கிருஷண் காந்த்

1997 முதல் 2002 வரையில் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்
(கிரிஷன் காந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிருசண் காந்த் (Krishan Kant; பெப்ரவரி 28,1927[1] - சூலை 27,2002) 1997ஆம் ஆண்டு முதல் தனது மரணம் வரை பத்தாவது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர்.

கிருஷண் காந்த்

காந்த் லாகூரில் மாணவராக இருந்தபோதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் இளமையிலேயே பங்குபெற்று அரசியலில் படிப்படியாக முன்னேறி நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தியின் கட்சியில் "இளந் துருக்கியர்கள்" என இனம் காணப்பட்ட அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையை ஆதரிக்காததால் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.1976ஆம் ஆண்டு செயப்பிரகாச நாராயணன் தலைமையேற்ற மனித உரிமைகள் அமைப்பான "குடிமக்கள் உரிமைகளுக்கும் சனநாயக உரிமைகளுக்குமான மக்கள் சங்கத்தின்" (Peoples' Union of Civil Liberties and Democratic Rights) அமைப்புப் பொது செயலாளராக இருந்துள்ளார்.1980 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

நெருக்கடிநிலை காலத்தை அடுத்து மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்ற கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கு மது லிமாயியுடன் காரணமானார். ஜனதா கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் இரண்டு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பது தடைசெய்யப்பட வேண்டும் என்ற இவரது நிலை ஜனதா கட்சியில் இருந்த முந்தைய ஜனசங்க உறுப்பினர்களைக் குறி வைத்தது; வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்களாகவும் அவர்கள் தொடர்ந்து வந்தனர். இந்தப் பிரச்சினையால் 1979ஆம் ஆண்டு மொரார்ஜி அரசு கவிழ்ந்து கூட்டணியும் உடைந்தது.[2]

பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் பகுப்பாய்வு கழகத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய காந்த் இந்தியா அணுகுண்டு சோதனைகள் நடத்துவதை ஆதரித்தவர்.

1989ஆம் ஆண்டு வி. பி. சிங் தலைமையிலான அரசு இவரை ஆந்திர ஆளுநராக நியமித்தது.1996ஆம் ஆண்டு அப்போதாய தமிழக கவர்னர் சென்னா ரெட்டி மரணம் அடைந்தபின் இவர் தற்காலிக ஆளுநராக நியமனம் பெற்றார். மிகநீண்ட காலம் தொடர்ந்து ஆளுநராகப் பணியாற்றியவர் என்னும் சாதனையுடன் ஏழு ஆண்டுகள் தாம் குடியரசுத் துணைத் தலைவராக பணிஉயர்வு பெறும்வரை இப்பொறுப்பில் இருந்தார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சியும் ஐக்கிய முன்னணியும் இணைந்து இவர் குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க நியமித்தனர். இத்தேர்தலில் வென்று தமது பதவிக்காலம் முடிவதற்கு குறைந்த நாட்கள் இருக்கையில் தில்லியில் மரணமடைந்தார். பதவியில் இருக்கும்போதே மரணமடைந்த ஒரே குடியரசுத் துணைத் தலைவர் இவரேயாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. கிரிஷ்ண காந்த்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "In Pursuit of Lakshmi: The Political Economy of the Indian State", By Lloyd I. Rudolph and Susanne H. Rudolph, University of Chicago Press, 1987. pp 457-459.

வெளியிணைப்புகள்

தொகு
அரசு பதவிகள்
முன்னர் ஆந்திர ஆளுநர்
1990 – 1997
பின்னர்
அரசியல் பதவிகள்
முன்னர் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
ஆகத்து 21, 1997-சூலை 27, 2002
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷண்_காந்த்&oldid=3770669" இலிருந்து மீள்விக்கப்பட்டது