கிருதியை அலங்கரிக்கும் அணிகள்
கிருதியை அலங்கரிக்கும் அணிகள் எனப்படுபவை அனுபல்லவி இல்லாத கிருதிகளுக்கு அழகு செய்யும் இசையணிகள் ஆகும்.
பொதுவாக கிருதிகள், கீர்த்தனைகள் போன்ற இசை வடிவங்களுக்கு இன்றியமையாத அம்சங்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகும். சில சமயங்களில் அனுபல்லவி இல்லாத கிருதிகளுக்கு அழகு செய்யும் அம்சங்கள் பல உண்டு. அவை இசை அணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இசையணிகளாவன: கமகம், சங்கதி, மத்திமகால சாகித்தியம், சிட்டைஸ்வரம், ஸ்வர சாகித்தியம், ஸ்வர அட்சரம், சொற்கட்டு ஸ்வரம், சொற்கட்டு சாகித்தியம், கோபுச்சயதி, சுரோத்தவாகயதி, பிராசம், யமகம், மணிப்பிரவாளம் ஆகியன.
கமகம்
தொகுதென்னக இசையின் சிறப்பியல்புகளில் ஒன்று கமகம். இந்த கமகம் இல்லாத பாடல் நீரில்லாத ஆறு என்றும், நிலவில்லாத இரவு என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இன்று சாதாரணமாக 10 வகையான கமகங்கள் கையாளப்படுகின்றன.
எடுத்துக்காட்டுக்கள் :- ஸ கா ம ப நீ ஸ் - என்ற தன்யாசி இராகத்தின் காந்தாரத்தையும் நிஷாதத்தையும் நீட்டியும் அழுத்தியும் பிடிக்கும் போது அதை கம்பித கமகம் எனக் கூறுவர்.
சங்கதி
தொகுசங்கதி என்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் ஒன்றிரண்டு குறிப்பிட்ட ஆவர்த்தனங்களை எடுத்துக் கொண்டு அவற்றை இராக வடிவம், சொல்நயம் விளங்கப் பலமுறை பல்வேறு விதமாகப் பாடுதலே ஆகும். சாதாரணமாக இவற்றைக் கிருதிகளை இயற்றியோரே அமைத்திருப்பர். எடுத்துக்காட்டுக்கள் :- தாரினி தெலுசு (சுத்தசாவேரி - ஆதி - தியாகராஜர்)
மத்திமகால சாகித்தியம்
தொகுசௌக்க நடையில் பொதுவாகச் செல்லும் கிருதிகளுக்கு அணியாக விளங்குவது மத்திமகால சாகித்தியம் ஆகும். இது கிருதியின் ஏதாவது ஒரு அங்கத்தின் முடிவில் அமைந்திருக்கும். முத்துஸ்வாமி தீஷிதரின் பல கிருதிகள் மத்திம கால சாகித்தியத்தைக் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டுக்கள் :- "ஆடிக்கொண்டார்" (மாயாமாளவகௌளை - ஆதி - முத்துத் தாண்டவர்) இங்கு சரணத்தில் மத்திமகால சாகித்தியம் காணப்படும்.
சிட்டை ஸ்வரம் (விலோம சிட்டைஸ்வரம், மகுடஸ்வரம்)
தொகுசிட்டை ஸ்வர்ம், கிருதிகள் சிலவற்றில் அனுபல்லவிக்குப் பின்னர் தாள ஆவர்த்தனத்தையொட்டி வரும். அழகான சுவரக்கோர்வையாகும். அனுபல்லவி பாடிய பின் சிட்டை ஸ்வரத்தை முதல் காலத்திலும் சரணம் பாடிய பின் அதே சிட்டை ஸ்வரத்தை இரண்டாம் காலத்திலும் பாடுவது வழக்கம். அல்லது இருமுறையும் மத்திமகாலத்தில் பாடுவதும் உண்டு.
விலோம சிட்டைஸ்வரம் எடுத்துக்காட்டு :- "தாயே திரிபுரசுந்தரி" (சுத்தசாவேரி - கண்ட சாபு - பெரியசாமி தூரன்)
மகுட ஸ்வரம் எடுத்துக்காட்டு :- "பாவயாமி ரகுராமம்" (இராகமாலிகை) (சாவேரி - ரூபகம் - ஸ்வாதித்திருநாள் மகாராஜா & செம்மங்குடி சிறீநிவாச அய்யங்கார்.) க்ரிஸ்தா ; ரிஸ்தா, ஸ் ; தா; க்ரி நிதமகரிஸத//
ஸ்வர சாகித்தியம்
தொகுஇந்தப்பகுதி கிருதி இயற்றியவரின் திறமையை நன்கு காட்டுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அழகாக அமைக்கப்பட்ட ஸ்வரக்கோர்வைகளிற்கு பொருத்தமாக இயற்றப்பட்ட சாகித்தியமாகும். ஸ்வர சாகித்தியத்தின் ஸ்வரப் பகுதியை அனுபல்லவியின் முடிவிலும், சாகித்தியப் பகுதியைச் சரணத்தின் முடிவிலும் பாடுவது வழக்கம்.
எடுத்துக்காட்டு :- "ஜகதீஸ்வரி" (மோகனம் - ஆதி - திருவாரூர் இராமசாமிப் பிள்ளை)
ஸ்வர அட்சரம்
தொகுகிருதிகளில் சாகித்திய எழுத்தும் ஸ்வர எழுத்தும் ஒன்றாக வருமானால் அதற்கு ஸ்வர அட்சரம் என்று பெயர்.
எடுத்துக்காட்டு :- நவராகமாலிகை வர்ணத்தில் பா தா ஸா ப த ஸ
சொற்கட்டு ஸ்வரம், சொற்கட்டு சாகித்தியம்
தொகுசில கிருதிகளில் ஏதாவது ஓர் அங்கத்தின் முடிவில் ஸ்வரங்களும், சாகித்தியமும், ஜதிகளும் சேர்ந்து வருவதுண்டு. இவ்வாறு சேர்ந்து வரும் பகுதிகளை சொற்கட்டு ஸ்வரம் என்கிறோம். இது பெரும்பாலும் கணபதி, நடராஜர், கிருஷ்ணன் முதலிய நாட்டிய சம்பந்தமான தெய்வங்களைப் பற்றிய இசை வடிவங்களில் காணப்படும். இவற்றைப் பாடும் போது விறுவ்றுப்பும், கம்பீர உணர்வும் ஏற்படுகின்றது.
எடுத்துக்காட்டு :- "ஆனந்த நடனப்பிரகாசம்" (கேதாரம் – சாபு – முத்துசுவாமி தீட்சிதர்)
சொற்கட்டுப் பகுதி முழு சாகித்தியமாகவே பொருள் கொடுக்குமானால் அதை சொற்கட்டு சாகித்தியம் என்கிறோம்.
"ஆடியபாதா" (சங்கராபரணம் - ஆதி - கோபாலகிருஷ்ண பாரதியார்) என்ற கிருதியில் கீழ்காணும் வரிகள் அருமையான சொற்கட்டு சாகித்தியத்தைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டு :- "நந்தி மத்தளம் போடவும் தகும் தகும் தகும் தகும் என்று நடனம்"
கோபுச்சயதி, சுரோத்தவாகயதி
தொகுகோபுச்சயதி என்பது பசுவின் வாலைப் போல ஆரம்பத்தில் அகலமாகவும் பின் குறுகிக் கொண்டே போகும் சாகித்திய அமைப்பு ஆகும்.
எடுத்துக்காட்டு :- "தியாகராஜா" (ஆனந்த பைரவி - ஆதி - முத்துசுவாமி தீஷிதர்)
தியாகராஜ யோக வைபவம்
யாகராஜ யோக வைபவம்
ராஜ யோக வைபவம்
யோக வைபவம்
வைபவம்
பவம்
வம்
சுரோத்தவாகயதி என்பது ஆற்றைப் போல தொடக்கத்தில் குறுகியும் பின் விரிந்து கொண்டே போகும் சாகித்திய அமைப்பு ஆகும். எடுத்துக்காட்டுக்கள் :- "தியாகராஜா" (ஆனந்த பைரவி - ஆதி - முத்துஸ்வாமி தீஷிதர்)
சம்
பிரகாசம்
சுவரூப பிரகாசம்
சகல சுவரூப பிரகாசம்
சகல தத்வ சுவரூப பிரகாசம்
சிவசக்தி ஆதி சகல தத்வ சுவரூப பிரகாசம்
"அடுத்தானை" (எதுகுலகாம்போஜி - திரிபுடை) எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் கீழ்க் கண்டவாறு உள்ளது.
கொடுத்தானை
பதம் கொடுத்தானை
பாசுபதம் கொடுத்தானை
அர்ச்சுனர்க்கு பாசுபதம் கொடுத்தானை
பிராசம்
தொகுஒரு பாடலின் ஒவ்வொரு வரியிலும் வரைமுறையாக எந்த ஓர் எழுத்து அல்லது எழுத்துக்கள் திரும்பத் திரும்ப இனிமையுடன் ஒலிக்கின்றதோ அவற்றுக்கு பிராசம் என்று பெயர். இது மூன்று வகைப் படும்.
1. ஆதிப்பிராசம் (அட்சரப் பிராசம்) :- இதை முதல் அழகு என்றும் எதுகை என்றும் அழைப்பதுண்டு. எடுத்துக்காட்டு :- "தோடுடைய செவியன்" (சம்பந்தர் தேவாரம்) இப்பாடலில் "டு" என்ற எழுத்து ஆதிப்பிராசம் அல்லது துவி அட்சரப் பிராசம் (முதல் அழகு) என அழைக்கப்படுகின்றது.
2. அனுப்பிராசம் :- இதற்கு இடையழகு எனப்பெயர். எடுத்துக்காட்டு :- "எதுட நிலசிதே" (தியாகராஜர் கிருதி - சங்கராபரணம் - ஆதி) இப்பாடலின் சரணத்தில்,
"தரான தொரதனி பராகு நாயெட
நுராம ஜேசிதே சுராசுருலுமே
துராமி புடு ஈஹரா மிதனமே..."
"ரா" என்ற எழுத்து இடையிடையே வந்து இனிமையாக ஒலிப்பதால் இது அனுப்பிராசம் அல்லது இடையழகு என அழைக்கப்படுகின்றது.
3. அன்னியப்பிராசம் :- இதற்கு முடிவழகு என்று பெயர். எடுத்துக்காட்டு :- "கருணாசாகரா" (மாயூரம் வேதநாயகம்பிள்ளை - அடாணா - ஆதி)
"நிச்சய ஞானமே நினது ஸ்வாதீனம்
நீ தராவிடில் எனக்கேது மெய்ஞானம்
அச்சமில்லாமலே அபயப் பிரதானம்...."
மேலே கொடுக்கப் பட்ட பாடலின் ஒவ்வொரு வரியிலும் இறுதியிலும் வரும் "னம்" என்ற எழுத்துக்கள் அன்னியப்பிராசம் அல்லது முடிவழகு எனப்படுகின்றது.
யமகம்
தொகுஒரு பாடலின் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுடன் பயன்படுத்தப்பட்டால் அதற்கு யமகம் அல்லது மடக்கு என்று பெயர். எடுத்துக்காட்டு :- "தெலிசிராம" (தியாகராஜர் கிருதி - பூர்ணச்சந்திரிக்கா - ஆதி) இக்கீர்த்தனையில் "ராமா" என்ற சொல் பெண்கள், பிரம்மன் என்ற இரு பொருளைத் தருகின்றது.
மணிப்பிரவாளம்
தொகுஒரு பாடலில் இசை யாப்பிலக்கண ஒழுங்குகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு மணிப்பிரவாளம் என்று பெயர். எடுத்துக்காட்டு :- "வெங்கடாச்சலபதே" (முத்துஸ்வாமி தீட்சிதர் - காபி - ஆதி) இங்கு பல்லவியிலும், அனுபல்லவியிலும் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முடிவுரை
தொகுமேலே கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் பல்வேறு இசைப் பாடலாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிருதிகளையும் கீர்த்தனைகளையும் நன்கு ஒளிரச் செய்யும் அணிகள்.