், பல்வேறு வகையான முடிச்சுக்களும் பயன்பாட்டுக்கு வந்தன.[3] இக்காலத்தின் பின்னர் ஆண், பெண் இரு பாலாரதும் கிமோனோக்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கிமோனோக்களைத் திறமையாகத் தைப்பது ஒரு கலையாகக் கருதப்படுகிறது.[3]
கிமோனோக்களுக்குப் பதிலாக இன்று, வசதி கருதி மேல் நாட்டு ஆடைகள் அல்லது யுகத்தா எனப்படும் ஆடையையே அன்றாடத் தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். பேரரசர் மெயிசியின்[5] ஆணையைத் தொடர்ந்து காவல் துறை, தொடர்வண்டிப் பாதையில் வேலை செய்வோர், ஆசிரியர் போன்றோர் மேனாட்டு உடைகளுக்கு மாறினர். ஆண் பிள்ளைகளுக்கான பள்ளிச் சீருடைகளும் மேனாட்டுப் பாணியிலேயே அமைந்தன. 1923ன் பெரும் காந்தோ நிலநடுக்கத்தின் பின்னர், கிமோனோ அணிந்தபடி ஓடுவது கடினமாக இருந்ததால், கிமோனோ அணிந்தவர்களே பெரும்பாலும் கொள்ளைக்காரர்களிடம் அகப்பட்டுப் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர். டோக்கியோ பெண்கள் மற்றும் சிறுவர் ஆடை உற்பத்தியாளர் சங்கம் (東京婦人子供服組合) மேனாட்டு ஆடைகளைப் பிரபலம் ஆக்கியது. 1920 இக்கும் 1930 இக்கும் இடைப்பட்ட காலத்தில், பெண் பிள்ளைகளின் பள்ளிச் சீருடையாக இருந்த அக்காமாவுக்குப் பதிலாக, பிரித்தானிய அரச கடற்படையினரின் சீருடையைத் தழுவிய சேரா பூக்கு என அழைக்கப்பட்ட சீருடை புழக்கத்துக்கு வந்தது. 1932 இல் சிரோக்கியாவின் நிகோன்பாசி வணிக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தே கிமோனோ அன்றாட உடையாகப் பயன்பட்டுவதைக் கைவிட ஊக்கியாக அமைந்ததாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "''kimono'' from". Merriam-Webster. 2010-08-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
- ↑ Hanami Web – Inside Japan. All rights reserved. "What Kimono Signifies". HanamiWeb. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Dalby, Liza (2001). Kimono: Fashioning Culture. Seattle: University of Washington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-98155-0. இணையக் கணினி நூலக மைய எண் 46793052.
- ↑ Sharnoff, Lora (1993). Grand Sumo. Weatherhill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8348-0283-X.
- ↑ 1871(明治5)年11月12日太政官布告399号
வெளி இணைப்புகள்
தொகு- The Canadian Museum of Civilization - Landscape Kimonos of Itchiku Kubota
- Tokyo National Museum பரணிடப்பட்டது 2004-12-05 at the வந்தவழி இயந்திரம் Look for "textiles" under "decorative arts".
- Kyoto National Museum: Textiles பரணிடப்பட்டது 2007-11-07 at the வந்தவழி இயந்திரம்
- The Costume Museum: Costume History in Japan
- Kimono Fraise; includes directions on how to put on a kimono
- Berber Kimono; Kimono artist in The Netherlands
- Immortal Geisha Forums; Comprehensive Resource on Vintage and Modern Kimono Culture பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம்
- Love Kimono!; A lot of knowledge of kimono with pictures. பரணிடப்பட்டது 2009-09-18 at the வந்தவழி இயந்திரம்