குடிசை
குடிசை என்பது சூழலில் கிடைப்பனவும், நீண்ட காலம் நிலைத்து இராதவையுமான பொருட்களால் அமைக்கப்படும் சிறிய இருப்பிடங்களைக் குறிக்கும். குடிசைகள் மனிதரின் இருப்பிடக் கட்டிடங்களின் மிகவும் பழைய வளர்ச்சிநிலை ஒன்றாக இருப்பினும், இன்றும் இவை உலகின் பல பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பெயர்
தொகுகுடிசை என்னும் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் காணப்பட்டவிட்டாலும், ஒத்த வேர்ச் சொற்களில் இருந்து பிறந்த குடில் என்னும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில், மக்கள் வாழ்ந்த குடிசைகளை ஒத்த இருப்பிடங்கள் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்பட்டன. இவை பல்வேறு வகையான குடிசைகளைக் குறித்தன எனலாம். குடில், குரம்பை, குறும்பு போன்றவை சங்க காலத்தில் குடிசை வகைகளைக் குறித்த சொற்களாகும்[1]. குடங்கர், குடிசல், குடிஞை, குடீரம், கைநிலை, சாளை, சிறகுகுடில், தொக்கடி, படலிடம், பண்ணை, புல்வீடு, மயடம், மாடம், குடிசில், என்னும் சொற்களும் குடிசையோடு ஒத்த பொருள் கொண்ட சொற்களாக, மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் காணக்கிடக்கின்றன. இவற்றுட் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கிழந்துவிட்டன. ஆனால், குடிசை என்னும் சொல் ஒரு பொதுவான சொல்லாகத் தற்காலத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
வரலாறு
தொகுதொல்பழங்கால மனிதன் இயற்கையான குகைகளிலிருந்து வெளியேறித் தாங்களாகவே தமது வாழிடங்களை அமைக்க முற்பட்ட தொடக்க காலங்களில் இவ்வாழிடங்கள் விரைவில் அழியக்கூடிய பொருட்களால் ஆனவையாகவே இருந்திருக்கும். அக்கால மனிதர் இன்னும் வேட்டையாடுபவர்களாகவும், உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்பவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் இடத்துக்கிடம் அலைந்து திரிந்தனர். அதனால் முறையான வாழிடங்களை அமைத்து இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு. வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர் மனிதர் ஓரிடத்தில் தொடர்ந்து வாழத் தலைப்பட்டபோது, தங்களுக்கான வாழிடங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இத்தொடக்ககால வாழிடங்கள் குடிசைகளே. முதலில் இவை ஏற்கனவே அறிமுகமானவையும் விரைவில் அழியக்கூடியனவுமான பொருட்களினால் ஆனவையாக இருந்தன. இதனால் இவற்றின் எச்சங்கள் எதுவும் தொல்லியல் சான்றுகளாகக் கிடைக்கவில்லை.
அண்மைக் கிழக்குப் பகுதிகளில் நத்தூபியப் பண்பாட்டு மக்கள் உலர் கற்கட்டுமான முறையில் அமைக்கப்பட்டவையும் ஒரு பகுதி நிலத்துக்குக் கீழ் அமைந்தவையுமான குழி வீடுகள் எனப்படும் குடிசைகளைக் கட்டி வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன[2]. வட்டவடிவம் கொண்ட இவை கிமு 9000 க்கு முற்பட்டவை. இப்பகுதியில் கிமு 9000 க்கும் கிமு 7000 க்கும் இடைப்பட்ட காலத்தில் குழைத்த குழைமண் கற்களைக் கொண்டு குடிசைகள் அமைக்கப்பட்டன. இக்காலத்திலேயே குடிசைகள் செவ்வகத் தள அமைப்பைக் கொண்டவையாகவும் மாற்றம் பெற்றன[2]. இப்பகுதியில் காணப்படும் குடிசைகள் தொடர்பான தொல்லியல் எச்சங்களே தற்போது அறியப்பட்டவற்றுள் மிகப் பழையன. எனினும், இது போன்ற குடிசை அமைப்புக்களும் படிவளர்ச்சியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கால கட்டங்களில் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளன.
தமிழ்நாட்டிலும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்விடத் தடயங்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தில் மக்கள் வட்ட வடிவம், முட்டை வடிவம் அல்லது நீள்வட்ட வடிவம் கொண்ட குடிசைகளை அமைத்து வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[3]. தொல்லியல் சான்றுகளின்படி சங்ககாலத்துக்கு முந்திய தமிழ் நாட்டில், மரம் மற்றும் இலை தளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குடிசைகளும், குழி தோண்டிக் கற்கள் அடுக்கிக் கட்டிய குடிசைகளும் இருந்ததாகத் தெரிகிறது[4]. இக் குடிசைகளின் கூரைகள் பற்றியோ அல்லது அவற்றைத் தாங்கிய அமைப்பு முறை பற்றியோ அறிந்து கொள்வதற்கான போதிய தொல்லியல் தகவல்கள் கிடைக்காவிட்டாலும். வட்டமான தளவடிவத்துக்கு நடுவில் ஒற்றைத் தூண் நட்ட குழிகள் இருப்பதால்[5] கூரை அதன் நடுவில் முதன்மையாகத் தாங்கப்பட்டமை தெரிகிறது இதனால் கூரை கூம்பு வடிவம் கொண்டதாக இருந்திருக்கும் என ஊகிக்க முடியும்.
அமைப்பு
தொகுதற்காலக் குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை. குடிசைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் அவை அமையும் சுற்றாடலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றன. குடிசைகள் மிகப்பல வேறுபட்ட வடிவங்கள் உடையவையாகக் காணப்படுகின்றன. தட்பவெப்பநிலை, கட்டிடப்பொருட்கள், பயன்படுத்தும் தொழினுட்பம், புவியியல் அம்சங்கள், பாதுகாப்புத் தேவைகள், பொருளாதார நிலை, பண்பாடு என்பன குடிசைகளுக்கு வடிவம் கொடுப்பதில் பங்காற்றுகின்றன. இவற்றுள் பண்பாடே தலையாய இடம் வகிக்கின்றது என்று "அமாசு ராப்பபோர்ட்" (Amos Rapoport) என்பவர் தனது ஆய்வுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார்[6].
குறிப்புக்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- சண்முகதாஸ், மனோன்மணி., பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
- பவுன்துரை, இராசு., தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.
- Amos Rapoport, House Form and Culture, Foundations of Cultural Geography Series, Prentice-Hall Inc, New Jersy, 1969.
- Cruickshank, Dan. (editor), Sir Banister Fletcher's A History of Architecture, CBS Publishers and Distributors, New Delhi, India, 1996 (First edition, 1896)