கிரிசுக் கத்தி

கிரிசு (Kris) என்பது மலாய் தீவுக் கூட்டங்களில் வாழும் மக்களின் பாரம்பரியக் கத்தியாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் முன்னர் இது பயன்படுத்தப்பட்ட போதிலும் தற்போது இது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், இலங்கையின் தென்பகுதியில் உள்ள சில அருங்காட்சியகங்களிலும் ஒரு சில தனியாரிடமும் இக்கத்தி தற்போதும் இருக்கின்றது.[1]

Kris from Yogyakarta - Dapur Carubuk

இது 600 ஆண்டுகள் பழமை மிக்கது. கிரிசுக் கத்தியை மற்ற கத்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அது வடிவத்தில் அதிகளவில் வேறுபட்டு இருக்கும்; நெளிவு நெளிவாக முறுக்கிய படியான அமைப்பைக் கொண்டிருக்கும்.

இது இரும்பினால் செய்யப்படுகிறது. கிரிசுக் கத்தியை மூன்று பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். நுனிப் பகுதி, நடுப் பகுதி மற்றும் பிடிப் பகுதி. இது அளவில் சிறியதாக இருப்பினும் எடை சற்று அதிகமாகவே இருக்கும்.

தோற்றம்

தொகு

கிரிசு என்கின்ற சொல் பண்டைய சாவக மொழியிற் கத்தியாற் குத்துவதைக் குறிக்கும் சொல்லான ஙிரிசு எனும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். கிரிசுக் கத்தி முதலில் சாவா தீவில் தோன்றியது என்றும் பின்னர் அது மெல்ல மெல்ல மலாய் தீவு கூட்டம் எனப்படும் தற்போதய தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்சு நாடுகளுக்கு பரவியது என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறனர் .

பயன்பாடு

தொகு

கிரிசுக் கத்தியை மலாய் மக்கள் போர்ச் சமயங்களில் பயன்படுத்தியதற்கான எந்தவொரு சான்றுமில்லை. மாறாக கூர் வாள்களும், அருவாக் கத்திகளும் மற்றும் ஈட்டிகளும் மலாய் மக்களால் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகிறன.

தொடக்க காலங்களில் கிரிசுக் கத்தியை மலாய் மக்கள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தினாலும் பின்னாளில் சிலாட் எனும் தற்காப்புக் கலைக்குரிய கருவியாக அது மருவப்பட்டது. அத்துடன் நிற்காமல் கிரிசுக் கத்தி ஆண்களின் அலங்காரப் பொருளாகவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலாய் மன்னர்கள் கூடக் கிரிசுக் கத்தியை செங்கோலுக்குப் பதிலாகவும் தங்களின் ஆட்சியின் அடையாளமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

கிரிசுக் கத்தியை பயன்படுத்தும் ஆண்கள் அதை தங்களின் இடுப்பின் ஓரமாக செருகி வைப்பார்கள். அரசர்களைச் சந்திக்கும் பொழுது அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பக்கவாட்டில் செருகியிருக்கும் கிரிசுக் கத்தியை பின்புறமாகச் செருகி வைப்பார்கள்.

பண்பாடு

தொகு

சாவக மக்கள் தம் பண்பாட்டின் ஒரு சிறப்பான பகுதியாகவே இக்கத்தியையும் கருதுகின்றனர். திருமண வைபவங்களின் போது தம் பண்டைய மரபைக் காட்டும் அணிமணிகளைக் கொண்டும் கிரிசுக் கத்தி போன்றவற்றை அணிந்தும் காட்சி தருவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். யோக்யாகார்த்தா சுல்தானகம் மற்றும் சுராகார்த்தா சுல்தானகம் என்பன இன்றும் இப்பண்பாட்டைக் கொண்டாடுகின்றன.

நம்பிக்கை

தொகு

மலாய் இதிகாசங்களில் பல இடங்களிலும் கிரிசுக் கத்தியை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. மேலும் பல இடங்களில் கிரிசுக் கத்தியை அதிகபட்சமாகவே மிகைபடுத்தப்பட்டுள்ளன. அதிலும் மலாய் மக்களிடையே தமேங் சாரி எனப்படும் கிரிசுக் கத்தியை பற்றிய புனைவு கதை என்பது மிக பிரபலம்.

மேற்கோள்

தொகு
  1. James Richardson Logan (1853). The Journal of the Indian Archipelago and Eastern Asia, Volume 7. Miss. Press. p. 281.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசுக்_கத்தி&oldid=3573947" இலிருந்து மீள்விக்கப்பட்டது