கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் என இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் ரைட் லவ்லிவுட் விருதைப் பெற்றார். 2020 இல் இந்திய அரசின் பத்ம பூசண் விருதைப் பெற்றவர்.
பிறப்பு மற்றும் கல்வி
தொகு1926 ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் குடும்பத்தில் ராமசாமி-நாகம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவருடன் சேர்த்து மொத்தம் 12 குழந்தைகள். பட்டிவீரன்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் அங்கு ஆங்கில கல்வி பயின்றார். டிவிஎஸ் ஐயங்காரின் மகளான செளந்திரம்மாளின் இலவச இல்லத்தில் சேர்ந்தார். அதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். அப்போது மதுரை மாவட்டத்தின் முதல் பெண் பட்டதாரியாக கிருஷ்ணம்மாள் இருந்தார்[1][2]
இளமைக்காலம்
தொகுஏழ்மை மற்றும் சமூக நீதி பற்றிய ஆர்வம் வர இவரது தாயார் நாகம்மாளின் பேறுகால இன்னல்கள் காரணமாக இருந்துள்ளன.[3] 1946 இல் காந்தி மதுரை வந்தபோது அவரால் ஈர்க்கபட்டு காந்தியம் மற்றும் சர்வோதய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அங்கு சர்வோதயாவில் பணி செய்த சங்கரலிங்கம் ஜெகன்னாதனைக் கண்டார், பின்னாளில் அவரது மனைவியானார். சங்கரலிங்கம் ஜெகன்னாதன் வளமையான குடும்பத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும் 1930ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்க அறைக்கூவலுக்கு செவிமெடுத்து அதில் பங்கு பெற்றார்.[1] ஒரு கட்டத்தில் கிருஷ்ணம்மாள் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார்.[3] மேலும் அவர் 1958ல் மார்டின் லூதர் கிங்கை சந்தித்துள்ளார்.[4] 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்.[1] சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த சங்கரலிங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் 1950ல் சூலை மாதம் 6 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டனர்.[3]. பின்னர் அவர் 2006ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தின் பவள விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[5]
நிலமற்றவர்களுக்கு நிலம்
தொகு1950 மற்றும் 1952 இடையே இரண்டு ஆண்டுகளாக சங்கரலிங்கம் ஜெகநாதன் வட இந்தியாவில் வினோபா பாவே பூமிதான இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது ஆறில் ஓரு பங்கினை நிலமற்றவர்களுக்கு தங்கள் நிலங்களிலிருந்து நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். இதற்கிடையில் கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.
செயல்பாடுகள்
தொகுகிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள்.[6]
நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்" (லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம்
தொகுகிருஷ்ணம்மாள்-ஜகன்னாதன் தம்பதியினரின் சேவையை மையக் கருத்தாகக் கொன்டு, அரவிந்த் மாக் இயக்கத்தில் சைய்யது யாஸ்மீனால் தயாரிக்கப்பட்ட 'தட் பையர்டு ஸோல்' ('That Fired Soul') என்ற குறும்படம் 2014 சென்னை சர்வதேச குறும்பட விழாவில் திரையிடப்பட்டது.
பெற்ற விருதுகள்
தொகு- சுவாமி பிரணவானந்தா அமைதி விருது(1987)
- ஜம்னலால் பஜாஜ் விருது (1988
- பத்மஸ்ரீ விருது (1989)
- பகவான் மகாவீர் விருது (1996)
- சம்மிட் பௌன்டேசன் விருது --சுவிட்சர்லாந்து (1999)
- ஓப்ஸ் பரிசு --சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
- மாற்று நோபல் பரிசு
- ரைட் லைவ்லிஹூட் விருது
- பத்ம பூசண்[7] (2020)
உசாத்துணைகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Krishnammal and Sankaralingam Jagannathan / LAFTI (India) பரணிடப்பட்டது 2008-11-17 at the வந்தவழி இயந்திரம் – on Right Livelihood Awards' website
- ↑ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பத்தகம், பிரமிளா கிருஷ்ணன்,
- ↑ 3.0 3.1 3.2 Gandhian' couple get alternate Nobel பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம் – OneIndia.com
- ↑ Krishnammal Jagannathan, Nov. 5, 2008 பரணிடப்பட்டது 2010-07-09 at the வந்தவழி இயந்திரம் – SDSU College of Health and Human Service
- ↑ Congressmen re-enact Salt Satyagraha march பரணிடப்பட்டது 2006-08-28 at the வந்தவழி இயந்திரம் The Hindu
- ↑ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: நிலமற்றவர்களுக்கு நிலம் வாங்கப் போராடிய தமிழ் பெண் செயற்பாட்டாளர்
- ↑ கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது
8. சுதந்திரத்தின் நிறம் (கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வாழ்க்கை வரலாறு நூல்) - லாரா கோப்பா, தன்னறம் வெளியீடு.